மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் இப்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. முன்னதாக நேற்று காலை நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது அரையிறுதிப் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச், பிரான்ஸ் நாட்டின் லுகாசை எதிர் கொண்டார். இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6–0, 6–2 மற்றும் 6–2 என்ற செட்களில் வெற்றிபெற்றார். நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் அவர் ஸ்பெயின் நாட்டின் நடாலை எதிர் கொள்ளவுள்ளார்.
முன்னதாக நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சமந்தா, சீனாவின் சூவாய் சாங் ஜோடி, ஹங்கேரியின் பபோஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டின் கிறிஸ்டினா ஜோடியை எதிர் கொண்டு விளையாடியது. இதில் சமந்தா ஜோடி 6–3, 6–4 என்ற நேர் செட்களில் வென்று, இரட்டையர் பிரிவு சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் ஜோகோவவிச் நம்பர் 1 இடத்திலும், நடால் நம்பர் 2 இடத்திலும் உள்ளார். இவர்கள் இதுவரை 52 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் ஜோகோவிச் 27 முறையும், நடால் 25 முறையும் வெற்றிபெற்றுள்ளனர். இப்போது ஆஸ்திரேலிய கிராண்ட் ஸ்லாம் பட்டத்துக்காக மீண்டும் 2 பேரும் மோதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.