மாருதி கார் விலை ரூ.10,000 வரை உயர்வு

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2019 15:41

புதுடில்லி

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி குறிப்பிட்ட சில மாடல் கார்களின் விலையில் ரூ. 10 ஆயிரம் வரை உயர்த்தியுள்ளது.

இந்த புதிய விலை மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் சுஸுகி கூட்டுறவுடன் மத்திய அரசு இணைந்து உருவாக்கிய மாருதி சுஸுகி நிறுவனம் தொடங்கப்பட்டு 35 ஆண்டுகளாகிறது.

கடந்த 35 ஆண்டுகளில் இந்திய ஆட்டோமொபைல் துறையில் குறிப்பாக கார்களின் உபயோகத்தில் மிகப் பெரும் மாற்றத்தை மாருதி சுஸுகி ஏற்படுத்தியது. 10 ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனையாகும் 10 கார்களில் 8 கார்கள் மாருதி நிறுவனத்தினுடையதாக இருக்கும் நிலையை உருவாக்கியது.

இந்நிலையில் மாருதி நிறுவனம் தனது குறிப்பிட்ட சில மாடல் கார்களின் விலையை இன்று உயர்த்தியுள்ளது. மாருதி அல்ட்டோ முதல் மாருதி பிரீமியம் கிராஸ்வோவர் வரை குறிப்பிட்ட கார்களின் விலை ரூ. 10 ஆயிரம் வரை (டில்லி ஷோரூம் விலை) உயர்த்தப்பட்டுள்ளது.

இதையடுத்து இவற்றின் விலை ரூ.2.53 லட்சம் முதல் ரூ.11.45 லட்சம் வரையிலும் விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி பொருட்களின் விலையேற்றம் மற்றும் அந்நிய செலாவணி விகித மாற்று உள்ளிட்ட காரணங்களுக்காக விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.