தைப்பூச பெருவிழா: வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்

பதிவு செய்த நாள் : 21 ஜனவரி 2019 12:04

வடலூர்

கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞான சபையில் இன்று காலை 6:00 மற்றும் 10:00 மணிக்கு 7 திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. ஜோதி தரிசனத்தைக் காண ஏராளமான பக்தர்கள் சத்தியஞான சபையில் குவிந்தனர்.

ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த, வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க சுவாமிகள் வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார்.

இங்கு ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தைக் காண லட்சக்கணக்கானோர் வடலூருக்கு திரண்டு வருவர்.
நடப்பாண்டு 148-வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலை 5 மணியளவில் அருள்பெருஞ் ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது.
காலை 7.30 மணியளவில் தரும சாலை அருகே சன்மார்க்கக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனப் பெருவிழா இன்று (21-10-2019) திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
ஆறு கால ஜோதி தரிசனம்
முதல் தரிசனம் காலை 6:00 மணிக்கு நடைபெற்றது.

தொடர்ந்து, காலை 10:00 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெற்றது. 

அப்போது 7 திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் கிடைத்து. ஏராளமான பக்தர்கள் ஜோதி தரிசனத்தைக் கண்டனர்.

மீண்டும் இன்று மதியம் 1:00 மணிக்கும், இரவு 7:00 மணி, 10:00 மணி, மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 5:30 மணிக்கு என 4  முறை 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

விழாவைக் காணவரும் சன்மார்க்க அன்பர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் சத்திய ஞான சபை நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.