4ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: 92 ரன்களில் இந்திய அணியை சுருட்டியது நியூசிலாந்து

பதிவு செய்த நாள் : 31 ஜனவரி 2019 10:23

ஹாமில்டன்,          

நியூசிலாந்தின் ஹாமில்டனில் நடைபெற்றுவரும் 4ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி 92 ரன்களில் இந்திய அணியை சுருட்டியது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், 4ஆவது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணியை பேட் செய்யுமாறு பணித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.

இந்திய அணியைப் பொருத்தவரை எஞ்சிய இரு போட்டிகளில் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. எனவே, பணிச்சுமை காரணமாக எஞ்சிய போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இன்றைய போட்டி 200ஆவது சர்வதேச ஒருநாள் போட்டி ஆகும். தசைப்பிடிப்பால் கடந்த போட்டியில் பங்கேற்காத தோனி, இன்றைய போட்டியிலும் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் சுப்மான் கில் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்திய அணிக்கு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் போல்ட், கிராண்ட்ஹோம் கடும் அச்சுறுத்தல் அளித்தனர். ரோகித் சர்மா (7), ஷிகர் தவான் (13) இருவரையும் போல்ட் வெளியேற்றினார். இதையடுத்து அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் கிராண்ட்ஹோம் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் இளம் வீரர் சுப்மான் கில் 9 ரன்களும், கேதர் ஜாதவ் ஒரு ரன்னும் எடுத்த நிலையில், போல்ட்டிடம் விக்கெட்டை இழந்தனர். தேனீர் இடைவேளையின்போது 6 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் என்ற பரிதாப நிலையில் இருந்தது இந்தியா.

விறுவிறுப்பாக 4 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய ஹர்திக் பாண்டியா, 16 ரன்னுடன் நடையைக் கட்டினார். புவனேஸ்வர் குமார் 1 ரன், குல்தீப் யாதவ் 15 ரன்கள், அகமது 5 ரன்களில் ஆட்டமிழக்க, 30.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்தியா, 92 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். கிராண்ட்ஹோம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

விராட் கோலி, தோனி இல்லாததால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்பு இல்லை. ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து 93 ரன்கள் என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது.