திண்ணை 06–1–19

பதிவு செய்த நாள் : 06 ஜனவரி 2019

தொங்கும் தோட்டம்!

இல்லாத ஒன்றை நினைத்து ஏங்குவதை விட இருப்பதை சிறப்பாக்க முயற்சித்தால் நினைத்ததை விட அதிகமான பலன் கிடைக்கும். இன்றைய நவீன உலகில் சிலர் செய்யும் புத்திசாலித்தனம்தான், கையில் காசு இல்லையே என்று கவலைப்படமாட்டார். தேவைக்கேற்ப கிரிடிட் கார்டை தேய்த்து பொருள் வாங்குவதில்லையா... ஆனால், அப்படி வாங்குவதிலும் புத்திசாலித்தனம் வேண்டும். சிறப்பு சேர்க்க வேண்டும். கிரிடிட் லிமிட்டில் குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தைக்கட்டி விட்டால் வட்டி இல்லை. இந்த விஷயத்தில் சிறப்பாக கவனம் செலுத்த வேண்டும். அதுதான் இருப்பதை சிறப்பாக்கும்  முயற்சி.

காட்டு பகுதிகளில் நாடோடியாகத் திரிந்த மனித சமுதாயம் நதிக்கரை நாகரீகத்தை கடைப்பிடித்தார்கள். துவங்கிய காலக்கட்டம் கூட்டம் கூட்டமாக நாடோடியாக திரிந்தவர்களில் இப்படி நகர வாழ்க்கை நாகரீகத்தில் கால் பதித்ததில் குறிப்பிட்ட சில நாகரீகம்தான் இன்று வரை போற்றப்படுகிறது. யூப்ரடீஸ், டைக்ரீஸ் ஆகிய இரு நதிக்கரைகளுக்கும் இடைப்பட்ட பகுதியான மெசபடோமியோ சிந்து நதிக்கரையில் உருவான சிந்து சமவெளி நாகரீகம், நைல் நதிக்கரையில் உருவான எகிப்து நாகரீகம், இந்த மூன்று நாகரீகங்களும் கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமகால நாகரீகங்கள். அதில் நாகரீகத்தின் தொட்டில் என்று சொல்லப்பட்ட அந்த கால மெசபடோமியோவின் தலைநகர் பாபிலோன்.

