கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 163

பதிவு செய்த நாள் : 21 ஜனவரி 2019

மருதகாசியும் கண்ணதாசனும் !

மரு­த­கா­சி­யும் கண்­ண­தா­ச­னும் தமிழ் திரைப்­பா­ட­லா­சி­ரி­யர்­க­ளா­கக் மாபெ­ரும் வெற்­றி­க­ளைப் பெற்­ற­வர்­கள். ஆனால், இரு­வ­ரும் ஒரே 1949ல்  திரைப்­பா­ட­லா­சி­ரி­யர்­க­ளாக அறி­மு­கம் பெற்­றா­லும், அவர்­க­ளு­டைய வளர்ச்­சி­யும் வாய்ப்­பு­க­ளும் வெவ்­வேறு வித­மாக அமைந்­தன.

கண்­ண­தா­சனை விட ஏழு வயது மூத்­த­வ­ரான மரு­த­காசி, ஐம்­ப­து­க­ளி­லேயே  மிகப்­பெ­ரிய வெற்­றி­களை அடைந்து, நூற்­றுக்­க­ணக்­கான ஹிட் பாடல்­க­ளைக் கொடுத்­தார்.

இசை சக்­ர­வர்த்தி ஜி.ராம­நா­தன், கே.வி.மகா­தே­வன், விஸ்­வ­நா­தன் ராம­மூர்த்தி முத­லிய இசை­ய­மைப்­பா­ளர்­க­ளி­டம் மிக நெருக்­க­மா­கப் பழகி, இந்­தப் பங்­க­ளிப்பை அவர் செய்­தார்.

கண்­ண­தா­ச­னுக்­குப் பாட­லா­சி­ரி­யர் என்ற முறை­யில் ஐம்­ப­து­கள் ஒரு சோத­னைக் கால­மா­க­வும் பரி­சோ­த­னைக் கால­மா­க­வும் விளங்­கின.

அவர் தொடக்­க­நிலை பாட­லா­சி­ரி­ய­ராக கோவை சென்­டி­ரல் ஸ்டூடி­யோ­வில் இருந்த போது, அவ­ரு­டைய பாடல் எழு­தும் திறன் பரி­க­சிக்­கப்­பட்­டது. மெட்­டுக்கு அவர் எழு­திக்­கொ­டுத்த வரி­க­ளைப் பார்த்து, ‘இது எந்த மொழி’ என்று  கிண்­ட­லா­கக் கேட்­டார், நடிகை பானு­மதி. ‘இந்­தப் பாடலை நான் பாட­மாட்­டேன்’ என்று வில­கி­னார். தான் எழு­திக்­கொ­டுத்த பாட­லால் இந்த முறை­யில் அவ­மா­னப்­பட்­ட­வர் கண்­ண­தா­சன்.

‘உடு­மலை நாரா­யண கவி­யைப் போல் பாடல் எழுத இன்­னொ­ரு­வர் பிறக்­க­வேண்­டும்’ என்று இசை மேதை­யும் இசை­ய­மைப்­பா­ள­ரு­மான சி.ஆர். சுப்­ப­ரா­மன் கூறிய போது, அவரை விட சிறந்த நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்­களை நானே உரு­வாக்­கு­வேன் என்­றார் கண்­ண­தா­சன். அவரே எதிர்­நீச்­சல் போட்­டுக்­கொண்­டி­ருந்த காலத்­தில், இப்­படி பேசி­னார் கண்­ண­தா­சன்.

தன்­னு­டைய சுய­க­வு­ர­வத்­தைக் காப்­பாற்­றிக் கொள்­வ­தற்­காக அவர் அப்­போது பேசிய இந்த வார்த்­தை­க­ளைக் கேட்டு, அங்கே உள்­ள­வர்­கள் கேலி­யா­கச் சிரித்­தார்­கள் என்று கண்­ண­தா­சன் குறித்­தி­ருக்­கி­றார். இப்­படி சிரித்­த­வர்­க­ளில், தன்­னு­டைய பிற்­கால நெருங்­கிய நண்­பர் விஸ்­வ­நா­த­னும் இருந்­தார் என்­ப­தைக் கூட கண்­ண­தா­சன் எழுதி வைத்­தி­ருக்­கி­றார்.

