மேற்கு வங்காளத்தில் காவல் நிலையத்திலே இளைஞரை தாக்கிய மாவட்ட மாஜிஸ்திரேட் இடமாற்றம்

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 16:18

கொல்கத்தா,

    மேற்கு வங்க மாநிலத்தில் தனது மனைவியைப் பற்றி டுவிட்டரில்  ஆபாச செய்தி வெளியிட்டதற்கு காவல் நிலையத்தின் உள்ளே சமபந்தப்பட்ட  இளைஞரை தாக்கிய  மாவட்ட மாஜிஸ்திரேட்   நிகில் நிர்மல் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவர் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக   இருந்தவர் நிகில் நிர்மல். இவரது மனைவிக்கு இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் தொடர்ந்து ஆபாச செய்திகள் அனுப்பினார். இது தொடர்பாக  நிகில் நிர்மல்லின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த தகவல் அறிந்து  காவல் நிலையத்திற்கு வந்த நிகில் நிர்மல் அந்த இளைஞரை காவல் நிலையத்தின் உள்ளே வைத்து சரமாரியாக அடித்துள்ளார். இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக நிகில் நிர்மல் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டு பழங்குடி மேம்பாட்டு கூட்டுறவு கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவத்தின் மாநில நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்  என மூத்த மேற்கு வங்க அரசு அதிகாரி தெரிவித்தார்.

காலியாக உள்ள அலிப்பூர்துவர் மாவட்ட மாஜிஸ்திரேட்   பதவிக்கு  புதிதாக   சுப்பன்ஜான் தாஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.