![]() | ![]() |
ஏவி.எம்மிலிருந்து அருட்பெரும்ஜோதி வரை சென்ற ஏ.டி.கே!
ஹாஸ்ய படங்களில் ஒரு சிரஞ்சீவிப் படமாக விளங்குவது, பிரகதி பிக்சர்ஸ் என்று ஏவி.எம்மின் முன்னாள் பேனரில் வந்த ‘சபாபதி’ (1940). தொலைக்காட்சி சேனல்களில் இன்றும் கூட பலரால் விரும்பிப்பார்க்கப்ப டும் படமாக இது திகழ்கிறது.
இந்தப் படத்தின் இயக்கம், ஏ.வி.மெய்யப்பன், ஏ.டி.கிருஷ்ணசாமி பி.ஏ., ஆகியோரால் செய்யப்பட்டதாக ‘சபாபதி’ பட டைட்டில் தெரிவிக்கிறது.
இந்தப் படத்தைக் குறித்து திரு. மெய்யப்ப செட்டியார், ‘எனது வாழ்க்கை அனுபவம்’ என்ற கட்டுரைத்தொடரில் இப்படிக் குறிப்பிடு கிறார் : ‘‘நான் டைரக்ட் செய்த முதல் படம் ‘சபாபதி’, முழுக்க முழுக்க காமெடி பிக்சர். சம்பந்த முதலியாரின் நாடகக்கதையைத் தழுவியது....கல்கி இந்தப் படத்தைப் பாராட்டி இரண்டு பக்கம் விமர்சனம் எழுதியிருந்தார். (படத்தில் நடித்த) சாரங்கபாணியை அவர் தனியாக சந்தித்தபோது, ‘நிஜமாகவே இது மெய்யப்ப செட்டியார் டைரக் ட் செய்த படம்தானா? ரொம்ப பேஷாக இருந்தது’ என்று விசாரித்தா ராம். கல்கி அந்தப் படத்திற்குச் சிறப்பாக விமர்சனம் எழுதினார் என்று நினைக்க நினைக்க இப்போதும் பெருமையாக இருக்கிறது.’’
இது தொடர்பாக மிக முக்கியமாக இருந்திருக்கக்கூடிய ஏ.டி.கிருஷ்ண சாமியின் பங்களிப்பைக் குறித்து அந்தக் கட்டுரையில் ஏ.வி.எம்.செட்டியார் ஒன்றும் குறிப்பிடவில்லை.
படத்தை இயக்குகிற பொறுப்பை ஏ.டி.கே. நன்கு நிர்வகித்ததன் காரணமாகத்தான், பட முதலாளியான செட்டியார், ஏ.டி.கேயைப் படத்தின் டைரக்டராக பட டைட்டிலில் அங்கீகரித்தார். பம்மல் சம்பந்த முதலியாரின் ‘சபாபதி’ மேடைநாடகத்தைப் படமாக எடுக்கலாம் என்று முதலில் ஐடியா கொடுத்தவரே கிருஷ்ணசாமிதான்.
மூன்று காமெடிக் கதைகளை ஒரு படமாக வழங்கிய மெய்யப்ப செட்டியாரின் ‘வாயாடி’, ‘போலி பாஞ்சாலி’, ‘யெஸ் யெஸ்’ ஆகியவறை கிருஷ்ணசாமி இயக்கினார்.
பிரகதி பிக்சர்ஸில் உருவான கன்னட வெற்றிப்படமான ‘ஹரிச்சந்திரா’வும், ஏ.டி. கிருஷ்ணசாமியின் இயக்கம்தான் (உடன் ஆர். நாகேந்திர ராவ்).
![]() | ![]() |
இதே படம், தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு, தமிழில் நேரடியாக வெளிவந்த கண்ணாம்பாவின் ‘ஹரிச்சந்திராவை’ (1944) தோற்கடித்தது. கன்னட வாயசைப்பிற்கு ஏற்ப, நறுக்கென்ற தமிழ் வசனங்களை எழுதியவர், ஏ.டி.கிருஷ்ணசாமி. இதன் வாயிலாக, தமிழ் சினிமா சரித்திரத்தில் முதல் டப்பிங் வசனகர்த்தா என்ற ஸ்தானத்தையும் அவர் பெற்றுவிட்டார்!
