தைப்பூச திருநாள்: மலேசியாவின் பத்துமலை முருகன் கோவிலில் லட்சக்கணக்கானோர் வழிபாடு

பதிவு செய்த நாள் : 21 ஜனவரி 2019 12:09

கோலாலம்பூர்

தைப்பூச திருநாளை முன்னிட்டு, மலேசியாவில் லட்சக்கணக்கான மக்கள், பத்துமலை முருகன் கோவிலுக்கு காவடிகள் எடுத்துச் சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

தை மாதத்தில் பூச நட்சத்திரமும், முழுநிலவு நாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூச திருவிழாவாகும். இவ்விழா உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூச விழா மிகவும் தொன்மை வாய்ந்தது. தைப்பூசத்தன்று முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். 1008 சங்காபிஷேகம், லட்சார்ச்சனை, வீதி உலா ஆகியவை நடைபெறும். அன்றைய தினம் கிராம தெய்வங்களுக்கும், பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.

அறுபடை வீடுகளான பழனி, திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட இடங்களில், தைப்பூச திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமானை வழிபடும் அதே வேளையில் சிவபெருமானுக்கும் இந்த நாளில் விசேஷ பூஜைகள் நடைபெறும். தமிழகம் மட்டுமல்லாது, முக்கிய திருவிழாவான தைப்பூசம், உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. முருகன் கோயில்களில் பெருந்திரளான பக்தர்கள் ஒன்று கூடி வழிபட்டனர்.

மலேசியாவில் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாகவும், உற்சாகமாகவும், பக்தி பரவசத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. பத்துமலை குகையில் உள்ள பிரசித்திபெற்ற முருகன் கோவிலுக்கு, 272 படிகள் ஏறிச்சென்று பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். காவடிகள் ஏந்தியும், நாக்கில் அலகு குத்தியும், பால் குடங்களை தலையில் சுமந்து சென்றும் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். பத்துமலை முருகனை மனமுருக வேண்டி அவர்கள் வழிபட்டனர்.

தமிழ்நாடு அறுபடை வீட்டிலும் பூசை

தமிழ்நாட்டில் திருச்செந்தூர், பழனி, திருத்தணி ஆகிய அறுபடை வீடு முருகன் கோவில்களிலும், பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி, பன்னீர் கவடி, பழக் காவடி உள்ளிட்ட பலவிதமான காவடிகளை சுமந்து சென்று தங்கள் கோரிக்கை கடன்களை முருகன் கோவில்களில் செலுத்தினர்.

பழனிகோவிலுக்கு பாதயாத்திரையாக பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்தனர். தைப் பூச தேரோட்டத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் வேண்டுதல் காணிக்கைகளை செலுத்தினர்.

நாகர்கோவில், மதுரை, தூத்துக்குடி ஆகிய ஊர்களிலிருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்து கடலில் நீராடி அரோகரா கோஷமிட்டனர் பக்தர்கள்.