நியுஸிலாந்து – இந்தியா 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி

பதிவு செய்த நாள் : 28 ஜனவரி 2019 14:47

நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்  கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், மவுண்ட் மாங்கானுயில் நடந்த 2-வது ஆட்டத்தில் 90 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கிடையிலான 3வது ஒரு நாள் போட்டி மவுண்ட் மாங்கானுயில் இன்று நடைபெற்றது. நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது

நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 243 ரன்கள் எடுத்தது ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 244 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் விளையாடிய இந்திய அணி நியூசிலாந்து அணியின் இலக்கை 43 ஓவரிலேயே தகர்த்தது. இந்திய அணியில் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்தியா 8.2 வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. தவான் 28 ரன்களில் அவுட் ஆனார்.  

அடுத்து களமிறங்கிய கோலி, ரோகித் ஷர்மாவுடன் சிறப்பாக விளையாடினார். ரோகித் ஷர்மா 62 ரன்களுடனும், கோலி 60 ரன்களுடனும் அவுட் ஆனார்கள்.

அம்பதி ராய்டு 40 ரன்களுடனும், கார்த்திக் 38 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

42 பந்துகள் மீதமிருந்த நிலையில் 43 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்த இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியின் வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி உள்ளது.