ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

பதிவு செய்த நாள் : 05 பிப்ரவரி 2019

* கோயில் குளத்தில் இரவில் நீராடலாமா? என். மணிமேகலை, நாகர்கோவில்.

புனித நீராட்டம் என்பது காலையில் செய்யப்படுவதுதான். மற்ற நேரங்களில் கோயில் குளத்தில் நீராடுவது சாதாரண குளியலேயாகும்.

* சுவாமி சன்னிதியில் சிலர் உரக்கப்பாடுவதும் திருநாமங்களை உச்சரிப்பதும் அமைதியாக வழிபாடு செய்வதற்கு இடையூறாக உள்ளதே! இதற்கு என்ன செய்யலாம்? எம். தண்டபாணி, குறுக்குத்துறை.

 இது தர்மசங்கடமான கேள்வியாகப் பலராலும் கேட்கப்படுகிறது. அனேகமாக எல்லோருமே அமைதியை விரும்பியே வழிபட வருகின்றனர். நீங்கள் கூறுவதுபோல் உரக்கப் பாடுபவர்களைக் கேட்டால் அவர்களும் இப்படி செய்தால்தான் என் மனம் அமைதியடைகிறது என்கிறார்கள். இது ஒன்றும் பெரிய பிரச்னையில்லை. சன்னிதியில் அமைதியாக தரிசனத்தை முடித்து விட்டு கோயிலின் வேறு இடத்தில் உட்கார்ந்து பாடுதல், திருநாமங்களை உரக்க உச்சரித்தல் போன்றவற்றைச் செய்தால் யாருக்கும் இடையூறு இருக்காது. இதைச் சொல்லியும் கேளாமல் அவர்கள் சன்னிதியிலேயே இப்படிச் செய்தால் அதைக் கேட்டு இன்புற நம் மனதைத் தயார் செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

* உண்ணா நோன்பு பேசா நோன்பு - – எது சிறந்தது? வ. மருதநாயகம், நாகர்கோவில்.

இறைசிந்தனையிலேயே இருந்திட கடைப்பிடிப்பதே விரதமாகும். இதை ‘நோன்பு’ என்றும் குறிப்பிடுவார்கள். உண்ணாமலிருப்பதும் பேசாமலிருப்பதும் ஆகிய இரண்டுமே கடினமானவைதான். இரண்டுமே சிறந்ததுதான்.

 * சிந்தாமணியை மீட்டவர் விநாயகர் என்பதன் பொருள் என்ன? எஸ். சங்கத்தமிழன் சிந்துபூந்துறை.

சிந்தாமணி கணபதி என்றுதான் உள்ளது. காமதேனு, கற்பகவிருட்சம் போன்று நினைத்ததைத் தரக்கூடிய ஒரு ரத்தினத்திற்கு ‘சிந்தாமணி’ என்றுபெயர். இதைப்போல் நாம் வேண்டியதைத் தரும் விநாயகருக்கு ‘சிந்தாமணி கணபதி’ என்று பெயர். கிருஷ்ணருடைய வரலாற்றில் சிந்தாமணியை மீட்ட கதை உண்டு.