![]() | ![]() | ![]() |
மேகாலயா மாநிலத்தில் உள்ள காரோ மலை பிரதேச மாவட்டத்தில் கல்வி என்பது உண்மையில் எட்டா கனியாகவே உள்ளது. இங்குள்ள பள்ளிக் கூடங்கள் இடிந்து போய் உள்ளன. இந்த பள்ளிகளில் மாணவர்கள் படிப்பதையோ, ஆசிரியர்கள் கற்பிப்பதையோ பார்க்க முடியாது. பள்ளிக்கூட சுவர்கள் அழுக்கேறி கிடக்கின்றன. பார்ப்பதற்கே சகிக்கவில்லை.
ஆனால் டாடிங்கிரி சப்–டிவிஷன் அதிகாரியாக உள்ள சுவப்னில் டெம்பி, ஐ.ஏ.எஸ்., இந்த பள்ளிகளை இப்படியே விட கூடாது என்று கருதினார். அவர் பள்ளிக்கூடங்களுக்கு பல வர்ணங்கள் பூசி, படங்களை வரைந்து பார்ப்பதற்கு கண்ணை கவரும் வகையில் மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தார்.
கராக்பூர் ஐ.ஐ.டியில் படித்து முடித்த சுவப்னிலுலக்கு, கல்வியை விட மற்ற எதுவும் முக்கியமில்லை. அவர் மத்திய மனிதவள அமைச்சகத்தில் பணியாற்றியுள்ளார். அவருக்கு கல்வி பற்றிய தெளிவான அனுபவம் உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் எப்படி கல்வி விரைவாக முன்னேற்றம் அடைந்தது என்பதை நேரில் கண்டறிந்துள்ளார்.
“டாடிங்கிரி சப்–டிவிசன் அதிகாரி என்ற முறையில், நான் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதில் ஆர்வம் காண்பித்தேன். கல்விக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பள்ளிகளின் நிலைமையை பார்க்கும் போது, எனக்கு வருத்தமாக இருந்தது. அவை உடைந்தும், பாழடைந்தும் கிடந்தன. சுவர்களில் சுண்ணாம்பு என்பதை இல்லை. சில நேரங்களில் ஆசிரியர்கள் வருவதில்லை. படிப்பதற்காக மாணவர்களும் வருவதில்லை என்று கூறுகின்றார் சுவப்னில்.
இந்த மாவட்டதில் உள்ள பள்ளிகளில் தலா இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்கள் உள்ளனர். இரண்டு அல்லது மூன்று வகுப்பறைகளும், ௩௦ முதல் ௪௦ மாணவர்களும் உள்ளனர். பள்ளி கட்டடமும், வகுப்பறைகளும் படிக்க தோன்றாத அளவு மோசமாக உள்ளன. போதிய இடம் இல்லாத காரணத்தினால், எல்லா மாணவர்களும், ஆசிரியர்களும் ஒரே அறையில் இருக்கின்றனர்.
“இதை சீரமைக்க ஏதாவது செய்தாக வேண்டும். ஏனெனில் கல்வி இல்லாமல் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்த சப்–டிவிஷனில் உள்ள பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி முடிக்கும் நேரத்தில், நாங்கள் மாதிரி பள்ளி பற்றிய திட்டத்தை இறுதியாக்கி விட்டோம்” என்று சுவப்னில் தெரிவித்தார்.
இந்த சப்–டிவிஷனில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் உள்ளன. எல்லாவற்றையும் மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்துவது சாத்தியமில்லை. எனவே சுவப்னில் ஏதாவது ஒரு பள்ளியை மாதிரி பள்ளியாக மாற்றி, தேவையான வசதிகளை செய்து கொடுப்பது. இது உள்ளூர் மக்கள், மாணவர்களை எப்படி கவருகின்றது என்று பார்ப்பது. மக்கள், மாணவர்களை கவர்ந்தால், மேலும் பல பள்ளிகளை மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்துவது என்று சுவப்னில் முடிவு செய்தார்.
“டில்சிகிரி என்ற இடத்தில் உள்ள பள்ளியை மாதிரி பள்ளியாக தரம் உயர்த்த முடிவு செய்தோம். ஏனெனில் இது சப்–டிவிஷன் தலைமையகம் அருகே உள்ளது. இதனால் இதை எளிதாக கண்காணிக்கலாம். நாங்கள் பள்ளிகளுக்கு அடிக்கடி சென்றதால், ஆசிரியர்கள் தினசரி வர ஆரம்பித்தனர். நிலைமை முன்னேற்றம் அடைய தொடங்கியது” என்று சுவப்னில் தெரிவித்தார்.