உடு­ம­லை­யா­ருக்­கும் கண்­ண­தா­ச­னுக்­கும் அவ்­வ­ள­வா­கப் பொருந்­திப் போன­தா­கத் தெரி­ய­வில்லை. ஆனால் உடு­மலை நாரா­யண கவி, மரு­த­காசி மீது அதிக அன்பு வைத்­தி­ருந்­தார். அவ­ரைத் தன்­னு­டைய அன்­புத் தம்­பி­யா­க­வும் திரைப்­பா­டல்  வாரி­சா­க­வும் கூட நாரா­யண கவி கரு­தி­னார்.

கண்­ண­தா­ச­னுக்­குத் திரைப்­பா­டல் துறை­யில் வெற்­றி­கள் லேசில் வர­வில்லை. மெட்­டுச் சிறை­யில் போட்டு மடக்கி, பாட­லா­சி­ரி­ய­னின் கற்­ப­னை­யைக் கொன்று விடு­கி­றார்­கள் என்­பது அவ­ரு­டைய அபிப்­ரா­யம். ஆனால் மெட்­டுக்கு எழு­து­வது அல்வா சாப்­பி­டு­கிற மாதிரி இருந்­தது மரு­த­கா­சிக்கு.

‘மங்­கை­யர் தில­கம்’ என்­றொரு படம். ‘வஹி­னிஞ்­சிய பாங்­டியா’ என்ற மராத்­திய படத்­தைத் தழுவி எடுக்­கப்­பட்ட திரைப்­ப­டம் அது. சுதீர் பாட்கே என்ற இசை­ய­மைப்­பா­ளர் அதில் அமைத்த தாலாட்­டுப் பாடலை, மராத்­திய பாடல் மெட்­டின் அடிப்­ப­டை­யில் தமி­ழில் எழு­த­வேண்­டும்.

இந்­தப் பாடலை எழுத கண்­ண­தா­சன்­தான் முத­லில் அழைக்­கப்­பட்­டார். ஆனால் அப்­போது அவ­ருக்­கி­ருந்த மன­நி­லை­யில் அந்­தப் பாட­லுக்­கான சரி­யான வரி­களை அவ­ரால் எழுத முடி­ய­வில்லை. படத்­தின் இயக்­கு­நர் எல்.வி. பிர­சாத்­துக்கு அவர் எழு­திய பாட­லில் திருப்தி இல்லை.  

அப்­பு­றம் மரு­த­கா­சியை அழைத்­தார்­கள். இந்த வகை­யில் மரு­த­காசி எழு­திய பாடல்­தான், ‘நீல­வண்ண கண்ணா வாடா, நீயொரு முத்­தம் தாடா’.  மூலப்­பா­ட­லை­வி­டக் கூட இந்­தப் பாடல் நன்­றாக இருந்­தது. மன­தைத்­தொ­டும் பட­மாக இன்று வரை உள்ள  ‘மங்­கை­யர் தில­க’த்­தில் மறக்­க­மு­டி­யாத  பாட­லாக இந்த ‘நீல­வண்ண கண்ணா’ அமைந்­து­விட்­டது.

மரு­த­காசி பாடல் எழுத  வந்த இரண்­டா­வது ஆண்டே, ‘வாராய் நீ வாராய்’ என்ற பாடல் அவ­ருக்கு அபா­ர­மான  ஹிட் பாட­லாக அமைந்­தது (‘மந்­தி­ரி­கு­மாரி’ 1950). இசை­ய­மைப்­பா­ளர் ஜி.ராம­நா­தன் ஆபேரி ராகத்­தில் அமைத்த பாட­லுக்­கான மெட்டு, திரை­யி­சை­யின் ஒரு மைல்­கல்­லாக அமைந்­தது. ‘மந்­திரி குமாரி’ படத்­தின் உச்­சக்­கட்­டத்­தில் அழ­காக அமைந்த பாடலை, திருச்சி லோக­நா­த­னும் ஜிக்­கி­யும் மிக­வும் திற­மை­யா­கப் பாடி­னார்­கள்.

