ஜிஎஸ்டி குழப்பத்தை நீக்கிய பெருமை காங்கிரஸ் ஆளும் மாநில நிதி அமைச்சர்களையே சேரும்: ப.சிதம்பரம்

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 15:54

புதுடில்லி

மத்திய அரசினால் ஏற்பட்ட ஜிஎஸ்டி குழப்பத்தை நீக்கிய பெருமை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் நிதி அமைச்சர்களையே சேரும் என மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டில்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் 32-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இது குறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“மத்திய அரசினால் ஏற்பட்ட ஜிஎஸ்டி குழப்பத்தை ஜிஎஸ்டி கவுன்சில் ஒழுங்குபடுத்தி வருகிறது. இதில் கலந்துகொண்டு மிகவும் துடிப்புடனும் துல்லியமான ஆலோசனைகளையும் வழங்கிய காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் நிதி அமைச்சர்களுக்கு நன்றி.

காங்கிரஸ் நிதி அமைச்சர்களின் பெரும்பாலான முயற்சிகளினால் தான் நேற்று ஜிஎஸ்டி குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதன் மூலம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு சிறிதளவு நிவாரணம் கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி கூட்டத்தில் காங்கிரஸ் நிதி அமைச்சர்கள் ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.