தென்னங்கன்று நட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்! கேரள மஸ்வூது அவ்லியா தர்காவில் நடக்கும் அதிசயம்!!

பதிவு செய்த நாள் : 29 ஜனவரி 2019 16:15

இவ்வுலகில் அடங்கப்பட்டிருக்கும் வலிமார்கள் என்னும் இறைநேசச்செல்வர்கள், மகான்களின் சமாதிகளுக்கு சென்று தரிசிக்கையில், அவர்களைப் பற்றிய ஏதாவது ஒரு அதிசய நிகழ்வு அங்கு புதைந்து கிடக்கும். தமிழகத்தின் எல்லைப்பகுதியான கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் ‘ஒத்தக்கல்’ என்ற இடத்தில் அமைந்துள்ள அஸ்ஸெய்யிது மஸ்வூது அவுலியா நினைவிடமும் அதற்கு விதிவிலக்கல்ல. சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நினைவிடம் அங்கு நிறுவப்பட்டதாக ஒத்தக்கல் மக்கள் அதன் பெருமையை பறை சாற்றுகின்றனர். ஒத்தக்கல்லில் அமைந்துள்ள மலை உச்சியில் ‘மஸ்வூது’ அவ்லியா அமர்ந்து அல்லாஹ்வை நினைத்து தவம் செய்ததால், அங்கு அவர்களது நினைவிடம் அமைந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

அஸ்ஸெய்யிது மஸ்வூது ரழியல்லாஹூத்த ஆலா அன்ஹூ அவர்கள் கர்நாடக மாநிலம் குல்பர்காவைச் சேர்ந்தவர்கள். அங்கு இருந்து இஸ்லாத்தை பரப்ப நெல்லை மாவட்டம் கடையநல்லுாருக்கு வந்தார்கள். பின்னர் அங்கிருந்து, கேரளா ஒத்தக்கல்லுக்கு வந்து அல்லாஹ்வை நோக்கி தவம் இருந்தார்கள். அதன் பின்பு அவர்கள் அவ்வூரை விட்டு மறைந்து விட்டார்கள். அவர் எங்கு சென்றார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அவர்கள் பரப்பிய இஸ்லாம் என்னும் ஓரிறைக் கொள்கை கேரளாவில் நிலைத்து நின்று அவர்களது பெயரை பறை சாற்றி விட்டது. உலகத்தில் உள்ள அத்தனை வலிமார்களின் தலைவர், அல்லாஹ்வின் பேரொளி என இஸ்லாமியர்களால் போற்றப்படும் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரழி) நாயகத்தின் வழியில் வந்த இறை அருட்செல்வர் அஜ்மீர் ஹாஜா பந்தே நவாஸ் (ரழி) அவர்களுடைய மகள் வயிற்றுப் பிள்ளையாக அஸ்ஸெய்யிது மஸ்வூது அவ்லியா அவர்கள் இப்பூவுலகில் உதித்தார்கள் எனவும், ஜீலானி நாயகத்தின் 14வது தலைமுறையில் அஸ்ஸெய்யிது மஸ்வூது அவ்லியாவின் மூதாதையர்கள் வந்துதித்தவர்கள் என்றும் வரலாறுகள் கூறுகின்றன.

அஸ்ஸெய்யிது மஸ்வூது அவ்லியா அவர்களைப் பற்றிய புகழ்மாலையில் அவர்களது வரலாற்றுப்பதிவு மிகத்தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அஸ்ஸெய்யிது மஸ்வூது அவ்லியா அவர்கள் கர்நாடகாவில் இருந்து இஸ்லாத்தை பரப்புவதற்காக கேரளாவின் கொல்லத்துக்கு வந்தார்கள். அங்கு ஒத்தக்கல் அருகில் உள்ள ஒரு இந்து கோயிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். இதனைக் கண்ட அந்த பகுதி மக்கள், இது கோயில் உறங்குவதற்குரிய இடம் அல்ல, இங்கிருந்து செல்லுங்கள்’ என்று மஸ்வூது அவ்லியாவை அங்கிருந்து விரட்டினர். அப்போது கோயில் சாமி சிலைக்கு அருகில் உள்ள புலி உருவம் கொண்ட பொம்மை புத்துகள் உயிர்ப்பித்து எழுந்தன. பயங்கரமான உறுமல் சத்தத்தடன் அவை அங்கும் இங்கும் ஓடி மஸ்வூது அவ்லியாவை விரட்டியவர்களை மிரட்டின. இதனால் பயந்து போன அவர்கள், அன்று முதல் அவ்லியாவை கோயிலில் இருந்து விரட்டுவதை நிறுத்திக் கொண்டனர். இதனை மிகப்பெரிய அதிசயமாக கொல்லம் மக்கள் நினைத்து பெருமிதம் கொண்டனர். இது போல இன்னும் எத்தனையோ அதிசயங்கள் நிகழ்ந்துள்ளதாக ஒத்தக்கல் அவ்லியாவைப் பற்றி வரலாறுகள் கூறுகின்றன.

