ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

பதிவு செய்த நாள் : 08 ஜனவரி 2019


* ஈசான்யமூலை என்பது என்ன? அதில் என்ன செய்வது நன்மையளிக்கும்? டி. நமசிவாயம், குறுக்குத்துறை.

கிழக்கு முதல் வடகிழக்கு வரை உள்ள திக்குகள் எட்டு. இவற்றிற்கு அதிபதியாக இந்திரன் முதலான தேவர்கள் இருக்கிறார்கள். வடகிழக்கு திசைக்கு அதிபதி, ஈசானர். அவரது பெயரில் அத்திசை ‘ஈசான மூலை’ என்று அழைக்கப்படுகிறது. சிவனுடைய அம்சம் பொருந்தியவர் ஈசானர். எனவே, மற்ற திசைகளைக் காட்டிலும் வலிமையானது இத்திசை. கட்டடம் கட்ட பூமி பூஜை செய்தல், முகூர்த்தக்கால் நடுதல் மற்றும் வீட்டில் பூஜையறை அமைத்தல் போன்றவற்றிற்கு ஏற்ற திசையாகும்.


* ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தை (கடல் நீர்) வீட்டில் தெளிக்கலாமா? கே. நல்லதம்பி, தென்காசி.

காசி, ராமேஸ்வரம் புண்ணிய தீர்த்தம் என்பது வழக்கில் உள்ளதுதானே! தாராளமாக தெளிக்கலாம்.

* பாலாலயம் என்றால் என்ன? த. வனஜா, வள்ளியூர்.

பழுதடைந்த ஒரு ஆலயத்தை முற்றிலுமாகப் புதுப்பித்துக் கட்டும்போது அக்கோயிலின் தெய்வ விக்கிரகங்களை வேறொரு சிறிய கோயில் அமைத்து பிரதிஷ்டை செய்து பூஜை செய்யவேண்டும். அச்சிறிய கோயிலுக்கு ‘பாலாலயம்’  என்று பெயர்.

* இருளும் தீய சக்திதானா... ஆன்மிகத்தின் எதிரியா? விளக்கமளிக்கவும். ஏ. பாலமுருகன், அம்பாசமுத்திரம்.

பகல் சிவனாகவும், இரவு உமாதேவியாகவும் போற்றப்படுகின்றன. சிவராத்திரி, நவராத்திரி என இருள் கூடிய இரவுதானே கொண்டாடப்படுகிறது? எனவே, இருள் என்பது தீய சக்தி கிடையாது. அந்த இருளைப் பயன்படுத்தி தவறு செய்பவர்கள்தான் தீய சக்திகள்.