டிரம்ப், கிம் ஜாங் உன் சந்திப்பு நடைபெறும்போது, ஏன் மற்ற நாடுகளால் முடியாது?: நேபாளம் கேள்வி

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 16:51

புதுடில்லி

அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்பு நடைபெறும்போது, ஏன் மற்ற நாட்டு தலைவர்களின் சந்திப்பு நடைபெறக்கூடாது என சார்க் மாநாடு குறித்து நேபாளம் கருத்து தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் சார்க் உச்சி மாநாடு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அந்த ஆண்டு, இந்தியா ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் கொடூரமான தாக்குதலை நடத்தினர். ஆகையால், அந்த மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளாது என அறிவித்தது. இதைத்தொடர்ந்து, வங்கதேசம், பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் அதை புறக்கணித்தன. ஆகையால், அந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது.

இந்த ஆண்டின் உச்சி மாநாட்டை பாகிஸ்தான்தான் நடத்தவேண்டும். பயங்கரவாதம், அத்துமீறி தாக்குதல் என பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து கருத்து வெளியிட்டார். இதில் பேசிய அவர்,”கடந்த வருடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெற்றது. பேச்சுவார்த்தைதான் பிரச்சனைக்கான சரியான தீர்வு என்று அவர்கள் எண்ணியதாலேயே அந்த சந்திப்பு நடைபெற்றது” என்று குறிப்பிட்டார்.

”அந்த இரு பெரும் தலைவர்களின் சந்திப்பு நடைபெறும்போது, ஏன் மற்ற நாடுகளின் தலைவர்களும் சந்தித்துப் பேசக்கூடாது” என்று இந்தியா -பாகிஸ்தான் இடையிலான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.

“பிராந்திய பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டுமென்றால், தனியாக எதுவும் செய்யமுடியாது. இருதரப்பினரும் ஒன்றிணைந்து முயற்சிகள் எடுத்தால் மட்டுமே அதற்கு தீர்வு காண முடியும்” என்று கியாவாலி கூறினார்.