மேலப்பாளையத்தில் வாழ்ந்து வந்த கண் பார்வை தெரியாத ஞானமா மேதை பஷீர் அப்பா (ரழி) அவர்களும் ஒத்தக்கல் மஸ்வூது அவ்லியா அவர்களும் ஆன்மிகரீதியாக நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். கேரளாவில் மஸ்வூது அவ்லியாவின் இடத்தில் நடக்கும் ‘திக்ர்’ மஜ்லிஸ்சுக்கு பஷீர் அப்பா அவர்கள் அடிக்கடி சென்று அதில் கலந்து கொண்டுள்ளார்கள். ஒத்தக்கல் அவ்லியா உரூசின் போது பஷீர் அப்பாவின் புகழ் மாலை பாட்டும் அங்கு இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் ஜமாத்துல் ஆகிர் பிறையில் அவர்களது கந்தூரி விழா கொல்லம் ஒத்தக்கல்லில் மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது. அவ்விழாவின் போது மஸ்வூது நாயகம் அவர்களின் பெயரில் ‘குர்ஆன்’ ஷரீப் ஓதப்பட்டு, அவர்கள் பெயரில் ‘மவ்லுாத்’ ஓதும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் தீன் கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது. அதன் பின்னர், அல்லாஹ்வை புகழும் திக்ர் மஜ்லிஸ் நிகழ்ச்சி, அதனையடுத்து பக்கீர்களின் தாயிரா நடைபெற்று மறுநாள் காலையில் அஸ்ஸெய்யிது மஸ்வூது அவ்லியா திக்ர் ஹல்கா ஸலவாத் மஜ்லீஸ் நடைபெற்று இனிதே முடிவுபெறுகிறது. இவ்வாண்டும் கடந்த 20ம் தேதி அன்று ஒத்தக்கல்லில் 537ஆவது கந்துாரி உரூஸ் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒத்தக்கல் அஸ்ஸெய்யிது மஸ்வூது அவ்லியா (ரழி) அவர்களிடம் பக்தர்கள் என்ன  நாட்டம் வைத்து வந்தாலும் அது நிறைவேறுகிறது என்கின்றனர்.

மேலும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மஸ்வூது அவ்லியாவை தங்களது குறை தீர்க்க நாடி தென்னங்கன்றை தர்காவின் வளாகத்தில் நட்டு வைத்துச் செல்கின்றனர். அவர்களுக்கு அல்லாஹ்வின் கிருபையால் நிச்சயம் குழந்தை கிடைக்கிறது என்கிறார் தர்காவை ஐந்தாவது தலைமுறையாக நிர்வகித்து வரும் ஹஜ்ரத் சுலைமான். அது மட்டுமின்றி அங்கு சென்று மஸ்வூத் அவ்லியாவின் தர்பாரில் சுத்தமான நீரில் ஓதித்தரும் புனித நீரை அருந்தினால் திருமண தடை, குடும்பத்தில் கஷ்டம், செய்வினை, பில்லி, சூனியத்தால் பாதிப்படைந்தவர்கள் நற்கிருபை பெறுகிறார்கள் என்கின்றனர் கொல்லம்வாழ் மக்கள். நாமும் மகான் ஒத்தக்கல் அஸ்ஸெய்யிது மஸ்வூது அவ்லியாவை கொல்லத்தில் சென்று தரிசித்து, பாக்கியசாலிகளாவோம். அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம். அல்ஹம்துலில்லாஹ்.

தொடர்புக்கு: தர்கா நிர்வாகி சுலைமான்

செல்: 094470 96551

– ஹமீது மைந்தன்