என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை: அலோக் வர்மா

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 12:17

புதுடில்லி

சிபிஐ இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அலோக் வர்மா இன்று தெரிவித்துள்ளார்.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால சிபிஐ இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது, மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குனராக நேற்று பொறுப்பேற்றார்.

பின்னர், டில்லியில் பிரதமர் இல்லத்தில் நியமனக்குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, நீதிபதி ஏ.கே.சிக்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு 2:1 என்ற பெரும்பான்மை முடிவின்படி எட்டப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மட்டும் அலோக் வர்மாவை நீக்கும் முடிவை ஏற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, தீயணைப்புத்துறை, குடிமை பாதுகாப்பு, ஊர்க்காவல்படை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

இந்நிலையில் அலோக் வர்மா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அற்பமான, பொய்யான மற்றும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் எனக்குப் பகையான ஒரு நபரால் (ராகேஷ் அஸ்தானா) உருவாக்கப்பட்டவை” என்று குறிப்பிட்டார்.

மேலும்,”சிபிஐ நிறுவனத்தின் ஒருமைப்பாட்டை அழிப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதைக் காக்க பல முயற்சிகளை எடுத்தேன். உச்சநீதிமன்றத்தின் உத்தரவும் கடந்த அக்டோபர் 23-ல் வெளியான சிவிசி உத்தரவுகளும் என்னுடைய உண்மைக்கான ஆதாரங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அலோக் வர்மாவின் பதவிக்காலம் ஜனவரி 31ஆம் தேதியோடு முடிவுக்கு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.