பள்ளிகளை சீரமைப்பதற்காக கிரவுட் பண்டிங் என்ற முறையில் மிலாப் டாட் ஆர்க் (Milaap.org) என்ற இணைய தளம் மூலம் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. பிறகு மக்கள் மத்தியில் இந்த திட்டம் எவ்வளவு முக்கியமானது என்று விளக்கி நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். மக்கள் அவர்களால் முடிந்த அளவு நன்கொடை வழங்கினார்கள். மேகாலயாவிற்கு வெளியே உள்ளவர்களும் நன்கொடை வழங்கினார்கள். டில்சிகிரியில் உள்ள பள்ளியை புதுப்பிக்க தொடங்கினார். கட்டடத்தை சீரமைத்து சுவர்களுக்கு வர்ணம் பூசப்பட்டன. திறமையான ஓவியர்கள் படங்கள் வரைந்தனர். குழந்தைகள் விளையாட பொம்மைகள், படிக்க புத்தகங்கள், கதை புத்தகங்கள், தரை விரிப்பு, மெத்தை, தண்ணீர் சுத்திகரிக்கும் சாதனம், உணவு சூடாக பாதுகாக்க பாத்திரங்கள், மேலும் பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதன் தொடக்க விழாவில் கிராமத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். இது மறக்கமுடியாத நிகழ்ச்சி. இதன் மூலம் அவர்கள் இதே மாதிரி மற்ற பள்ளிகளிலும் செய்யும்படி உணர்த்தினர். இதில் இருந்துதான் ஒரு பள்ளியை தத்தெடுப்போம் என்ற யோசனை பிறந்தது.
உதவி கமிஷனர் ஸ்ரீராம் சிங் ஐ.ஏ.எஸ்., வழிகாட்டுதன் பேரில் கல்வியை மேம்படுத்த ஸ்டார் [STAR –School Transformation by Augmenting Resources] பள்ளிகளில் வளங்களை மேம்படுத்துவது என்ற திட்டத்தை செயல்படுத்த தொடங்கினார்கள். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடிவு செய்தனர். இதற்காக மக்களிடம் நிதி திரட்டவும், தொழில், வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியை பயன்படுத்திக் கொள்ளவும் முடிவு செய்தனர்.
“ஸ்டார் திட்டத்தின் கீழ், நாங்கள் நூலகத்தையும் கட்டினோம். பலர் புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்கள். குழந்தைகள் படிக்க வாய்ப்புள்ள சூழ்நிலையில் வளரவேண்டும். இப்போது இந்த நூலகத்திற்கு சில மாணவர்கள் வருகின்றனர். இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. வருங்காலத்தில் மேலும் பல குழந்தைகள் படிக்க வருவார்கள். நாங்கள் வேலை வாய்ப்பு குறித்தம் ஆலோசனைகளை வழங்குகின்றோம். பல்வேறு துறைகயைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று, அவர்கள் எப்படி முன்னேறினார்கள் என்பதை அனுபவபூர்வமாக விளக்குகின்றனர்” என்று சுவப்னில் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, நாங்கோஸ்டின் என்ற இடத்தில் உள்ள பள்ளியை சீரமைக்க, தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளதாக சுவப்னிலுக்கு தெரிய வந்தது.
“அவரது தாராள மனோபாவம் எனக்கு தூண்டுதலாக இருந்தது. நான் ஒரு பள்ளிக் கூடத்தை சீரமைக்க இரண்டு மாத சம்பளம் வழங்கினேன். அத்துடன் தீபாவளி நேரத்தில் பள்ளியை சீரமைக்க இணைய தளம் மூலம் நிதி திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டேன். பலரின் உதவியுடனும், பலர் வழங்கிய நிதி உதவியுடனும், எங்கள் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. எனது சம்பளத்தில் இருந்து சீரமைத்த பள்ளி புதியது போலவும், அழகாகவும் உள்ளது. இது தொடக்கம் தான், இதே போல் ஆயிரக்கணக்கான பள்ளிகளை சீரமைக்க வேண்டும். கல்வி மட்டுமே எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு. நீங்கள் படித்து, நல்ல வேலையில் இருந்து, சுயமாக இருக்க முடியும் என்றால், உங்கள் முன்னேற்றத்தை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று சுவப்னில் கூறுகின்றார்.
நன்றி: தி லாஜிகல் இந்தியன் இணைய தளத்தில் சுமந்தி சென்.