நியூசிலாந்துடன் 2-வது டி20: இந்திய அணி அபார வெற்றி

பதிவு செய்த நாள் : 08 பிப்ரவரி 2019 14:48

ஆக்லாந்து,

    நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. ஆக்லாந்தில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி தோற்றும் இதில் யாரையும் நீக்கவில்லை. அதே அணியுடன் களமிறங்கியது இந்திய அணி.

முதல் இரு ஓவர்கள் வரை ஒரு பவுண்டரியும் அடிக்கப்படவில்லை. மூன்றாவது ஓவரில் முதல் டி20 ஆட்டத்தின் கதாநாயகனான சைஃபர்ட் பவுண்டரியும் சிக்ஸரும் அடுத்தடுத்த பந்துகளில் அடித்தபோது இந்திய ரசிகர்களுக்கு லேசாக நடுக்கம் ஏற்பட்டது. ஆனால் புவனேஸ்வர் வீசிய அடுத்தப் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து 12 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு வில்லியசம்சன் தொடர்ச்சியாக பவுண்டரிகளை அடிக்க ஆரம்பித்தார். 1 சிக்ஸர் அடித்த நிலையில் தொடக்க வீரர் மன்ரோ 12 ரன்களில் கிருனாள் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

6-வது ஓவரின் கடைசிப் பந்தில் கிருனாள் பாண்டியாவின் பந்தை எதிர்கொண்டார் மிட்செல். அப்போது, பந்து காலில் பட்டதால் அவர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். உடனே அவர் கள நடுவரின் முடிவை டிஆர்எஸ் மூலம் மேல்முறையீடு செய்தார். அப்போது காண்பிக்கப்பட்ட ஹாட்ஸ்பாட் காட்சியில் பந்து பேட்டின் பின்னால் உரசிச் சென்றது நன்குத் தெரிந்தது. இதனால் கள நடுவரின் முடிவை மூன்றாம் நடுவர் மாற்றியமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்னிக்கோ காட்சியில் அதுபோல துல்லியமாக வெளிப்படவில்லை. பந்து பேட்டை உரசாததுபோலவும் இருந்தது. இதனால் மூன்றாம் நடுவருக்கு ஹாட்ஸ்பாட் காண்பித்த காட்சியில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து களநடுவரின் முடிவை ஏற்கும் விதத்தில் மிட்செல் ஆட்டமிழந்ததாக அறிவித்தார். இந்தக் காட்சிகளை மைதானத்தில் உள்ள பெரிய திரையில் பார்த்த மிட்செலும் கேப்டன் வில்லியம்சனும் ஆச்சர்யமடைந்தார்கள். உடனே இதுகுறித்து நடுவர்களிடம் முறையிட்டார்கள். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் பரபரப்படைந்தார்கள். இந்த நிலைமையில் இந்திய வீரர்களும் குழப்பமடைந்தார்கள். நடுவர்கள் ஒருவருக்கொருவர் விவாதித்தார்கள். மூன்றாம் நடுவர் முடிவு தெரிவித்தபிறகு அதை மாற்றமுடியாது என்பதால் மிட்செல்லை இறுதியாக வெளியேறச் சொன்னார்கள்.

அடுத்தப் பதினோறாவது பந்தில் கிருனாள் பந்துவீச்சில் 20 ரன்களில் ஆட்டமிழந்தார் வில்லியம்சன். 10 ஓவர்களின் முடிவில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 60 ரன்களை எடுத்திருந்தது. இதனால் அந்த அணி அடுத்த சில ஓவர்களிலும் நிதானமாக விளையாடி விக்கெட்டுகளைத் தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பிறகுதான் கிராண்ட்ஹோமின் விளாசல் தொடங்கியது. சாஹல் வீசிய 11-வது ஓவரில் முதல் மூன்று பந்துகளில் 2 சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்தார். இன்று சிறப்பாகப் பந்துவீசி வந்த கிருனாள் பாண்டியாவின் ஓவரிலும் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்கள் அடித்தார். எனினும் இந்த அதிரடி ஆட்டம் அடுத்தச் சில ஓவர்களுக்குக் குறைந்தது. 28 பந்துகளில் 4 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்த கிராண்ட்ஹோம் 50 ரன்களில் பாண்டியா பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் 10 ஓவர்களில் சுமாராக விளையாடிய நியூஸிலாந்து அணி 15-வது ஓவரின் முடிவில் 121 ரன்கள் எடுத்து வலுவான நிலையை அடைந்ததற்கு கிராண்ட்ஹோம் மட்டுமே காரணம்.

இதேபோல கடைசி 5 ஓவர்களிலும் நியூஸிலாந்து அணி அதிரடியாக விளையாடுமா என்கிற எதிர்பார்ப்பு உருவானது. ஆனால், இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. மறுபக்கம் விக்கெட்டுகள் விழுந்தபோது பொறுப்புடன் விளையாடி வந்த டெய்லர், 42 ரன்களில் விஜய் சங்கரின் அற்புதமான ஃபீல்டிங்கினால் ரன் ஆவுட் ஆனார். கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்து 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார் கலீல் அஹமது.

கடைசியில் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில் கிருனாள் 3 விக்கெட்டுகளும் கலீல் 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள்.

சிறப்பாகப் பந்துவீசியதால் நம்பிக்கையுடன் களமிறங்கினார்கள் இந்தியத் தொடக்க வீரர்கள். கடந்த சில ஆட்டங்களாகச் சரியாக விளையாடாத ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் பவுண்டரிகளும் சிக்ஸரும் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்தது.

இன்று சிறப்பாக விளையாடிய நிலையில் 33 ரன்களில் இருந்தபோது ஒரு சிக்ஸர் அடித்தார் ரோஹித் சர்மா. அப்போது டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையை அடைந்தார். இதற்கு முன்பு நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் 2272 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். அதைத் தாண்டியுள்ளார் ரோஹித் சர்மா. இந்த ஆட்டத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் 2288 ரன்கள் எடுத்துள்ளார்.

28 பந்துகளில் அரை சதம் எடுத்த ரோஹித் சர்மா, உடனடியாக சோதியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் அபாரமான தொடக்கத்தால் இந்திய அணியின் வெற்றி ஆரம்பத்திலேயே உறுதி செய்ததாகவே இருந்தது. இன்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவன், 31 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஃபெர்குசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு புதுமுகங்களான ரிஷப் பந்தும் விஜய் சங்கரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் ஆர்வமாக இருந்தார்கள். 1 பவுண்டரியும் 1 சிக்ஸரும் அடித்த விஜய் சங்கர், மற்றொரு சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு 14 ரன்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதன்பிறகு ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி 1 சிக்ஸரும் 4 பவுண்டரிகளும் அடித்து 40 ரன்களிலும் தோனி 20 ரன்களிலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இந்திய அணி, 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் 2-வது டி20யை வென்றுள்ளது. இதன்மூலம் டி20 தொடர் 1-1- என சமனில் உள்ளது. மேலும் இந்திய அணி நியூஸிலாந்து மண்ணில் தனது முதல் டி20 ஆட்டத்தை வென்றுள்ளது.

விக்கெட்டுகள், சிக்ஸர், பவுண்டரிகள், மூன்றாம் நடுவர் சர்ச்சை என இந்த டி20 ஆட்டம் அனைத்து விதமான சுவைகளையும் இந்திய ரசிகர்களுக்குத் தந்தது. அடுத்ததாக, மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டம் ஞாயிறன்று ஹாமில்டனில் நடைபெறவுள்ளது.