இப்­ப­டி­யெல்­லாம் அமைந்த பாட­லின் வரி­கள், மரு­த­கா­சி­யின் பாட்­டுத் திற­னுக்கு ஒரு எடுத்­துக்­காட்­டாக உள்­ளது. பொது­வாக, திரைப்­பா­டல்­க­ளில் இரட்டை அர்த்­தம் என்­பது சிருங்­கா­ரப்­பா­டல்­க­ளில் அமைந்து, சில சம­யங்­க­ளில் விரும்­பத்­த­கா­த­தா ­கக்­கூட இருக்­கும். ஆனால் ‘வாராய் நீ வாராய்’  பாடல், படக்­க­தை­யோடு இணைந்து வரு­வ­தால், அதன் இரட்டை அர்த்­தம் மிக­வும் ரசிக்­கக்­கூ­டி­ய­தாக அமைந்­தது.

‘வாராய் நீ வாராய்’ என்று பாடி, ‘போகும் இடம் வெகு தூர­மில்லை’ என்று  நாய­கியை அவள் காத­லன் அழைக்­கும் போது, (படக்­க­தைப்­படி)  வெகு விரை­வில் அவ­ளைக் கொல்ல அவன் நினைப்­ப­தால், ‘கொல்­லும் வேலையை சீக்­கி­ரமே முடித்­து­ வி­டு­வேன்’ என்று கூறு­வ­து ­போல் உள்­ளது.

‘முடி­விலா மோன­நி­லையை நீ, மலை­மு­டி­யில் காண­லாம் வாராய்’, ‘வேறு­ல­கம் காணு­வாய் அங்கே’ என்­றெல்­லாம் பாடிக்­கொண்டு மலை­மு­டிக்கு அவன் அவளை அழைத்­துச் செல்­லும் போது, காத­லிப்­ப­வன் போல் நாய­கியை கூட்­டிச்­செல்­லும் கய­வன், விரை­வில் அரங்­கேற்ற நினைக்­கும் பஞ்­ச­மா­பா­த­கம் குறிக்­கப்­ப­டு­கி­றது. கடை­சி­யில் சாவ­தென்­னவோ கிரா­த­கன் தான் என்­பது படக்­கி­ளை­மேக்ஸ் தரும் திருப்­பம்!

‘மந்­தி­ரி­கு­மா­ரி’­­யில் அமைந்த ‘உல­வும் தென்­றல் காற்­றி­னிலே’ என்ற அழ­கான ஓடப்­பா­ட­லை­யும் மரு­த­கா­சி­தான் எழு­தி­னார். ஜி. ராம­நா­த­னின் மிக உயர்ந்த மெல­டிப்­பா­ட­லாக இது அமைந்­தது.

இந்த இரண்டு பாடல்­க­ளும் மரு­த­கா­சி­யைப் முன்­ன­ணிப் பாட­லா­சி­ரி­யர் ஆக்­கி­விட்­டன. தஞ்சை ராமய்யா தாஸ், உடு­மலை நாரா­யண கவி உட்­பட ஐம்­ப­து­க­ளின் முதல் பாதி­யில் பிர­ப­ல­மாக இருந்த சில பாட­லா­சி­ரி­யர்­கள் மத்­தி­யில், மரு­த­காசி கிடு­கி­டு­வென்று  முதன்மை இடத்­திற்கு வந்­து­விட்­டார்.

மெட்­டுக்கு எழு­து­வதை எட்­டிக்­கா­யாக நினைத்த உடு­மலை நாரா­யண கவி, இந்தி மெட்­டுக்­கும் வங்­கா­ளப்­பா­டல்­க­ளின் மெட்­டுக்­கும் பாடல் எழு­து­வதை, தோசைக்­கல்­லுக்கு எழு­தும் பாடல் என்று குறிப்­பி­டு­வார். அந்த மெட்­டுக்­களை ஏந்தி வரும் கிரா­ம­போன் ரிக்­கார்­டு­கள் தோசைக்­கல்­லைப்­போல் கறுப்­பா­க­வும் வட்­ட­மா­க­வும் இருக்­கும் என்­ப­தால் அப்­படி அழைப்­பார் நாரா­யண கவி.

