பாலங்கள், குடியிருப்புகள், குடிநீர் திட்டங்கள், திருமண மண்டபங்களை – முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்தார்

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 11:32

சென்னை

பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம், திண்டுக்கல்லில் குடிநீர் அபிவிருத்தி திட்டம், மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் திருமண மண்டபம், அன்னதானக்கூடம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி (Video Conferencing) மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று திறந்துவைத்தார்.

அரசு தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் இன்று திறந்து வைத்தவை பற்றிய விவரம் வருமாறு:

காஞ்சிபுரம் மாவட்டம் - பாலாறு பாலம்

காஞ்சிபுரம் மாவட்டம், எடயாத்தூர் ஊராட்சியில், பாலாற்றின் குறுக்கே 9 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தினை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள். மேலும், சென்னை, மதுரவாயலில்   6 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தையும், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், கல்லக்குடி  வைப்பம் சாலையில் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுபாலம் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

1 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், காஜாமலை பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருக்காக  கட்டப்படவுள்ள குடியிருப்பு கட்டடம் மற்றும் அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், சுத்தமல்லி வடகடல்  சாலையில் கட்டப்படவுள்ள உயர்மட்ட பாலம் ஆகியவற்றிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்கள்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களுக்கு என மொத்தம் 3 கோடியே 20 லட்சத்து 62 ஆயிரத்து 488 ரூபாய் மதிப்பீட்டிலான 50 ஜீப்புகளை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக,  7 ஓட்டுநர்களுக்கு ஜீப்புகளுக்கான சாவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள்  வழங்கினார்கள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 29 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் 7 நபர்களுக்கு உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.

குடிநீர் அபிவிருத்தி திட்டம்

திண்டுக்கல் மாநகராட்சியில் 70 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை காணொலிக் காட்சி  மூலமாக துவக்கி வைத்தார்கள்.

மேலும், தஞ்சாவூர், தேனி, காஞ்சிபுரம் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் 79 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 6 திட்டப் பணிகளையும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தேனி மாவட்டத்தில் 20 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 குடிநீர் திட்டங்களையும் திறந்து வைத்தார்கள்.

மேலும், 169 கோடியே 72 லட்சம்  ரூபாய் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார்கள்.

திருமண மண்டபங்கள் திறப்பு

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் 16 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அதிநவீன திருமண மண்டபம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம்,  சோமாசிபாடி, அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக்கூடம்  ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்கள்.

 மேலும், 36 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள திருமண மண்டபங்கள், யாத்ரி நிவாஸ்கள், ஓய்வுக்கூடம் ஆகியவற்றிற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, பா. பென்ஜமின்,  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்  சேவூர் எஸ்.இராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன்,   சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  அபூர்வ வர்மா,  இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் / ஆணையர் தா.கி.ராமச்சந்திரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.