பாபிலோனை ஆண்ட மன்னன் நெபுகட்நேஸர். இவரை இரண்டாம் நெபுகட்நேஸர் என்று சரித்திரம் குறிப்பிடுகிறது. இவருக்கு மெடஸ் நாட்டின் இளவரசி அமைடீஸ் மனைவியாக வந்தாள். பிறந்த நாட்டை விட்டு, புகுந்த வீட்டிற்கு வந்த அமைடீஸ் மிகவும் அமைதியாக மனவருத்தத்துடன் இருந்தார். அதைக் கவனித்த மன்னன், மனைவியின் சோகத்திற்கு காரணம் புரியாமல், குழம்பினான். மனைவியை சந்தோஷப்படுத்த முயற்சித்தான். முடியவில்லை. மனைவியின் சோகத்திற்கு நேரடியாகவே அவளிடம் காரணம் கேட்டான். அப்பொழுது அமைடீஸ் கணவனிடம் “எங்கள் நாடு போல் இங்கு பசுமையான தோட்டங்கள் இல்லை. எங்கள் நாட்டில் சுற்றி மலைப்பகுதி, மலையில் பசுமையான மரங்கள், பூந்தோட்டங்கள் பார்ப்பதற்கு குளிர்ச்சியாக மனதிற்கு சந்தோஷமாக இருக்கும். ஆனால், இங்கு அது போன்ற தோட்டங்கள் இல்லை. மலைப்பகுதி இல்லை. வெறும் வயல்களாகவே இருக்கின்றன. அதுதான் என் மனக்கவலைக்கு காரணம்” என்று சொல்ல உடனே இரண்டாம் நெபுகட்நேஸர் “இவ்வளவு தானே...? கவலைப்படாதே இங்கே உனக்காக நான் மலையையும், பூந்தோட்டத்தையும் உருவாக்குகிறேன்” என்று சொல்லிவிட்டு பாபிலோன் நகரில் செயற்கையாக பெரிய பாறைகளை அடுக்கி வைத்து குன்று போல் வைத்து ஒவ்வொரு அடுக்கு வரிசையிலும் பழ மரங்களை நட்டு வைத்து, பூச்செடிகளை வைத்து படரும் பூங்கொடிகளை அமைத்து முதன்முதலாக ஒரு தொங்கும் தோட்டத்தை வசதி வாய்ப்புகள் குறைவான அந்த கால கட்டத்தில் சிறப்பான முறையில் செய்து முடித்தான். தன் மனைவி, இல்லையே என்று கவலைப்பட்ட போது ஏன் இல்லை... இதோ இருக்கிறது என்று சிறப்பாக அமைத்த அந்த தொங்கும் தோட்டம்தான் பண்டைய நாகரீக உலகின் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக சரித்திரத்தில் இடம்பிடித்தது. மன்னன் தன் நாட்டில் மலைக்குன்று இல்லையே என்று கவலைப்படவில்லை. இல்லாத ஒன்றை தன்னிடம் இருக்கும் வசதிக்கேற்ப சிறப்பாக செய்ததால் அது உலக அதிசயமாகிவிட்டது. காலப்போக்கில், பூகம்பங்களினால் அவை பூமிக்குள் புதையுண்டாலும் இன்று பேசப்படுகிறதே! எனவே இல்லாத ஒன்றுக்காக ஏங்காமல் இருப்பதை சிறப்பாக்க முயற்சி செய்யுங்கள். வெற்றி கிடைக்கும்.

நேர்மை அடித்தளம், பொறுமை உரம்!

ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற அவனுக்குத் தேவை பொறுமை, புத்திசாலித்தனம், நேர்மை இப்படி அடித்தளத்தை உறுதியாக வைத்திருப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி பெற்று வெற்றிப்படிக்கட்டில் உயர்ந்து செல்வார்கள்.

இதற்கு உதாரணமாக, இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் டாடாவின் வாழ்க்கை சரித்திரத்தை குறிப்பிடலாம். கி.பி. 1859ம் ஆண்டு, அப்போது டாடாவுக்கு வயது 20. அவருடைய தந்தை ஒரு வியாபாரி. வியாபாரம் என்பது மற்றவர்களை ஏமாற்றி காசு சேர்ப்பதல்ல... வியாபாரத்தில் நியாயம், நேர்மை, கடின உழைப்பை கடைப்பிடித்தால் தான் முன்னேற்றம் உண்டு. இளைஞரான ஜாம் ஷெட் ஜீ நஸர் வான்ஜி டாடா, பிற்காலத்தில் இவரை, ஜே.என்.டாடா என்றே குறிப்பிட்டனர்.

தமது தந்தைக்கு வியாபாரத்தில் உதவி செய்யும் சாதாரண உதவியாளராக சேர்ந்தார் டாடா. அந்த சமயத்தில் அமெரிக்காவில் உள்நாட்டு போர் காரணமாக சில தொழில்கள் பாதிக்கப்பட்டன. அதுவரை இங்கிலாந்தில் இருந்த பஞ்சாலை தொழிற்சாலைக்கு, அமெரிக்காவிலிருந்து தான் பருத்தியை தருவித்தனர். உள்நாட்டுப்போரால் அமெரிக்க பருத்தி வரவு நிறுத்தப்பட்டது. இதனால் இங்கிலாந்து பஞ்சாலைகளுக்கு பருத்தி தேவை அதிகமாகிவிட்டது. இதற்கு இந்திய மார்க்கெட்டிலிருந்து பருத்தி வாங்க பஞ்சாலை நிறுவனங்கள் மு் வந்தனர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்த ஜே.என். டாடா விரும்பினார். துணிச்சலாக பருத்தி வியாபாரத்தில் தந்தையின் அனுமதியுடன் இறங்கினார். இதை கவனித்துக் கொள்வதற்காக தம்முடைய நிறுவனத்தின் கிளை ஒன்றை லண்டனில் திறந்தார். வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாக அபிவிருத்தியடைந்தது. லண்டனுக்கு குடிப்பெயர்ந்தார்.