மெய்யப்ப செட்டியாரின் அடுத்த மிகப்பெரிய ஹிட் படமான ‘ஸ்ரீவள்ளி’யிலும் (1945, ‘இயக்கம்: ஏ.வி.மெய்யப்பன், ஏ.டி.கிருஷ்ணசாமி’ என்று) இருவர் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன. இயக்கத்தைத் தவிர, ‘ஸ்ரீவள்ளி’யின் வசனங்களையும் ஏ.டி.கே. எழுதினார். அவை மிகச்சிறப்பாக அமைந்து, படத்தின் வெற்றிக்குக் கைகொடுத்தன.
மானைத்தேடி வேடன் வருகிறான். அப்போது...
வள்ளி :-- ‘என்னையா தேடுகிறீர்?’
வேடன் : -- ‘ஆம், உன்னைத்தான்!’
வள்ளி --: ‘இல்லை. எதைத் தேடுகிறீர்?’
வேடன் :-- ‘நான் நாடி வந்தேனே, அதை!’
வள்ளி --: ‘எதை நாடி வந்தீர்?’
வேடன் : -- ‘தேடிப்பார்க்கிறேனே, இதை, இல்லை இல்லை அதை!’
வள்ளி -:- ‘எதைத் தேடிப் பார்க்கிறீர்?’
வேடன் : -- ‘இது என்ன கேள்வி, நான் நாடி வந்தேனே, அதைத் தேடிப் பார்க்கிறேன்’.
வள்ளி --: ‘இது என்ன பதில்? எதைத் தேடுகிறீர் என்றால், நாடி வந்தேனே அதை. எதை நாடி வந்தீர் என்றால், தேடிப்பார்க்கிறேனே அதை. என்ன இது?’
வேடன் : -- ‘பெண்ணே, என் மனம் நிலை தடுமாறி நிற்கிறது’.
வள்ளி --: ‘ஏன்?’
வேடன் :-- ‘நான் மானின் விழிகள்
என மனம் பூரித்தது, நின் விழிகளைக் கண்டுதான்’.
வள்ளி -:- ‘ஓ...மானையா தேடுகிறீர்?’
வேடம் :-- ‘ஆமாம்’.
வள்ளி --: ‘நீர் மானைத் தேடுவது’...
வேடன் :-- ‘மானா நான் தேடுவது?’
வள்ளி -:- ‘மான் என்றீரே?’
வேடன் :-- ‘மான் என்றால் மானா அது? மானிடப்பிறவி. மானிட அறிவு. விழிகள் வார்த்தையாடும். கால்கள் நடனமாடும்’.
வள்ளி : -- ‘ஆகாகா! அபூர்வமான மான். எனக்கு மானைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டால் மற்றதெல்லாம் மறந்துவிடும்.
வேடன் : - ‘ஓகோ!’
வள்ளி --: ‘சரி, இது பெண்கள் தனித்திருக்கும் பிரதேசம். அன்னிய ஆடவர்கள் அதிகமாக வார்த்தையாடக் கூடாது. நீர் சென்று எல்லைக்கு வெளியில் இரும். நான் நீர் தேடி வந்ததைத் தேடி உம்மிடம் சேர்ப்பிக்கிறேன்...’.
வேடன் :--- ‘‘ஆகா...தயவு தாட்சண்யம் இல்லாத ஜாதியில் நீ தப்பிப்பிறந்தவள்....’’
