கடைசி ஒருநாள் போட்டி: நியூசிலாந்துக்கு 253 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா அணி

பதிவு செய்த நாள் : 03 பிப்ரவரி 2019 12:19

வெல்லிங்டன்,            

வெல்லிங்டனில் நடைபெற்று வரும் 5ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 253 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெல்லிங்டனில் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணி முதல் 3 போட்டியில் வெற்றிபெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி உள்ளது. விராட்கோலி இல்லாத அணி 4வது போட்டியில் 92 ரன்களில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.

இதனால் இன்றைய கடைசி போட்டிக்கான அணியில் 3 மாற்றம் இருந்தது. காயத்தில் இருந்து குணமடைந்ததால் தோனி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல முகமது‌ ஷமி, விஜய்சங்கர் ஆகியோரும் இடம்பெற்றனர். தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், கலீல் அகமது ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. குப்திப்புக்கு பதிலாக முன்ரோ இடம் பெற்றார்.

டாஸ் வென்ற இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரோகித்சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இந்திய விக்கெட்டுகள் சரிந்தன. 18 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது. ரோகித் சர்மா 2 ரன்னிலும், சுப்மன் ஹில் 7 ரன்னிலும் ஹென்றி பந்தில் ஆட்டம் இழந்தனர். தவான் 6 ரன்னிலும், டோனி 1 ரன்னிலும் போல்ட் பந்தில் ‘அவுட்’ ஆனார்கள்.

5வது விக்கெட்டான அம்பதி ராயுடு- விஜய் சங்கர் ஜோடி விக்கெட் சரிவை தடுத்து பொறுப்புடன் ஆடியது. இருவரும் நிதானமாகவே ஆடினார்கள். இதனால் 29வது ஓவரில் தான் இந்தியா 100 ரன்னை தொட முடிந்தது. சிறப்பாக விளையாடி வந்த தமிழக வீரர் விஜய் சங்கர் தனது அறிமுக அரை சதத்தை எடுப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 64 பந்தில் 4 பவுண்டரியுடன் 45 ரன்களை எடுத்த அவர் ரன் அவுட் ஆனார்.

இறுதியில் 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக அம்பதி ராயுடு 90, விஜய் சங்கரும் ஹர்திக் பாண்டியாவும் தலா 45 ரன்களை எடுத்தனர். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மேட் ஹென்றி 4, பவுல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, தற்போது நியூசிலாந்து அணி, தற்போது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.