திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கிறிஸ்துமஸ் நல்வாழ்த்து செய்தி

பதிவு செய்த நாள் : 24 டிசம்பர் 2018 18:56

 சென்னை

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி விவரம்:

மகிழ்ச்சி பொங்கிட 25.12.2018 அன்று கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ்  திருநாளை முன்னிட்டு, கிறிஸ்துவ  மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 இயேசு பிரானின்  “ஈகை, இரக்கம்” என்ற ஒப்பற்ற குணங்களைப் பின்பற்றி, கிறிஸ்துவ மக்கள் தம்மிடம் இருப்பதை ஏழை எளியோருடன் பகிர்ந்து, எங்கனும் கருணை ஒளிபரவிட  ஒவ்வொரு வருடமும் ,இயேசு பிரான் பிறந்த இந்நன்னாளை ஒரு மனித நேயத் திருவிழாவாகக் கொண்டாடி வருகிறார்கள். குக்கிராமங்களிலும் கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் கிடைப்பதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் கிறிஸ்துவ மக்களின் நற்பணி வியந்து வெகுவாகப்  பாராட்டத்தக்கது. “உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்” என்ற போதனையின் மறு உருவமாக வாழும் கிறிஸ்துவ மக்களின் சமுதாயப் பணிகளை, குறிப்பாக ஏதுமில்லாதார் போதுமான அளவு பெற்றிராதார் ஆகியோர்க்கு ஆற்றிவரும் அரும்பணிகளை,யாரும் மறந்திட இயலாது.  

கிறிஸ்துவப் பெருமக்களின் நலனுக்காக தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரங்களில் எல்லாம் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தியிருக்கிறார். அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக நிறைவேற்றியிருக்கும் திட்டங்கள் எண்ணிலடங்காதவை. கிறிஸ்துவ மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஒரு “பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை” ஆரம்பித்து அதன் மூலம் தொழில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி பல்வேறு சீர்மிகு திட்டங்களையும் செயல்படுத்தியிருக்கிறார் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

“கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை” ஒட்டி,  கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து, அவர்கள் அனைத்து வளங்களும் பெற்று நலம்நிறைந்த  வாழ்வினைத் தொடர இதய பூர்வமாக வாழ்த்தி மகிழ்கின்றேன்!

இவ்வாறு, மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.