மிதமாகவும், இதமாகவும், உணர்வும் பொருளும் நிரம்பியிருக்கும் வண்ணமும் அற்புதமான வசனங்களை ‘ஸ்ரீவள்ளி’க்கு எழுதினார் ஏ.டி.கிருஷ்ணசாமி. ஆனால் வினோதம் என்னவென்றால், ‘ஸ்ரீவள்ளி’ என்ற சிகரத்தைத் தொட்டுவிட்டு, மெய்யப்ப செட்டியாரிடமிருந்து பிரிந்துவிட்டார்!
வேறு சிலரை உடன் வைத்துக்கொண்டு, ‘நாம் இருவர்’, ‘வேதாள உலகம்’, ‘வாழ்க்கை’ முதலிய படங்களுக்கு ‘இயக்குநர்’ பதவியில் இருந்தார் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். அதன் பிறகு, அவருக்கு மிகவும் தகுந்த தயாரிப்பாளர், ஸ்டூடியோ அதிபர் ஆகிய பிரத்யேக வேலைகளில் முழு கவனம் செலுத்தி உச்சத்தைத் தொட்டார்.
ஏ.டி.கிருஷ்ணசாமியைப் பொறுத்தவரை, 1946லேயே அவர் தன்னுடைய அடுத்த படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார்! அதன் பிறகு, 1971 வரை 25 ஆண்டுகள், அவர் பல படங்களை இயக்கினார். ஆள் பலமோ, பணபலமோ இல்லாத தனி ஆள் என்பதால், அவர் பல சவால்களை சந்தித்தார், தோல்விகளைக் கண்டு துவளாமல் தொடர்ந்து உழைத்தார், நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்குப் பங்களிப்பு செய்தார். வட ஆற்காடு மாவட்டக்காரரான கிருஷ்ண சாமி, 1905ம் வருடம் பிறந்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே, நாடகங்கள் எழுதுவதிலும் நடிப்பதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. பம்மல் சம்பந்த முதலியாரின் அமெச்சூர் நாடகக் குழுவான சுகுண விலாஸ சபாவில் இணைந்து நடிக்கவும் செய்தார்.
ஏ.வி.மெய்யப்ப செட்டி யார் சில பாகஸ்தர்களுடன் சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற கிராமபோன் ரிக்கார்டு நிறுவனம் தொடங்கிய சமயம் அது. அதில் ‘நாடக கேசட்’ என்ற முறையில், பிரபல நாடகங்களின் பாடல்களும் உரையாடல்களும் எட்டு ரிக்கார்டுகள் , பத்து ரிக்கார்டுகள் என்று வெளிவந்தன. இதுபோன்ற நாடகங்களின் பாடல்களையும் வசனங்களையும் எழுதினார் ஏ.டி.கிருஷ்ணசாமி. இந்த வகையில் ஏ.வி.மெய்யப்ப செட்டியாருடனான அவருடைய தொடர்பு, 1934ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. பாகஸ்தர்களுடன் ஏ.வி.எம். எடுத்த இரண்டாவது படமான ‘ரத்னாவளி’யின் தயாரிப்பில் கிருஷ்ண சாமியும் பங்கு கொண்டார்.
பிரகதி பிலிம்ஸ் என்ற பேனரில் ஏவி.மெய்யப்பன் பூனா நகர ஸ்டூடியோவில் ‘நந்தகுமார்’ (1938) என்ற படத்தைத் தயாரித்தார். பாலகிருஷ்ணனாக டி.ஆர்.மகாலிங்கம் அறிமுகமான இந்தப் படத்தில், மகாலிங்கத்திற்கான முதல் பாடல், ‘யுக தர்ம முறையே’. இந்தப் பாடலை எழுதியதன் மூலம், 25 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் முழங்கிய டி.ஆர். மகாலிங்கத்தின் குரலுக்கு முதல் பாடலை வழங்கிய பெருமை ஏ.டி.கே.வுக்குக் கிடைத்தது.
