வாலு பையனை விடக்­கூ­டாது

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019

நெல்லை மாவட்­டம், அர­சுப் பள்­ளி­யில், 1976ல், 5ம் வகுப்பு படித்த போது நடந்த சம்­ப­வம் இது!

சுட்டி மாண­வன் நான்; ஏகப்­பட்ட குறும்­பு­கள் செய்­வேன். யாருக்­கும் தெரி­யா­மல், கரும்­ப­ல­கை­யில், வாத்­தி­யா­ருக்கு பட்­டப் பெயர் எழு­து­வது, பள்­ளிக்­கூட மணியை அடித்து விட்டு ஓடு­வது, அறை­ஞாண் கயிறு தெரிய, டவு­சர் போட்டு வரும் பையனை, மேஜை­யு­டன் கட்டி விடு­வது என்று, நான் செய்த சேட்­டை­கள் அதி­கம்.

ஏப்­ரல் ஒன்று முதல், நான்கு வரை­யில், 'ஏ.எப்.,' என்று, 'ஸ்டாம்பு' செய்து, மை பாட்­டி­லில் முக்கி எடுத்து, மாண­வர்­கள் சட்­டை­யில் குத்தி விடு­வது வழக்­கம்.

ஒரு­முறை, மாண­வர்­க­ளின் பின்­னால், 'ஏ.எப்., ஸ்டாம்'பை குத்­தி­ய­ப­டியே போய், தெரி­யா­மல், வாத்­தி­யா­ரின் முது­கி­லும் குத்தி விட்டு, ஓடி விட்­டேன்.

'ஏப்­ரல் பூல்' என்று அச்­ச­டித்­த­தைப் பார்த்து, சிரித்­தார் வாத்­தி­யார். மற்ற மாண­வர்­க­ளும், தங்­கள் சட்­டையை திரும்­பிப் பார்த்­த­ப­டியே இருந்­த­னர். 'அப்­பாடா... வாத்­தி­யார் பெரி­தாக எடுத்­துக் கொள்­ள­வில்லை... பிழைத்­தேன்' என்று நினைத்­தேன்.

மூன்று நாட்­க­ளுக்­குப் பின், மறு­ப­டி­யும், 'ஏ.எப்.,' அடித்த போது, என் கையை, வச­மாக, பிடித்­துக் கொண்­டான் ஒரு மாண­வன். அப்­ப­டியே இழுத்­துச் சென்று, வாத்­தி­யார் முன்­னால் நிறுத்­தி­னான். அவர்­கள் வலை விரித்து என்­னைப் பிடித்­தி­ருக்­கின்­ற­னர் என்­பது அப்­போது தான் தெரிந்­தது. பய­மாகி விட்­டது.

வாத்­தி­யார், கோபத்­து­டன், 'இந்த வாலு பையனை இப்­ப­டியே விடக் கூடாது; தண்­டனை தர வேண்­டும். 'லேப்'புக்கு போய், ஹைட்ரோ குளோ­ரிக் ஆசிட்டை அதா­வது, எச்2ஓ எடுத்து வா...' என்று, ஒரு மாண­வ­னி­டம் சொல்ல, ஓடிப் போய் எடுத்து வந்­தான்.

'இந்த ஹைட்ரோ குளோ­ரிக் ஆசிட்டை, உள்­ளங்­கை­யில், ஒரு சொட்டு விட்­டால் போதும், துளை போட்டு கீழ்ப்­பக்­கம் வந்து விடும். என்ன நாரா­யணா இது போதுமா... இல்லை இதை விட கொடு­மை­யான, எச்2ஓ வேண்­டுமா...' என்­றார்.

நான், பயத்­தில் அழ ஆரம்­பித்­தேன். என் கையை இழுத்து, உள்­ளங்­கை­யில் சொட்டு சொட்­டாக ஊற்­றி­னார். உடல் நடுங்­கி­யது; மற்ற மாண­வர்­க­ளும், கல­வ­ரத்­து­டன் பார்த்­த­னர். கையில், எந்த வலி­யும் இல்லை; எரிச்­ச­லும் இல்லை.

வாத்­தி­யார், சிரித்­த­ப­டியே, 'எச்2ஓ என்­றால் தண்­ணீரை குறிப்­பது. ஹைட்­ர­ஜன் இரண்டு மடங்கு; ஆக்­சி­ஜன் ஒரு மடங்கு என்று அர்த்­தம். உனக்கு பயம் காட்­டத் தான், இப்­ப­டிச் செய்­தேன். இனி­மேல், வால்­த­னம் செய்­யாதே...' என்று, தட்­டிக் கொடுத்­தார்.

ஒவ்­வொரு ஏப்­ரல் மாத­மும், மன­தில் பூக்­கும் அழ­கிய நினைவு இது!

– - எஸ். நாரா­ய­ணன், பொட்­டல்­பு­துார்.