மவுன்ட் மங்கானு:
இளம் வீரர்களின் வருகையால், உலகக்கோப்பைக்கான அணியில் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதில், இந்திய கிரிக்கெட் அணியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தொடக்க ஆட்டக்காரர் ஷிகர்தவான் தெரிவித்தார். 2வது ஒரு நாள் போட்டிக்காக மவுன்ட் மங்கானு மைதானத்தில் பயிற்சியில் இருந்த ஷிகர்தவான், நிருபர்களிடம் கூறியதாவது:
ஐசிசி யு 19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இருந்த இளம் வீரர்கள், இப்போது சீனியர் அணியில் இடம் பிடித்துள்ளனர். குறிப்பாக யு 19 அணியின் கேப்டனாக இருந்த பிரித்வி ஷா, கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி, சதம் மற்றும் 70 ரன் விளாசினார். அதேபோல், யு 19 உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன் குவித்த சுப்மான் கில் இப்போது இந்திய அணியில் அறிமுகமாகவுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
திறமையான இளம் வீரர்களின் வருகை, இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வரிசையில் இடம் பிடிக்கப்போவது யார் என்பதில் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. வரும் உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பிடிப்பது யார் என்பதிலும் போட்டியாக உள்ளது. இது எங்கள் அணிக்கு மகிழ்ச்சி கலந்த சிக்கலான ஒரு விஷயம் ஆகும்.
ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரம் ரன் கடந்தது ஒரு நல்ல விஷயம். இது என் ஆட்டத்தில் நான் கவனமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு அணியின் ஒத்துழைப்பும் ஒரு காரணம். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளின் கால நிலையில் பெரிய அளவில் வேறுபாடு ஏதும் இல்லை. அத்துடன், அணியில் சீனியர் வீரர்களில் ஒருவராக, சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்து விளையாடியுள்ளேன்.
எனவே, போட்டியின்போது, எந்த மாதிரியான தொழில்நுட்பத்தை கையாள்வது, எந்தப் பந்தை அடித்து ஆடுவது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறேன். களத்தில் எதைச் செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பதால், எந்தக் குழப்பமும் இல்லை.
இவ்வாறு தவான் கூறினார்.
டாப் ஆர்டர்களை வீழ்த்துவோம்
இரண்டாவது ஒருநாள் போட்டி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான டிரன்ட் போல்ட், ‘‘இந்தப் போட்டியில் இந்திய அணியின் ரன் குவிப்பைக் கட்டுப் படுத்தும் வகையில், அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை குறிவைத்து எங்கள் பந்து வீச்சுக் குழுவின் செயல்பாடு இருக்கும். இதன் மூலம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நாங்கள் நெருக்கடியை உருவாக்கும் திட்டத்தை வைத்துள்ளோம். முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்களை வீழ்த்திவிட்டால் போதும், ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பி விடுவோம்’’ என்றார்.