பத்திரிகையாளர் கொலையில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மித் ராம் சிங் உள்பட 4 பேர் குற்றவாளி

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 16:30

பஞ்சகுலா

பத்திரிகையாளர் ராம் சந்தர் கொலையில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகள் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பத்திரிகையாளர் ராம் சத்ரபதியை கொன்ற வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் சிங், குல்தீப் சிங், நிர்மல் சிங், க்ரிஷான் லால் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என சிபிஐ தரப்பில் ஆஜரான எச்.பி.எஸ். வர்மா கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி ஜக்தீப் சிங் இந்த நான்கு பேருக்கான தண்டனை விவரங்களை வரும் 17-ம் தேதியன்று அறிவிப்பதாக கூறினார்.

வழக்கு விசாரணைக்காக ரோஹ்தாக் மாவட்டத்தில் உள்ள சுனாரியா சிறையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸிங் முறையில் குர்மீத் ஆஜரானார்.

குர்மீத் ராம் தனது ஆசிரமத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகளை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி தனது வீட்டின் வெளியே கொடூரமாக கொல்லப்பட்டார். ”பூரா சச்” நாளிதழில், சிர்சா மாவட்டத்தில் உள்ள குர்மீத் ராமின் தேரா சச்சா சவுதா ஆசிரமத்தில் பெண்கள் எவ்வாறு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப் படுகிறார்கள் என்பது பற்றிய செய்தி வெளியிட்டதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்.

கடந்த 2003-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் 2006-ம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் குர்மீத் ராம் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டார்.