மெய்­யும் பொய்­யும்!

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019

நரி­கள் இரண்டு, சிறு­வ­யதி லிருந்தே நல்ல தோழர்­க­ளாய் விளங்­கின. இரண்­டுமே இரு வேறு குணங்­க­ளைப் பெற்­றி­ருந்­தன. முதல் நரி உண்­மையை மட்­டுமே பேசும். அத­னால் அதன் பெயர் மெய்­யன். இரண்­டாம் நரி பொய்யை மட்­டுமே பேசும். அத­னால் அதன் பெயர் பொய்­யன்.

இருப்­பி­னும் இரு நரி­க­ளும் நண்­பர்­க­ளா­கவே இருந்­தன. ஒரு­நாள் இரு நரி­க­ளுக்­கும் இடையே வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது.

மெய்­யன் கூறி­யது...

‘‘உண்மை பேசு­ப­வர்­களே இந்த உல­கில் நல­மாக வாழ முடி­யும். இதற்கு பல சான்­று­க­ளும் உள்­ளன. அத­னா­லேயே நான் உண்மை மட்­டும் பேசி மெய்­யன் என்று பெய­ரெ­டுத்­தேன்’’ என்­றது.

உடனே பொய்­யன்,

‘‘அப்­பனே! நீ எந்­தக் காலத்­தில் இருக்­கி­றாய்’’

இது கலி­கா­லம். இன்று சுய­ந­லமே ஒவ்­வொரு வரை­யும் வழி­ந­டத்­து­கி­றது. சுய­ந­லம் கொண்­ட­வர்­கள் பொய்யை மட்­டுமே பேசு­வர். அவர்­க­ளா­லேயே இந்த உலகை ஆள­வும் முடி­யும். அத­னா­லேயே பொய்யை மட்­டும் பேசி நான் பொய்­யன் என்று பெய­ரெ­டுத்­தேன் என்­றேன்.

வாக்­கு­வா­தம் முற்­றி­யது. இன்­னும் கொஞ்ச நேரத்­தில் கைக­லப்பு ஏற்­ப­டும் போல் தோன்­றி­யது.

மெய்­யன் அந்­தக் கர­டியை பஞ்­சா­யத்­துக்கு அழைத்­தது. ‘‘கர­டி­யாரே! நீங்­களே சொல்­லுங்­கள். உண்மை பேசு­ப­வர்­கள்­தானே இந்த உல­கில் நன்­றாக வாழ முடி­யும்’’ என்று கேட்­டது.

‘‘ஆமாம்’’ என்­றது கரடி.

பொய்­யன் விட­வில்லை.

‘‘கர­டி­யாரே! பொய்­யைச் சொல்­ப­வர்­க­ளால் தான் இந்த உலகை ஆள­மு­டி­யும்..... உண்­மை­தானே’’ என்­றது.

‘‘ஆமாம்’’ என்­றது கரடி.

இரு­ந­ரி­க­ளும் கர­டியை முறைத்­தன. கரடி தப்­பித்­துக் கொள்ள நினைத்­தது.

‘‘நரி­களே! உங்­கள் பஞ்­சா­யத்தை தீர்க்க வல்ல நாட்­டாண்மை, சிங்க ராஜா­தான். அவரை போய்ப் பாருங்­க­ளேன்’’ என்­றது.

மெய்­ய­னும், பொய்­ய­னும் சிங்­கத்­தின் குகையை அடைந்­தன. தங்­கள் வழக்­கைச் சொல்­லும் முன், பொய்­யன் சிங்­கத்தை பார்த்து,

‘‘அரசே! உலகை ஆள நீ தான் மிகச்­சி­றந்­த­வன். உனக்­கா­கவே இந்த உல­கம் படைக்­கப்­பட்­டது. எங்கு சென்­றா­லும் நீ ராஜா­தான். உன்­னைக் கண்­டால் கட­வு­ளும் தலை வணங்­கு­வான்’’ என்­றெல்­லாம் பல­வா­றா­கப் புகழ்ந்து தள்­ளி­யது.

சிங்­கம் மகிழ்ந்து போனது. அந்­தப் பொய்­ய­னுக்கு ஏரா­ள­மான பரி­சு­க­ளை­யும் கொடுத்து மகிழ்ந்­தது.

அதைக் கண்ட மெய்­யன் தனக்­குள்,

பொய் பேசும் உனக்கே இத்­தனை பரி­சு­கள் என்­றால் உண்­மையே பேசும் எனக்கு எத்­தனை பரி­சு­கள் கிடைக்­கும்? என்று நினைத்­தது.

‘‘சிங்­கமே! உன்னை நீயே அர­சன் என்று சொல்­லிக் கொள்­கின்­றாய். உன்­னால் பிற உயிர்­க­ளுக்கு ஆபத்தே அன்றி, நன்மை ஏதும் இல்லை. உன்­னைப் பார்த்து பிற மிரு­கங்­கள் நடுங்­கு­வ­தி­லி­ருந்தே நீ எத்­தனை கொடூ­ர­மா­ன­வன்னு தெரி­யும்’’ என்­றது.

சிங்­கம் கோப­மா­னது. மெய்­யன் நரி மீது பாய்ந்­தது. ஒரே அடி­யில் அடித்து வீழ்த்­தி­யது. மெய்­யன் உண்மை பேசி­ய­தால் பரி­தா­ப­மாக இறந்­தது.