தோசைக் கல்­லுக்­குப் பாடல் எழு­த­வேண்­டிய வாய்ப்பு தனக்கு வரும்­போது, உடனே அவர் தன்­னு­டைய இள­வ­லான மரு­த­கா­சிக்கு அந்த வாய்ப்பை கொடுத்­து­வி­டு­வார்! இப்­ப­டித்­தான், மாடர்ன் தியேட்­டர்ஸ் தயா­ரித்த, தமிழ் சினி­மா­வின் முதல் வண்­ணப்­ப­ட­மான அலி­பா­பா­வும் நாற்­பது திரு­டர்­க­ளும் படத்­திற்கு மரு­த­காசி பாடல்­கள் எழுத நேர்ந்­தது.

‘மந்­தி­ரி­கு­மா­ரி’க்கு வெற்­றிப்­பா­டல்­களை எழுதி புகழ் பெற்­றி­ருந்­தா­லும், கண்­ண­தா­ச­னுக்­குக் கொடுத்த சம்­ப­ளத்தை விட மாடர்ன் தியேட்­டர்­சின் சில ஊழி­யர்­கள் தனக்கு குறைந்த சம்­ப­ளம் கொடுத்­தார்­கள் என்று கரு­தி­னார் மரு­த­காசி! மாடர்ன் தியேட்­டர்ஸ் அதி­பர் டி.ஆர். சுந்­த­ரம் வெளி­நாடு சென்­றி­ருந்­த­போது, சில கீழ் மட்­டத்து சிப்­பந்­தி­கள் இந்த  சில்­லறை வேலையை செய்­து­விட்­ட­தாக அவர் எண்­ணி­னார்.

இதன் பிறகு மாடர்ன் தியேட்­டர்­சி­லி­ருந்து அழைப்பு வரு­கிற போதெல்­லாம் தட்­டிக்­க­ழித்­துக்­கொண்­டி­ருந்­தார்! ‘அலி­பா­பா­வும் நாற்­பது திரு­டர்­க­ளும்’ படத்­திற்­குப் பாட்­டெ­ழுத உடு­மலை நாரா­யண கவிக்கு அழைப்பு வந்த போது, இந்தி மெட்­டுக்­குப் பாடல் எழு­து­கிற வேலை என்­ப­தால், உடு­மலை தன்­னு­டன் மரு­த­கா­சியை அழைத்­துக்­கொண்டு சேலம் சென்­றார்.

எஸ்.என். திரி­பா­டி­யும் சித்­ர­குப்­தும் அமைத்த இசைக்கு, ராஜா மெஹ்தி அலி­கான் என்­ப­வர் இந்தி அலி­பா­பா­வுக்கு பாடல்­கள் எழு­தி­னார். இந்தி மெட்­டுக்­க­ளில் உட்­கா­ரும்­ப­டி­யான பாடல்­களை மரு­த­காசி தமி­ழில் எழு­த­வேண்­டும். இப்­படி மெட்டு என்­கிற ஒற்றை தடத்­திற்­குள் கட்­டிப்­போட்­டால் சில கவி­ஞர்­க­ளின் கற்­ப­னைக் குதிரை நக­ராது, அதே இடத்­தில் உறைந்து போய்­வி­டும். ஆனால் மரு­த­கா­சிக்கு மெட்­டுக்­கள் சிறை­க­ளா­கத் தெரி­ய­வில்லை...தன்­னு­டைய கற்­ப­னை­க­கள் சிறக்­க­டிக்­கக் கூடிய சிங்­கா­ரத்­தோட்­டங்­க­ளா­கத் தெரிந்­தன.

அத­னால்­தான், ‘தேகோஜி சாந்த் நிக்லா பிசே கஜூர் கே’   (பாருங்­கள் நிலா வந்­தது, பேரீச்­சம் மரத்­தின் பின்னே) என்று தொடங்­கும் பல்­ல­வியை, ‘அழ­கான பொண்ணு நான் அதுக்­கேத்த கண்­ணு­தான், எங்­கிட்ட இருப்­ப­தெல்­லாம் தன்­மா­னம் ஒண்­ணு­தான்’ என்று அவ­ரால் மாற்ற முடிந்­தது.

