மெக்சிகோ எல்லைச்சுவர் கட்ட நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும் : அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 15:28

வாஷிங்டன்,

அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு சுவர் கட்ட நிதி ஒதுக்கவில்லை என்றால் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.

கடத்தல்காரர்கள் மற்றும் சட்டவிரோத குடியேறிகளை தடுக்கும் வகையில் எல்லையில் பலமான சுவர் ஒன்றை கட்டுவதாக தன் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிபர் டிரம்ப் வாக்குறுதி அளித்தார்.

அதிபராக பதவி ஏற்றப்பின் எல்லை சுவர் கட்டுவதற்கான நடவடிக்கையில் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக எல்லை சுவர் கட்ட பட்ஜெட்டில் 560 கோடி டாலர் நிதி ஒதுக்கும்படி டிரம்ப் எம்.பிக்களிடம் கோரினார். ஆனால் அதற்கு எதிர்கட்சியான ஜனநாயக கட்சியினர் மறுத்துவிட்டனர். அதனால் அமெரிக்க அரசு நிர்வாகம் டிசம்பர் மாதம் முடங்கியது.

21வது நாளாக தொடரும் அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பினர் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. அதிபர் டிரம்ப் எல்லை சுவர் கட்டுவதில் பிடிவாதமாக உள்ளார். தேவைப்பட்டால் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தி விரைவாக எல்லை சுவரை கட்டி முடிப்பேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எல்லையில் அதிபர் டிரம்ப்

அமெரிக்காவின் தெற்கு எல்லை மாகாணமான டெக்சாஸுக்கு இன்று சென்ற அதிபர் டிரம்ப் அங்குள்ள சர்வதேச எல்லைப்பகுதியை பார்வையிட்டார்.

தற்போது ஆயிரக்கணக்கான மத்திய அமெரிக்க அகதிகள் டெக்சாஸ் எல்லையில் ஊடுறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் நிலைமையை ஆராய டிரம்ப் அங்கு நேரில் சென்றார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதிபர் டிரம்ப் அவசரநிலை பிரகடனப்படுத்துவாரா? என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஆம் என்று பதிலளித்தார் டிரம்ப்.

‘‘எல்லை சுவர் கட்டுவது மிகவும் அவசியமானது. அதற்கு அதிகம் செலவாகாது. அவசரநிலை பிரகடனப்படுத்தி சுவரை வெகு விரைவில் கட்ட முடியும்’’ என டிரம்ப் தெரிவித்தார்.

சமீபத்தில் அமெரிக்காவில் குடியேறி ஒருவரால் சுட்டுக்கொல்லபப்ட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த காவல்துறை அதிகாரி ரெஜ்ஜி சிங் குறித்து பேசிய அதிபர் டிரம்ப் ‘‘இதுபோன்ற சம்பவங்கள் நம் நாட்டில் நடக்கக்கூடாது. நாம் குற்றங்களை குறைக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஆனால் தெற்கு எல்லை வழியே வரும் சட்டவிரோத குடியேறிகளால் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன’’ என்று டிரம்ப் சாடினார்.

டிரம்ப் அவசரநிலை பிரகடனப்படுத்தினால் அதற்கு எதிராக வழக்குகள் தொடரப்படும் என எதிர்கட்சியினர் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து பேசிய அதிபர் டிரம்ப் ‘‘எந்த வழக்கையும் சந்திக்க நான் தயார். நிச்சயமாக அதில் நான் வெற்றி பெறுவேன்’’ என்று செய்தியாளர்களிடம் கூறினார்.