‘நந்தகுமார்’ படத்தில், தேவகியாக நடித்த எஸ்.சரஸ்வதி என்ற நடிகைக்குப் பாடும் குரலாக, அந்நாளில் பம்பாயின் பிரபலமான கர்நாடக சங்கீதப் மும்பையில் படகியாக இருந்த லலிதா வெங்கடராமன் பயன்படுத்தப்பட்டார். அந்த முறையில், ‘தீனதயாபரனே திவ்யனே’ என்ற பாடல் தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடல் என்கிற இடத்தைப் பெற்றது. இந்தப் பாடலையும் எழுதியவர் ஏ.டி.கே.தான்!
இரண்டாம் யுத்த காலகத்தில், 1942ல் ‘‘சென்னை மீது ஜப்பான் குண்டுகள் போடுமோ என்று பயந்து, எல்லோரும் ஊரைவிட்டு ஓடினார்கள். ஆறு மாத காலம் ஒரே ஒருத்தர் இருந்து, பிரகதி ஸ்டூடியோவை பார்த்துக்கொண்டார்’’ என்று ஏ.வி.மெய்யப்பன் எழுதியிருக்கிறார். அந்த நபர் – ஒலிப்பதிவு மேதை வி.சீனிவாச ராகவன். பிரகதியின் விஜயநகர மாளிகை வளாகத்தில் இருந்து, ஸ்டூடியோவை அவர் கண்காணித்து வந்தார். அவருடன் ஏ.டி.கே.வும் இருந்தார் என்று எண்ண இடமிருக்கிறது.
‘ஸ்ரீவள்ளி’யின் வெற்றிக்குப்பிறகு, திரு மெய்யப்பனிடமிருந்து கிருஷ்ணசாமி பிரிந்து சென்ற நிலையில், பிரபல தெலுங்கு இயக்குநர் பி.புல்லையா இயக்கிய, ‘விஜயலட்சுமி’ (1946) படத்திற்கு, கதை, வசனம் எழுதினார்.
பி.ஆர்.பந்துலு உன்னதமாக நடித்த இந்த ‘விஜயலட்சுமி’ திரைப்படம், வித்தியாசமான திரைக்கதை யையும் வசனங்களையும் கொண்டிருந்தது. நவம்பர் 2016ல் வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் போல், இதற்கு முன் 1978லும் 1946லும் நடந்தன. சுதந்திரம் வருவதற்கு முந்தைய ஆண்டில் வந்த பணமதிப்பிழப்பைத் தன்னுடைய கதையின் உச்சக்கட்டத்தில் வைத்து, ஏ.டி.கே. ‘விஜயலட்சுமி’யின் திரைக்கதையை அமைத்திருந்தார். இன்றும் படம் பார்க்கக் கிடைப்பது நமது அதிர்ஷ்டம்தான்!
கோவை சென்டிரல் ஸ்டூடியோ வில் படங்கள் எடுத்துக்கொண்டிருந்த ஜூபிடர் பிக்சர்ஸீக்காக, ‘வித்யாபதி’ (1946) என்ற படத்தை திரைக்கதை, வசனம் எழுதி ஏ.டி.கே. இயக்கி னார். படம் தோல்வி அடைந்தது. கே.ஆர். ராமசாமி நடித்த ‘கங்கணம்’ (1947) படத்திற்குக் கதை அமைத்துக்கொடுத்த கிருஷ்ணசாமி, பானுமதியும் ஹொன்னப்பா பாகவதரும் நடித்த ‘தேவமனோகரி’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படமும் வெற்றி பெறவில்லை.
இது கிருஷ்ணசாமிக்கு சோதனைகள் நிறைந்த ஒரு காலகட்டமாக இருந்திருக்கவேண்டும். ‘பாரிஜாதம்’ என்ற படத்தை அவர் இயக்கத் தொடங்கியிருந்தார். சில காட்சிகளை எடுத்திருந்தார். ஆனால், தயாரிப்பாளர்கள் அவரைத் தூக்கிவிட்டு கே.எஸ். கோபால கிருஷ்ணன் என்பவரை நியமித்தனர். கிருஷ்ணசாமி எடுத்த காட்சிகள் கூட மீண்டும் எடுக்கப்படும் என்ற செய்தி வந்தது. (‘பாரிஜாதம்’ படத்தை இயக்க நியமிக்கப்பட்டவர், நமக்குத் தெரிந்த கே.எஸ்.ஜி. அல்ல. ஜெமினியின் ‘சக்ரதாரி’, ‘பணக்காரி’, ‘நம் குழந்தை’ முதலிய படங்களை இயக்கியவர்).