‘படீ ஹுயி கிஸ்­மத்கா சாதர்

ஸியேஜா ஸியேஜா ஸியேஜா’ (கிழிந்­து­போன விதி­யெ­னும் துகிலை, தையடா தையடா தையடா) என்­பதை, மாற்­றப்­பட்ட காட்சி அமைப்­புக்கு ஏற்­ற­வாறு,

 உல்­லாச உல­கம் உனக்கே சொந்­தம்

செய்­யடா செய்­யடா செய்­யடா, நீ ஜல்ஸா

செய்­யடா செய்­யடா செய்­யடா,’’ என்று அழ­காக மாற்­றி­னார் மரு­த­காசி.

வேற்­று­மொ­ழிப் பாடல்­க­ளில் இப்­படி கற்­பனை வளத்­து­டன் எழு­தும் திறமை மரு­த­கா­சி­யி­டம் எல்­லை­யில்­லா­மல் இருந்­தது. இந்த திறமை இன்று அவ­ரு­டைய மகன் மரு­த­ப­ர­ணி­யி­டம் காணப்­ப­டு­கி­றது. நூற்­றுக்­க­ணக்­கான திரைப்­ப­ டங்­க­ளை­யும் சின்­னத்­திரை தொடர்­க­ளை­யும் தமி­ழில் மொழி­மாற்­றம் செய்து சாத­னைப்­ப­டைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்.

மெட்­டுக்கு பாடல் எழு­தி­ய­தால், பாட­லா­சி­ரி­யர் என்ற முறை­யில் ஐம்­ப­து­க­ளில் ஆறேழு வரு­டங்­கள்  கண்­ண­தா­சன் தளர்ந்­து­போ­யி­ருந்­தார். வச­ன­கர்த்­தா­வாக அவர் வலம் வந்­து­கொண்­டி­ருந்­தார்.

இந்­தக் கால­கட்­டத்­தில், முதன்மை திரைக்­க­வி ­ஞ­ராக மரு­த­காசி கொடி­கட்­டிப் பறந்­தார். ‘மணப்­பாறை மாடி கட்டி’, ‘வசந்த முல்­லைப்­போலே வந்து’, ‘முல்லை மலர் மேலே’, ‘காவி­யமா நெஞ்­சின் ஓவி­யமா’, ‘ஆடாத மன­மும் உண்டோ’, ‘நினைந்து நினைந்து நெஞ்­சம் உரு­குதே’ என்று நீளத்­தொ­ட­ரும் சில நூறு சிரஞ்­சீ­விப் பாடல்­களை எழு­தி­னார் மரு­த­காசி. இசை நய­மும் குரல் நய­மும் பொருட்­செ­றி­வும் கொண்ட இந்­தப் பாடல்­கள், தமிழ் மொழி­யின் பண்­பாட்­டுச் சொத்­தாக விளங்­கு­கின்­றன.

துயி­லி­லி­ருந்து மீண்­ட­வர்­போல், தன்­னு­டைய பாடல் எழு­தும் திறனை உல­கத்­திற்­குக் காட்ட நினைத்­தார் கண்­ண­தா­சன். ‘மாலை இட்ட மங்கை’, ‘சிவ­கங்கை  சீமை’, ‘கவ­லை­யில்­லாத மனி­தன்’ என்று

படங்­கள் எடுத்­தார். பாட்­டுத் துறை­யில் சுவடு பதித்­தா­லும், வேறு பல அவ­தி­க­ளுக்­கும் உள்­ளா­னார்.  

மேடைப் பேச்­சா­ள­ராக மிளிர்ந்த கா.மு.ஷெரீப், அந்த வழி­யில் சென்று பாட்­டெ­ழு­தும் தொழி­லைக் கெடுத்­துக்­கொண்­டார். ஆனால், பாட்­டெ­ழு­து­வது ஒன்­றையே கடைப்­பி­டித்து, திரை இசை­யில் ஒரு நிறை­வான வசந்­த­கா­லத்­தைக் கண்­டு­விட்­டார் மரு­த­காசி.

இந்த நேரத்­தில், அவரை நண்­பர்­கள் படத்­த­யா­ரிப்­பில் இழுத்­து­விட, ‘அல்லி பெற்ற பிள்ளை’ என்ற ஒரே படத்­தின் வாயி­லாக, ஒரு மிகப்­பெ­ரிய சரிவை கண்­டார்.

