நியூஸி.யுடன் இறுதி கிரிக்கெட் போட்டி: ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா

பதிவு செய்த நாள் : 03 பிப்ரவரி 2019 15:05

வெல்லிங்டன்,

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 4-1 என கணக்கில் தொடரை வென்றது இந்திய அணி.

நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெல்லிங்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கடந்த போட்டியில் விளையாடியது போலவே இந்திய அணியின் டாப் ஆர்டர் இந்த போட்டியிலும் சொதப்பியது.

ரோஹித் 2, தவான் 6, தோனி 1 ரன் வீதம் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 18 ரன்களுக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அம்பதி ராயுடுவுடன் விஜய் ஷங்கர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

இருவரும் 30 ஓவர் வரை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், விஜய் ஷங்கர் 45 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.

ராயுடுவுடன் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். பவர்பிளே வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட இந்த ஜோடி துரிதமாக அடித்து ரன்களைக் குவிக்கத் தொடங்கியது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது 10-வது சதத்தை பதிவு செய்தார் ராயுடு.

ராயுடு பந்தை பவுண்டரிகளுக்கு விரட்ட ஜாதவ் அவ்வப்போது பவுண்டரி அடித்து ஒத்துழைக்க இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ராயுடு 90 ரன்கள் எடுத்திருந்த போது பவுண்டரி அடித்து ஆட்டமிழந்தார். 34 ரன்கள் எடுத்திருந்த ஜாதவும் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து 2 விக்கெட் விழுந்ததால், இந்திய அணிக்கு மீண்டும் நெருக்கடி தர நியூஸிலாந்து முயன்றது. ஆனால், பாண்டியா ஆஸ்ட்லே பந்தில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மிரட்டினார். தனது அதிரடியை தொடர்ந்த ஹார்திக் பாண்டியா 22 பந்துகளில் 2 பவுண்டரிகள், 5 சிக்ஸர் உட்பட 45 ரன்கள் எடுத்தார். இவரது அதிரடியால் இந்திய அணி 250 ரன்களை கடந்தது.

49.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 252 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

நியூஸிலாந்து தரப்பில் ஹென்ரி 4 விக்கெட்டுகள், போல்ட் 3 விக்கெட்டுகள், நீஷம் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

நியூஸி அணி பேட்டிங்

253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்கியது.

இந்த போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பிய ஷமி, தொடக்க ஆட்டக்காரர்களான நிகோல்ஸ் மற்றும் முன்ரோவை வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய டெய்லரை பாண்டியா ஆட்டமிழக்கச் செய்தார். இதன்மூலம், அந்த அணியும் 16 ஓவர்களில்  54 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் வில்லியம்ஸனும் ரன் குவிக்க மிகவும் திணறினார். வில்லியம்ஸன் மற்றும் லாதம் விக்கெட் விழாமல் விளையாடினர். வில்லியம்ஸன் ஜாதவ் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று தவான் வசம் சிக்கினார். இதனால், அந்த அணி மீண்டும் நெருக்கடிக்குள்ளானது.

சாஹல் லாதம் மற்றும் கிராண்ட்ஹோமை அடுத்தடுத்து வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதன்பிறகு களமிறங்கிய நீஷம் பவுண்டரியும் சிக்ஸரும் அடித்து இந்திய அணியை மிரட்ட, அவரும் 32 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தபோது தோனியின் சாமர்த்தியத்தால் ரன் அவுட் ஆனார்.

ஆஸ்ட்லே 10, சான்ட்னர் 22, போல்ட் 1 என ஆட்டமிழக்க அந்த அணி 44.1 ஓவரில் 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் நியுஸிலாந்து அணியை வெற்றி கொண்டது.

இந்திய அணி சார்பில் சாஹல் 3 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் மற்றும் கேதார் ஜாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என கைப்பற்றியது.

ஆட்டநாயகன் விருதை அம்பதி ராயுடு வென்றார். தொடர் நாயகன் விருதை முகமது ஷமி வென்றார்.

இந்திய – நியுஸி அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர், பிப்ரவரி 6-ஆம் தேதி தொடங்குகிறது.