கலைமாமணி வாமனன் எழுதும் ‘திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் 1918–2018’ – 45

பதிவு செய்த நாள் : 06 ஜனவரி 2019

பொற்கை பாண்டியனுக்கு பொன்னான இசை!

‘தாயைப்போல பிள்ளை நூலைப் போல சேலை’ படத்தில், நான்கு தலைமுறையாக போலீஸ்காரர்கள் உள்ள ஒரு குடும்பத்தை, பாரம்பரிய மணத்தோடு  காட்டினார் ஏ.பி. நாகராஜன். இது குறித்துப் பாராட்டும் பெற்றார்.

அத்துடன் விடாமல், பாண்டிய மன்னர்களில் நீதி தவறாமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய பொற்கைப் பாண்டியன் வரைக்கும் சென்றார். கவுரவ வேடத்தில் பொற்கைப் பாண்டியனாக நடித்த சிவாஜி கணேசனுடனும், ஏ.பி.என்.  இன்னுமொரு புதுமை செய்தார்.  

‘அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள், அறிவுகெட்டவனே’ என்று கேட்டுக்கொண்டு, ‘பராசக்தி’யில் ‘கலைஞர்’ மு. கருணாநிதி எழுதிக்கொடுத்த பிரசங்க மழை போன்ற  வசனங்களைப் பொழிந்து தள்ளிய சிவாஜி கணேசன், அந்த வெற்றிக்களிப்பில், சேரன் செங்குட்டுவனாகவும், சாம்ராட் அசோகனாகவும், சாக்ரடீசாகவும் பக்கம் பக்கமாக எதுகை மோனைகள் தெறிக்க எகிறிக்குதித்த வசனங்களை முழங்கி வந்தார்.

சிவாஜியின் இந்த சிம்மக்குரல் கர்ஜனையை  நிசப்தமாக்கி, ஒரு சொல் கூட பேசத் தேவையில்லாமல், முகபாவங்கள் வாயிலாக உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிப்பின் உச்சத்தில் ஏற்றிவைத்து விட்டார் ஏ.பி.என்!

இதன் தாக்கம் எப்படி இருந்தது பாருங்கள்! ‘தாயைப்போல பிள்ளை நூலைப் போல சேலை’ படத்தில், பொற்கைப் பாண்டியன்,  ஒரேயொரு ஓரங்க நாடகத்தில் மட்டும் வந்தாலும், அவர் படம் முழுக்க பிரசன்னமாகியிருப்பது போல் தோன்றுகிறது,  என்று ஒரு விமர்சகர் எழுதிவைத்தார்!

‘பாட்டி சொல்லும் கதை கேட்டாலே’ என்று பொற்கைப் பாண்டியனின் கதையைச் சொல்லும் ஓரங்க நாடகப் பாடலின் வாயிலாக, சிவாஜியின் முகபாவங்களை வெளிச்சம் போட்டுக் காட்டினார் ஏ.பி.நாகராஜன். அதைச் செய்ய அவருக்கு  மருதகாசி எழுதிய பாடலும், அதற்கு மகாதேவன் தந்த இசை வாகனமும் உதவின. அந்த ஓரங்க நாடகப் பாடல் ரசிகர்களை ஈர்த்தது.

தான் ஒரு வசனகர்த்தாவாக இருந்தபோதும், பேசப்படும் சொற்களைத் தள்ளிவிட்டு, இசைப் பாடலை நம்பினார் ஏ.பி. நாகராஜன். இதற்கு அவர் பெற்றிருந்த சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகப்பயிற்சி ஒரு காரணம் என்றால், இசையமைப்பாளர் மகாதேவன் மீது ஏ.பி.என். கொண்ட நம்பிக்கை இன்னொரு காரணம்.

திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், சூலமங்கலம் ராஜலட்சுமி, எல்.ஆர். ஈஸ்வரி ஆகியோர் பாடிய இந்த நாடகப் பாடல் வரிகளுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் உணர்ச்சிகளுக்கும், சொல்லமைப்புகளில் பொதிந்துள்ள தாள வேறுபாடுகளுக்கும் பொருத்தமான இசை நல்குவதில் மகாதேவனுக்கு இருந்த தன்னிகரில்லாத திறமையை கோடிட்டுக் காட்டியது.

ஏ.பி.என், வி.கே. ராமசாமியுடன் இணைந்து தயாரித்த ‘தா.போ.பி.நூ.போ.சேலை’ படத்தில், இரண்டு முக்கிய அம்சங்கள் விரிக்கப்பட்டன.

முதலாவது, படக்கதையில் முக்கிய இடம் பெற்ற போலீஸ் குடும்பம் குறித்தது. இதில், காமெடியன் சிவதாணு, மாஜி ராணுவ வீரரான கொள்ளுத்தாத்தா, அவர் மகன் (தாத்தா), கே. சாரங்கபாணி ஒரு ஹெட் கான்ஸ்டபிள்.

ஏட்டின் மகன் (அப்பா), வி. கே. ராமசாமி, ஒரு சப் இன்ஸ்பெக்டர்.  இவர் மகன், (கதாநாயகன்), மனோகர், ஒரு டி.எஸ்.பி.

