தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்திலிருந்து மேற்கு வங்கம் விலகல்: மம்தா அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2019 20:14

கொல்கத்தா

தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்திலிருந்து மேற்கு வங்க அரசு விலகுவதாகவும் திட்டச் செலவுக்காக செலுத்தவேண்டிய 40 சதவீதத் தொகையை மேற்கு வங்க அரசு செலுத்தமாட்டாது என்றும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று அறிவித்தார்.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த வேண்டும் விரும்பினால் அதற்கான மொத்தச் செலவையும் மத்திய அரசுதான் செலுத்த வேண்டும் என்று மம்தா குறிப்பிட்டார்.

மேற்கு வங்கம் ஏற்கெனவே ஸ்வஸ்த்யா சதி ஹெல்த் திட்டத்தை நடத்தி வந்தது. இப்பொழுது அந்தத் திட்டத்தை மத்திய திட்டத்தோடு இணைத்துவிட்டார்கள். இனிமேல் நாங்கள் எதற்கு 40% செலவழிக்க வேண்டும் என்றார் மம்தா.

ஒடிசாவில் மாநில அரசு ஒரு சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை நடத்தி வருகிறது. பிஜு ஸ்வஸ்த்யா கல்யாண் யோஜனா என்பது அந்தத் திட்டத்தின் பெயர். ஒடிசா அரசும் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தில் சேரப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.

மேற்கு வங்கம் நாடியா மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்பொழுது மாநிலங்களிலும் மாநில அரசுக்கு இணையான அரசை மத்திய அரசு நடத்திவருகிறது என்று மம்தா பானர்ஜி கூறினார்.

சுகாதாரத் திட்டங்கள், வீட்டுவசதித் திட்டங்கள், கல்வித் திட்டங்கள், உள்கட்டமைப்புத் திட்டங்கள், கன்யாஸ்ரீ திட்டங்களைக்கூட நடத்துவேன் என்று மத்திய அரசு கூறுகிறது. அப்படியானால் மாநில அரசுகள் எதற்கு? தெற்கு மாநிலங்களில் ஒரு இணை அரசை நடத்த நினைக்கிறீர்களா? மாநிலங்களில் போட்டி அரசை நடத்த விரும்புகிறீர்களா? என்று மம்தா கேட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.