காங்கோ அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் பெலிக்ஸ் வெற்றி - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2019 19:31

கின்ஷாசா (காங்கோ),

காங்கோ குடியரசின் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ஃபெலிக்ஸ் அன்டோனி ஷிசெகடி வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காங்கோ நாட்டில் அதிபர் தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் அந்நாட்டுத்  தேர்தல் ஆணையம் தாமதித்து வந்தது. பொதுமக்களின் எண்ணத்தின்படி தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டும் என சர்வதேச நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததை அடுத்து, இந்த வாரம் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.  

இந்நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஃபெலிக்ஸ் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள், அதாவது 38.6 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எட்டியன் ஷிசெகடியின் மகன் ஆவார்.

இவரை எதிர்த்து ஆளும்கட்சி சார்பில் போட்டியிட்ட இம்மானுவேல் ரமஜானி ஷதாரி 40 லட்சம் வாக்குகளுடன் 23.8 சதவீத வாக்குகள் பெற்றார்.

அதிபர் ஜோசப் கபைலா தலைமையிலான அரசுக்கு வெற்றி வாய்ப்பு குறைந்ததால், அவர் இம்மானுவேலின் பின்புலத்தில் இருந்து அவரை இயக்குவார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.

எதிர்க்கட்சி வேட்பாளர் மார்ட்டின் ஃபயலு 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளுடன் 34.8 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதாக ஏறக்குறைய 2 வாரங்களுக்கு பின்னர் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 1960-ம் ஆண்டு காங்கோ சுதந்திரமடைந்த பின்னர் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடந்தது இதுவே முதல் முறையாகும்.

காங்கோவின் அதிபராக கடந்த 2001-ம் ஆண்டு முதல் கபைலா பதவியில் இருந்து வருகிறார். இவர் 3 முறை தொடர்ந்து அதிபராக இருந்ததை அடுத்து அவர் அதிபர் பதவியில் நீட்டிக்க தடை விதிக்கப்பட்டது.

ஆனால் தேர்தல் நடத்த தாமதமான 2 ஆண்டுகளில் அவர் மீண்டும் பதவியை பிடிக்க தில்லுமுல்லுவில் ஈடுபடுவார் என காங்கோ மக்கள் அஞ்சினர்.

தேர்தல் வெற்றி குறித்து ஷிசெகடி கட்சியின் தலைமை அலுவலகத்தில் பேசிய துணை பொது செயலாளர் ரூபன்ஸ் மிகின்டோ, “இது வாழ்நாள் முடிசூட்டுதல் நிகழ்ச்சியாகும். இது தேசத்தின் நல்லிணக்கத்துக்கான தொடக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.