ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதர்' விருது: ஆர்.எஸ்.பாரதி ஒப்படைத்தார்

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 16:28

சென்னை

தி.மு.க.தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட 'சிறந்த மனிதர்' விருதை அவரது சார்பாக பெற்றுக்கொண்ட ஆர்.எஸ்.பாரதி இன்று ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,

இந்திய அரசால் 2002-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 'ப்ரவசி பாரதிய திவாஸ்' அமைப்பின் சார்பில், கேரளாவில் 'ப்ரவசி பாரதிய நாள் விழா' நடத்தி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ம் நாளன்று, நம் நாட்டின் பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபடும் உலகம் முழுவதுமுள்ள என்ஆர்ஐ எனப்படும் அயலக இந்தியர்களில் சிறந்தவர்களையும் - இந்தியாவில் சமுதாயத்தில் மற்றும் அரசியலில் சிறந்து விளங்குபவர்களையும் தேர்ந்தெடுத்து, அவ்விழாவில், அவ்வாண்டின் 'சிறந்த மனிதர்' என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, கேரள மாநிலம், திருவனந்தபுரம், பாளையம், வி.ஜே.டி. அரங்கத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற 'ப்ரவசி பாரதிய நாள் விழா' நடத்துவோர், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, 'சிறந்த மனிதர்' விருதினை கேரள மாநில ஆளுநர் நீதிபதி பி.சதாசிவம் வழங்கிட, திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக, அமைப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி பெற்றுக்கொண்டார்.

ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட 'சிறந்த மனிதர்' விருது மற்றும் கேடயத்தினை, இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில், ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்.

அப்போது முதன்மைச் செயலாளர் டி.ஆர். பாலு, துணைப் பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர்