உத்தர பிரதேசத்தில் தனித்து போட்டியிட தயார்: காங்கிரஸ்

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 16:31

லக்னோ

உத்தர பிரதேச மாநிலத்தில் தனித்து போட்டியிட தயாராக இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பக்‌ஷி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதனால் மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் இந்த மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக 71 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான அப்ணா தளம் 2 இடங்களிலும் வெற்றிபெற்றன. ஆனால் கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக எதிர்க்கட்சிகளிடம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மாநிலத்தின் பிரதான கட்சிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைக்கிறது. மெகா கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கழற்றிவிடப்பட்டுள்ளது.

சமாஜ்வாடி கட்சியின் தேசிய துணைத் தலைவர் கிரண்மாய் நந்தா பேசுகையில், உத்தர பிரதேசத்தில் பாஜகவை தோற்கடிக்க எங்களது கூட்டணியே போதும். காங்கிரஸ் தேவையில்லை. உத்தர பிரதேச மாநிலத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் ஒரு முக்கியமற்ற கட்சியாகும். எனவே அதை இணைப்பது தொடர்பாகவும், நீக்குவது தொடர்பாகவும் எதனையும் நாங்கள் யோசிக்கவில்லை. கூட்டணியில் காங்கிரஸ் சேர்ந்தால் 2 தொகுதிகள் வழங்கப்படும், இதுதொடர்பாக காங்கிரஸ்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியும், சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியும் உத்தர பிரதேசத்தில்தான் உள்ளன. இந்த இரு தொகுதிகளில் வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டுக்கொள்ளலாம் என்று மறைமுகமாக கூறினார். இப்போது காங்கிரஸ் இல்லாமல் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் தனியாக போட்டியிட தயாராக இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பக்‌ஷி கூறியுள்ளார்.

அகிலேஷ் யாதவும் மாயாவதியும் நாளை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்பு வெளியிடவுள்ளனர். இந்நிலையில் உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராஜிவ் பக்‌ஷி இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். இதில் பேசிய அவர், ”நாங்கள் ஒரு பிரதான அரசியல் கட்சி. ஆகையால், உத்தர பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் தேர்தல்களில் தனித்து போட்டியிடவும் தயாராக இருக்கின்றோம்” என்று தெரிவித்தார்.

“மக்களவையில் எங்களுக்கு மட்டும் தற்போது 45 இடங்கள் உள்ளன. தேசிய கட்சியை சுற்றி பிராந்திய கட்சிகள் அனைத்தும் ஒன்றாக கட்டமைக்கப்படவேண்டும். ஒருமித்த கருத்துக்களை உடைய கட்சிகளுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கின்றோம். எங்களுடன் அதுபோன்ற கட்சிகள் சேரலாம்” என்று ராஜிவ் பக்‌ஷி அழைப்பு விடுத்தார்.