‘பா-’வ­ரி­சைப் படங்­க­ளா­லும் தேவ­ரின் ‘தா-’வ­ரி­சைப் படங்­க­ளா­லும் கண்­ண­தா­சன் உச்­சத்­தைத் தொட்­டி­ருந்த நேரம் அது. சிவா­ஜி­யின் நண்­பர் பெரி­யண்­ணன், அவர் சார்­பில் ‘பந்­த­பா­சம்’ என்ற படத்தை எடுக்­க­வி­ருந்­தார்.

அவர் எழு­திய பாடல்­க­ளின் இணை­யற்ற வெற்­றி­க­ளுக்­குப் பிறகு, கண்­ண­தா­சன் தன்­னு­டைய ‘ரேட்’டை கணி­ச­மாக உயர்த்­திக்­கேட்­டார். அதை ஏற்க மறுத்த பெரி­யண்­ண­னும் சிவா­ஜி­யின் தம்பி சண்­மு­க­மும், மரு­த­கா­சி­யைப் பாடல்­கள் எழுத வைக்க நினைத்­தார்­கள்.

மரு­த­கா­சியை நுங்­கம்­பாக்­கத்­தில் இருந்த அவர் இல்­லத்­தில் வந்து சந்­தித்­தார் கண்­ண­தா­சன். பெரி­யண்­ண­னு­டன் தனக்கு ஏற்­பட்ட பிரச்­னை­யில் மரு­த­காசி இடை­யில் வர­வேண்­டாம் என்று மரு­த­கா­சியை சக-­­பா­ட­லா­சி­ரி­யர் என்ற முறை­யில் கேட்­டுக்­கொண்­டார். இதன் பிறகு, கும்­ப­கோ­ணம் அரு­கில் உள்ள சொந்த ஊரான மேலக்­கு­டிக்­காட்­டிற்கு மரு­த­காசி சென்று விட்­டார். அந்­தப் பாடல்­கள் பதி­வா­க­வில்லை.

திரா­விட இயக்க சிந்­த­னை­யில் தான் இருந்த காலத்தை ‘வன­வா­சம்’ என்­பார் கண்­ண­தா­சன். மரு­த­கா­சியை பொறுத்­த­வரை, அறு­ப­து­க­ளின் முதல் பாதி­யில், திரைப்­பா­ட­லா­சி­ரி­ய­ராக சில ஆண்­டு­கள் அவ­ரும் சொந்த ஊரில் அஞ்­ஞா­த­வா­சம் அனு­ப­வக்க நேர்ந்­தது.


குண்­ட­டி­யி­லி­ருந்து மீண்டு வந்த எம்.ஜி.ஆர்.தான், ‘விவ­சாயி’ (1967) படத்­தின் வாயி­லாக மரு­த­கா­சி­யின் அடுத்த அத்­தி­யா­யத்­திற்கு அடி­கோ­லி­னார். ‘விவ­சா­யி’­­யில், மரு­த­கா­சி­யும் உடு­ம­லை­யா­ரும் இணைந்து எழு­தி­னார்­கள்.

கண்­ண­தா­ச­னும், அவ­ரு­டன் போட்­டிக் போட்­டுக்­கொண்டு அவ­ரைக் காய­டித்­துக்­கொண்­டி­ருந்த வாலி­யும் கோலோச்­சிக்­கொண்­டி­ருந்த கால­கட்­டத்­தில், வாய்ப்­பு­கள் குறைந்­தா­லும் தன்­னு­டைய வாசம் குறை­ய­வில்லை என்­பதை மரு­த­காசி தொடர்ந்து நிரூ­பித்­துக்­கொண்­டி­ருந்­தார்.

சில போது­க­ளில், கண்­ண­தா­சன் அவ­ரு­டன் அள­வ­ளாவ வந்து சேர்­வார். அப்­போது, கண்­ண­தா­சன் தன்­னு­டைய பிர­க­ட­ன­மாக எழு­திய, ‘ஒரு கோப்­பை­யிலே என் குடி­யி­ருப்பு’ என்­கிற பல்­லவி, இரு­வ­ருக்­கும் பொது­வா­கிப்­போ­கும்.


(தொட­ரும்)