திருப்பதியில் 3 தங்க கிரீடங்கள் மாயம்: காவல்துறை தீவிர விசாரணை

பதிவு செய்த நாள் : 03 பிப்ரவரி 2019 14:42

திருப்பதி

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 3 தங்கக் கிரீடங்கள் திடீரென மாயமாகியுள்ளது பக்தர்கள், அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ ஸ்வாமி கோவிலின் உற்சவ மூர்த்திகளை அலங்கரிக்கும் 3 தங்கக் கிரீடங்கள் மாயமானது கோவில் அர்ச்சகர்கள் மூலம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் கோவில் கதவுகளை அடைத்து நள்ளிரவு முதல் விசாரணையை தொடங்கினர்.

பணியில் இருந்த அர்ச்சகர்கள், ஊழியர்களை கோவிலுக்கு வரவழைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் காணாமல் போன கிரீடத்தை கண்டு பிடிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிந்தராஜ சாமி கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும், அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.