ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது விதர்பா அணி

பதிவு செய்த நாள் : 07 பிப்ரவரி 2019 16:52

நாக்பூர்

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய விதர்பா அணி, சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது.

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நடப்பு சாம்பியன் விதர்பா, சவுராஷ்டிரா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் விதர்பா அணி 312 ரன்னும், சவுராஷ்டிரா அணி 307 ரன்னும் எடுத்தன. 5 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா அணி 3வது நாள் ஆட்டம் முடிவில் 31 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. 4வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய விதர்பா அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. விதர்பா அணி 205 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.

பின்னர், நிர்ணயிக்கப்பட்ட 200 ரன்கள் இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி துவக்கத்திலேயே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் நேற்றைய ஆட்டநேர முடிவில் சவுராஷ்டிரா அணி 2வது இன்னிங்சில் 28 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு நன்கு எடுபட்டதால் விதர்பா அணி வெற்றியை நோக்கி பயணித்தது.

இந்நிலையில், இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. சவுராஷ்டிரா அணியின் வெற்றிக்கு மேலும் 148 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நிதானமாக விளையாடியது. நெருக்கடிக்கு மத்தியிலும் விக்கெட்டைக் காப்பாற்ற கடுமையாகப் போராடிய ஜடேஜா, அரை சதம் கடந்தார். ஆனால், அவர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், டிஏ ஜடேஜா 17 ரன்னிலும், உனாத்கட் 7 ரன்னிலும் ஆட்டமிழக்க, சவுராஷ்டிரா அணி 127 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், விதர்பா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ரஞ்சி கோப்பை சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது.

இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ஆதித்யா சர்வாதே, 2ம் இன்னிங்சில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். முதல் இன்னிங்சில் 98 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.