கி.பி. 1868ம் ஆண்டு அமெரிக்க உள்நாட்டுபோர் முடிவடைந்தது. இதன் காரணமாக உலக மார்க்கெட்டில் பருத்திவிலை மளமளவென சரிந்துவிட்டது. பருத்தி கம்பெனி வியாபாரிகள் அனைவரும் பெரும் நஷ்டத்திற்கு ஆளாயினர்.

டாடாவின் இங்கிலாந்து அலுவலகம் திவாலாகிவிட்டது. இந்தத் தொழிலுக்காக, டாடா பலரிடம் வியாபார ரீதியில் கடன் வாங்கியிருந்தார். டாடா இளைஞராக இருந்தாலும் தமது தொழிலில் ஏற்பட்ட சரிவை, தனக்கு கடன் கொடுத்த அனைவரிடமும் தமது வியாபார சூழ்நிலையை வெளிப்படையாக கூறி, ஒளிவுமறைவின்றி, தெளிவாக கூறி, தான் வாங்கிய கடன்களை வட்டியும், முதலுமாக கொஞ்சம் கொஞ்சமாக தருகிறேன் என்று கூறினார்.

சொன்னபடியே தமது வியாபாரத்தை வேறு துறைகளுக்கு மாற்றினார். தன் கடன்காரர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற, மெல்ல மெல்ல அவர்களுடைய கடன்களை அடைத்தார். அவரது நேர்மையையும், பொறுமையையும் பார்த்து கடன்காரர்கள் அவரை பாராட்டினார்கள். அதில் பிரபலமான பணக்காரர் ஒருவர் ஜே.ஹெச் கெய்தர் என்பவர் டாடாவின் பொறுமை நேர்மையை குறிப்பிட்டு, “இளைஞனே.. நீ நிச்சயம் வாழ்க்கையின் பல சிகரங்களை தொடுவாய், அதற்குரிய மனோதிடமும், உழைப்பும் உன்னிடம் இருக்கின்றன” என்று மனம் திறந்து பாராட்டினார். அவர் கூறிய படியே டாடாவும், பல துறைகளில் தமது திறமையை பயன்படுத்தி பல சாதனைகளை புரிந்தார்.

பட்டி தொட்டிகளில் கூட டாடாவின் பெயர் பிரபலமாகிவிட்டது. இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தும், பெருமையும் அவருக்கு கிடைத்தன. அவர் தமது நேர்மையாலும், உழைப்பாலும் அடித்தளமிட்ட டாடா நிறுவனங்கள் நுாற்றாண்டுகளாக இன்று அவருடைய புகழ் நிலைத்து நிற்கும் அளவு செயல்பட்டு கொண்டிருக்கிறது. அவரது வெற்றிப்படிக்கட்டின் சாதனை உயரங்கள் உயர்ந்து கொண்டே இருப்பதற்கு அவரது நேர்மையான பண்பும், பொறுமையான குணமும், கடின உழைப்பும்தான் அடித்தளமாக இருக்கின்றன என்பது மறக்கமுடியாத உண்மை. அன்றைய ஜே.என் டாடா வரிசையில் இன்றைய ரத்தன் டாடா வரை அந்த டாடா என்ற பெயருக்கு ஒரு மதிப்பையும், கவுரவத்தையும் ஏற்படுத்தியுள்ளார்கள். உங்கள் வெற்றிக்கு நேர்மை என்ற அடித்தளமிட்டு, பொறுமை என்ற உரமிடுங்கள். வெற்றி நிச்சயம்.

– ஹெச். வசந்தகுமார்