போலீஸ் ‘டியூட்டி’யிலிருக்கும் போது உறவுமுறை சிறிதும் எட்டிப்பார்க்காத அலுவலக வகையில் நடப்பதும், வீட்டுக்கு வந்து சீருடையைக் களைந்ததும் குடும்ப உறவுமுறைப்படி நடப்பதும், அந்நாளைய ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. சிவதாணு, சாரங்கபாணி, வி.கே.ஆர்., ஆகியோர் அற்புதமான நடிப்பைக் காட்டி சக்கைப்போடு போட்டார்கள் என்று விமர்சகர்கள் குதூகலித்தார்கள்.

இதைப்போல், படத்தின் இரண்டாவது முக்கிய அம்சம், கலை, மற்றும் கலைஞர்களின் மகிமையை நிறுவுவது. கலைஞர்களால் மிதமிஞ்சிய பிரசாரப் பலம் கொண்டிருந்த தி.மு.க.விற்குப் போட்டியாக ஏ.பி.என். போன்ற தமிழரசு கழகக்காரர்கள் கையாண்ட அஸ்திரமாகக்கூட இது இருக்கலாம்.

போலீஸ் குடும்பங்களுக்கென்று ஒரு பிரத்யேக பிரசவ விடுதியும் பள்ளிக்கூடமும் கட்டுவதற்கு நிதி திரட்டும் முயற்சியில், மரகதம் என்ற கலைஞரை  போலீஸ் டி.எஸ்.பியான  மனோகர் நாடுகிறார்.

இந்தக் கலைஞரும் (எம்.என்.ராஜம்)  அவருடைய தாயாரும் (கண்ணாம்பா), சிறந்த லட்சியவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். கலை உயர்ந்தது, கலைஞர்கள் உயர்ந்தவர்கள், அவர்கள் ஒன்றாக இணைந்து தங்கள் உயர்வை நாடவேண்டும், பெண் கலைஞர்கள் மதிக்கப்படவேண்டும் என்று பொருள் தரும் இரண்டு பாடல்கள் படத்தில் அமைக்கப்பட்டிருந்தன.

‘விலைமதிப்பில்லாத அரும்பொருள் கலையே’ என்ற பாடலை, கானடா ராகத்தில் அழகாக அமைத்தார் மகாதேவன். சூலமங்கலம் ராஜலட்சுமி பாடலை   முன்னெடுத்துச் செல்வதும், பி. சுசீலா கம்பீரமாகத்  தொடர்வதுமாக, நேர்த்தியான அமைப்பு கொண்ட பாடலாக இது அமைந்தது.

 இரண்டாவது பாடல் (மருதகாசி/பி.சுசீலா), பெண் கலைஞர்கள் இழிவாகக் கருதப்படும் நிலையை அங்கலாய்க்கிறது.

‘‘நாட்டில் கலைத்தொண்டு ஆற்றிடும் பெண்கள்

கூட்டத்தைத் தவறாக மதிப்பதும் ஏனோ?

போற்றிப்புகழ்ந்திடும் வாயால் எங்களை

தூற்றி எல்லோரும் பழிப்பதும் ஏனோ?’’ என்ற கேள்வியை எழுப்புகிறது பாடல்.

எதிர்நீச்சல் அடிக்கும் சக்தியும், தன் அறிவையும் அனுபவத்தையும் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளும் திறமையும் இருந்தால், ஒரு நடிகையால் மாநிலத்தின் முதல்வராக முடியும் என்பதை தற்கால தமிழ்நாடு நேரடியாகக் கண்டது. எப்படியும், அறுபதுகளில் மகாதேவனின் மெல்லிசைப்பாணி அடையப்போகும் வடிவத்தை இந்தப் பாடல் மீண்டும் சுட்டும் வகையில் அமைந்தது.

பாலசரஸ்வதியின் குரலில் அமைந்த, ‘நல்ல குடும்பம்’ என்ற பாடலை,  ரம்மியமான ராகமாலிகையாக்கித் தந்தார் மகாதேவன். ஆனால், ஜமுனாராணியின் குரலில் ஜில்லென்று மிதந்து வரும், ‘சின்ன மீனைப் போட்டாதான்’ பாடல்தான், படத்தில் ஓரளவு வெற்றி யடைந்தது.

‘‘வெள்ளை சொள்ளை இருந்தாத்தான்

கள்ளத்தனத்தை மறைக்கலாம்

குதர்க்க புத்தி இருந்தாத்தான்

குறுக்கு வழியில் போகலாம்’’ என்று உலகத்தை ஏய்க்கும் வழியை வில்லனுக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல் என்பதை யார் கவனித்தார்கள்?  குற்றமுள்ள பாடலுக்கு இசை நன்று என்பது போல், குற்றங்களை செய்யத்தூண்டும் பாடலுக்கும் இசை நன்றோ?

இந்தக் காலகட்டத்தில், மாடர்ன் தியேட்டர்சில் நாற்பதுகளின் இடைப்பகுதியில் மகாதேவன் அறிந்த ஒரு நடிகர், தான் தயாரிக்கப்போகும் படத்திற்கு மகாதேவன் இசையமைக்கவேண்டும் என்று அவரை நாடி வந்தார்.  

(தொடரும்)