ஆனால், திறமையுள்ள கிருஷ்ண சாமிக்கு பழைய திரை உலக நண்பர்களும் சினிமா உலகமும் வாய்ப்புகள் அளிக்கத் தவறவில்லை. டி.ஆர். மகாலிங்கம் தன்னுடைய ‘மோகனசுந்தரம்’ படத்திற்கு, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் பொறுப்பை கிருஷ்ணசாமிக்கு அளித்தார். படமும் ஓரளவுக்குப் பலித்தது. இந்தப் படத்தை இன்றளவும் நாம் பார்த்து ரசிக்க முடிகிறது.
ஐம்பதுகளில் பிரபலமாக இருந்த அருணா பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் தொடர்ந்து வசனம் எழுதினார் ஏ.டி.கே. (‘ராஜாம்பாள்’ 1951, ‘குமாஸ்தா’ 1953, ‘தூக்குத் தூக்கி’ 1954). பிறகு, ‘மேனகா’ (1955), ‘சதாரம்’ (1956) ஆகிய படங்களின் வசனமும் ஏ.டி.கே.யின் கைவண்ணத்தில் அமைந்தன.
கல்கியின் ‘பொய்மான் கரடு’ என்ற குறுநாவலை, சில பாகஸ்தர்களுடன் சேர்ந்து ‘பொன்வயல்’ (1954) என்ற பெயரில் ஏ.டி.கே. தயாரித்தார். படத்தை தானே இயக்கினார்.
பிறகு, ‘ஏ.டி.கே. புரொடக் ஷன்ஸ்’ என்ற பெயரிலே, ‘அறிவாளி’ என்ற படத்தை தயாரித்து இயக்கினார் (1963). சிவாஜியும் பானுமதியும் தலைமை வேடங்களில் நடித்த இந்தப் படம் வருவதற்குத் தாமதமானாலும், வந்தபின் ஏமாற்றம் தரவில்லை. சமூகத்திற்குத் தேவையான நல்ல கருத்துக்களும் அருமையான நகைச்சுவையும் (சிவாஜி -பானுமதியுடன், பாலை யா, தங்கவேலு, முத்துலட்சுமி, டி.ஆர்.ராமச்சந்திரன்), நல்ல பாடல்களும் ‘அறிவாளி’யைத் தூக்கிப்பிடித்தன.
சோவின் ‘மனம் ஒரு குரங்கு’ மேடைநாடகத்தைத் திரைக்காக ஏ.டி.கே. இயக்கினார் (1967). படம் நன்றாக அமைந்தது. சோவே கிருஷ்ண சாமி குறித்து சந்தோஷப்பட்டதுண்டு. தன்னுடைய கடைசி படைப்பாக, அருட்பிரகாச வள்ளலாரின் சரிதத்தை, ‘அருட்பெரும்ஜோதி’யாக நமக்கு அளித்தார் கிருஷ்ணசாமி (1971).
இந்தப் பரந்த தமிழ்நாட்டில், ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வந்து போனாலும், ஏ.டி.கிருஷ்ணசாமி திரைக்கதை அமைத்து, எழுதி இயக்கிய ‘அருட்பெரும்ஜோதி’ ஒன்றுதான், ஜீவகாருண்யத்தை வலியுறுத்திய வள்ளலார் என்ற மகானின் கதையை பொதுமக்களுக்கு ஜனராஞ்சகமாகவும் கசடுகள் இல்லாமலும் எடுத்துக்கூறுகிறது. இந்த விஷயம் ஒன்றேகூட, ஏ.டி.கிருஷ்ணசாமி எத்தகையவர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
(தொடரும்)