முத்தலாக் அவசர சட்டம் மீண்டும் இயற்ற அரசுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 16:39

புதுடில்லி

முத்தலாக் அவசர சட்டத்தை மீண்டும் இயற்ற மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரின் போது முஸ்லிம் பெண்களின் திருமண உரிமைகளை பாதுகாக்கும் முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை.

மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட கால தாமதத்தினாலும் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்படவில்லை.

முத்தலாக் அவசர சட்டம் 6 மாத காலத்துக்குள் மாநிலங்களவையில் மசோதாவாக நிறைவேற்றப்படாததால், அதனை மீண்டும் அவசர சட்டமாக்க மத்திய அரசு அமைச்சரவையின் ஒப்புதல் கோரி கடிதம் அனுப்பி இருந்தது.

இந்நிலையில் முத்தலாக் அவசர சட்டம் இயற்றும் அரசின் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

முத்தலாக் சட்டத்தில் மூன்று முறை தலாக் கூறுவதை சட்ட விரோதம் என்றும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு எவ்வளவோ முயற்சித்தது. ஆனால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் ஜனவரி 31-ம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்ய முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று இந்திய மருத்துவ கவுன்சில் அவசர சட்டத்துக்கான முறையான மசோதா இந்திய மருத்துவ கழக சட்டத் திருத்தம் 2018 என்ற பெயரில் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்ற முடியவில்லை.

அதனால் இந்திய மருத்துவ கழகத்தைத் தொடர்ந்து நடத்தும் குழுவுக்கு அவசர சட்டம் இயற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.