காற்றினிலே குழல் கீதம்!

பதிவு செய்த நாள் : 08 பிப்ரவரி 2019

குழல் என்றதும் நமக்கு புல்லாங்குழல்தான் ஞாபகத்துக்கு வரும். அது மூங்கில் கொண்டு செய்யப்பட்டிருக்கும் என்பதையும் அறிவீர்கள். ஆனால் பழங்காலத்தில் கொன்றைக் குழல், முல்லைக் குழல், சிறு குழல், நெடுங்குழல் என பலவகைக் குழல்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன.

கொன்றை மரத்தின் காயை குழலாக்கி இசைத்தது, கொன்றைக் குழல். ஆம்பல் கொடியின் தண்டினைக்(stem)கொண்டு உருவாக்கியது, ஆம்பல் குழல். இவைதான் தொடக்க நிலை குழல்களாக இருந்துள்ளன.

இதில் படிப்படியாக மாற்றம் ஏற்பட்டு, இன்றைய நிலையை அடைந்திருக்கிறது. மூங்கில் கொண்டு செய்யப்பட்ட குழல் இசைக் கருவி, 15 (37.5 செ.மீ.)அங்குலம் நீளமுடையது. 3 அங்குலம் (7.5 செ.மீ) சுற்றளவு கொண்டது. மொத்தம் எட்டுத் துளைகளைக் கொண்டது. குழலின் இடதுப் பக்க துளை அடைக்கப்பட்டிருக்கும். வலது பக்கத் துளை திறந்திருக்கும். வாய் வைத்து ஊதும் முதல் துளை 'முத்திரை' எனப்படும். மீதி உள்ள ஏழு துளைகள் விரல் அசைவுக்கு ஏற்ப, மூடித் திறக்கும்.பழங்காலத்தில் குழலை தனித்தும் இசைத்தனர். யாழ், முழவு முதலான கருவிகளுக்கு பக்க இசை வழங்கவும் பயன்படுத்தினர். குழல்,மனம் உருகும் இனிய இசையைத் தந்து காற்று மண்டலத்தை கற்கண்டாக மாற்றும் வசீகரம் கொண்டது.