மலேசியாவின் ஆளும் கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம், பிரதமர் மோடியுடன் சந்திப்பு

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2019 16:08

புதுடில்லி

இந்தியா வந்துள்ள மலேசியாவின் ஆளும் கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

தலைநகர் டில்லியில் ரைசினா மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள மலேசியாவின் ஆளும் பார்த்தி கியேடிலன் ராக்யர் கட்சித் தலைவரும், மலேசிய பாராளுமன்ற உறுப்பினருமான அன்வர் இப்ராகிமும் இந்தியாவுக்கு வந்துள்ளார். இப்ராகிமுடன், கேசவன் சுப்பிரமணியன் மற்றும் சந்தார குமார் ராமநாயுடு ஆகிய இரு பாராளுமன்ற உறுப்பினர்களுடம் உடன் வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடியை அன்வர் இப்ராகிம் சந்தித்துப் பேசினார். சமீபத்தில் நடைபெற்ற கட்சித் தலைவருக்கான தேர்தலில் வெற்றிபெற்றதற்கு பிரதமர் மோடி, அன்வர் இப்ராகிமுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். மேலும், கடந்த 2018 மே மாதம் மலேசியாவில் நடந்த முந்தைய சந்திப்பை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். இந்த சந்திப்பில், இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

முன்னதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை அன்வர் இப்ராகில் சந்தித்துப் பேசினார். இதில், இருநாட்டு உறவுகளையும் மேலும் வலுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 8ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அன்வர் இப்ராகிம் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் இருந்தால் தக்க நடவடிக்கை

இந்திய இளைஞர்களை தன் பேச்சுக்கள் மூலம் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட தூண்டியதாக இஸ்லாமிய மதபோதகரான ஜாகீர் நாயக் மீது தேசிய புலனாய்வு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதன் காரணமாக அவர் நடத்தி வந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. பின்னர், ஜாகீர் நாயக் வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க மலேசியா சென்றார். அவரிடம் மலேசிய குடியுரிமை உள்ளது. ஜாகீர் நாயக்கை நாடு கடத்தும்படி கடந்த ஜனவரி மாதம் மலேசிய அரசிடம் இந்தியா கோரிக்கை முன்வைத்தது. இந்தியா - மலேசியா இடையே குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைக்க வகை செய்யும் ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனாலும் ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என மலேசிய பிரதமர் மஹதீர் முகமது கடந்த வருடம் அறிவித்தார்.

இந்நிலையில், டில்லியில் இதுகுறித்து அன்வர் இப்ராகிமிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அன்வர் இப்ராகிம்,”நாயக் வழக்கில் எழும் புகார்கள் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். எங்களுக்கு சரியான தகவல்களும் ஆதாரங்களும் வேண்டும். ஆதாரம் தந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். தீவிரவாத செயல்களில் யார் ஈடுபட்டாலும் அதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று அன்வர் இப்ராகிம் தெரிவித்தார்.