நாட்டில் அமைதி நிலவ வேண்டும் - ராமதாஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து

பதிவு செய்த நாள் : 24 டிசம்பர் 2018 12:27

சென்னை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கிறிஸ்துவ மக்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில் நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் இன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

மனிதர்களுக்கு அன்பு, கருணை மற்றும் மன்னிப்பை போதித்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று இயேசுபிரான் விரும்பினார். ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் அன்பு காட்டினார். மனிதர்களை மட்டுமின்றி, விலங்குகளையும் நேசித்தார். உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீதும் நீ அன்பு காட்டுவாயாக! என்று அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தவர். ‘‘தந்தையே இவர்களை மன்னியும்... ஏனெனில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே இவர்களுக்குத் தெரியவில்லை’’
என்றார் இயேசுபிரான். அவரது இந்த போதனையை மனதில் கொண்டால் உலகில் அன்பும், ஆனந்தமும் பொங்கும்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் திருநாள் ஆகும். அந்த நாளில் மகிழ்ச்சியும், மற்றவர் நலனுக்கான பிரார்த்தனைகளும்தான் உலகம் முழுவதும் நிறைந்தி ருக்கும். அந்த நாளின் தன்மை ஆண்டின் 365 நாட்களுக்கும் நீடித்திருக்க வேண்டும்; நாட்டில் அமைதி நிலவ வேண்டும்; போட்டி பொறாமைகள் அகல வேண்டும்; ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம் ஆகும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ்  கூறியுள்ளார்.