சபரிமலை அரசியல்

பதிவு செய்த நாள் : 19 டிசம்பர் 2018

இந்தியாவின் தென் பகுதிகளில் சமீபகாலமாக இருந்து வரும் பேச்சு சபரிமலை ஐயப்பன் கோவில் பற்றிதான். அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு எந்த விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை முழுமையாக அறிந்து கொள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம்.  

கேரள மாநிலத்தில் உள்ள மேற்கு ‎மலைத்தொடர்களில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் புண்ணியத் தலமாக சபரிமலை ஐயப்பன் கோவில் விளங்கி வருகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. ‎கடல் மட்டத்தில் இருந்து, 914 மீட்டர் உயரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 5 கோடி  பக்தர்கள் இருமுடி கட்டி ‎சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

வரலாறு

கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார். அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். மகிஷியை வதம் செய்ய சிவபெருமானுக்கும் விஷ்ணுவுக்கு, பிறந்தவர்தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற, சிவனுக்கும் மோகினிக்கும் ஐயப்பன் பிறந்தார். பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்த்து, ஐயப்பன் தன் அவதார நோக்கத்தை நிறைவேற்ற சிவபெருமானும், விஷ்ணுவும் அக்குழந்தையை மரத்தடியிலேயே வைத்துவிட்டுச் சென்றனர்.காட்டிற்கு வேட்டையாட வந்த பந்தள மகாராஜா குழந்தையின் அழுகுரல் கேட்டார். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடினான். இறுதியில் மரத்தடியில் இருந்த தெய்வீக குழந்தையான ஐயப்பனைக் கண்டான். தன் குழந்தையில்லா குறையை தீர்க்கவே இந்த குழந்தை தனக்கு கிடைத்துள்ளது என மகிழ்ந்து அக்குழந்தையை அரண்மனை கொண்டு சென்றான்.

ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் கண்டெடுத்ததால், அக்குழந்தைக்கு மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தனர்.

சில ஆண்டுகளுக்குப் பின் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரத்தால் குழந்தை பிறந்தது என ஆனந்தமடைந்தனர்.

ஆனால் அரசியின் மனதில் நஞ்சை சிலர் கலந்தனர். ஐயப்பன் உங்களுக்கு பிறந்த மகன் அல்ல. ஆனால் அவனையே தலைப்பிள்ளை போல் வளர்க்கிறீர்கள். அதனால் அடுத்த மன்னராக ஆகும் வாய்ப்பு அவனுக்கே உள்ளது. உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறு யாரோ எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சைக் கலந்தனர். இதனால், அரசியும் மனம் மாறினாள்.தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை புலிப்பால் குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள். தாய்க்கு புலிப்பால் கொண்டுவர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுத்தாள். வில்லெடுத்து மகிஷியை வதம் செய்தான் மணிகண்டன். அவன் அவதார மகிமை பூர்த்தி அடைந்தது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலியாக புடை சூழ புலிமேல் ஏறி நாடு திரும்பினான் ஐயப்பன். புலிமேல் வந்த மணிகண்டனின் மகிமையை உணர்ந்த அரசி, தான் செய்த தவறுக்கு வருந்தினாள்.

தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை பார்க்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரிமலையில் 18 படிகளுக்கு மேல் தவக்கோலத்தில் அமர்ந்தார்.

சாபவிமோசனம் பெற்ற மகிஷி ஐயப்பனை மணக்கவேண்டும் என்ற விருப்பத்தினை வெளிப்படுத்தினார். ஆனால், பிரம்மச்சாரியாக இருப்பதால், தன்னால் மணந்துகொள்ள முடியாது என்று ஐயப்பன் அவளிடம் தெரிவித்தார். மணந்து கொள்ள முடியாது என்று மறுத்த ஐயப்பன் சபரிமலையில் மகிஷி இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டார்.

மகிஷி இன்றும் சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்துக்கு வெளியே இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மன் என்ற பெயரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். 

தவக்கோலம்

இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது. ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒருமுறை வந்தபோது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்றார். இறைவன் தனக்கு மரியாதைசெய்ய எழுந்திருக்கக்கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி எறிந்தார். அந்த அங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.

சபரிமலை யாத்திரை

சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ள முதலில் 41 நாட்கள் ‎கொண்ட விரதத்தை பக்தர்கள் மேற்‎கொள்ளவேண்டும். துவக்க நாளன்று ருத்திராட்சம் அல்லது துளசி மாலையை பக்தர்கள் கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். ‎அப்பொழுது முதலே மாமிச உணவு, மதுபானங்கள், புகையிலை, ‎பெண்களுடன் தொடர்பு, அநாகரிகமான பேச்சுக்கள் மற்றும் ‎வார்த்தைகளை தவிர்த்தல், மேலும் தலை முடி மற்றும் ‎முகத்தில் வளரும் மீசை போன்றவைகளை திருத்தாமல் இருக்கவேண்டும்.ஒவ்வொரு நாளும் ‎கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்யவேண்டும்.  மேலும் எளிய கருப்பு அல்லது நீல நிறத்திலான துணிகளை மட்டுமே அணியவேண்டும்.

பயணம் மேற்கொள்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகளுக்குக் காரணமாக பின்பவருவன சொல்லப்படுகின்றன. முற்காலத்தில் "பெரிய பாதை" மட்டுமே இருந்தது. காட்டின் வழியாக மட்டுமே செல்லவேண்டும், விலங்குகள் அதிகம், வெள்ளை நிறம் வெகுதூரம் வரை தெரியும் நிறம் என்பதால் காட்டு விலங்குகளிடமிருந்து தப்ப குறைந்த ஒளி சிதறல் கொண்ட கருப்பு, நீலம் ஆகிய நிறங்கள் ஆகிய துணிகள் பயன்படுத்தினர். முந்தைய காலத்தில் காட்டு வழியாக சென்று பம்பா நதியை அடைய வெகு நாட்கள் ஆகும். எனவே, இறைவனுக்கு சமர்பிக்கும் பொருள்கள் ஒரு புறமும், வழி உணவிற்கான பொருள்கள் மற்றொரு புறமுமாக இருமுடி பை ஏற்றுச்சென்றனர்.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்றும், அன்றைய ‎தினங்களில் மேற்கொண்டது போலவே நம்பிக்கையுடன், ‎எருமேலியில் இருந்து புறப்பட்டு, ‎காட்டு மலைப் பாதைகளில் (சுமார் 45 கிலோ மீட்டர்கள் தூரம் ‎கொண்டது) காலணிகள் அணியாமல், நடந்து செல்வதையே ‎விரும்புகின்றனர்.

இந்தப் பயணத்தின் முதல் பகுதி, ‎எருமேலியில் இருந்து தொடங்கி அழுதா நதி வரை கொண்டு ‎செல்லும். பிறகு அழுதா மலையைத் தாண்டி கரியம் தோடினை ‎அடைய வேண்டும். பின்னர், புனிதமான கரிமலையை ‎ஏறிக் கடக்க வேண்டும். அங்கிருந்து செறியனவட்டம், ‎வலியனவட்டம் ஆகிய இடங்களைக் கடந்து பம்பா ‎நதியை அடைவார்கள்.

‎அதன்பிறகு, ‎சுமார் 4 கிமீ தூரம் கொண்ட ஏற்றத்துடன் கூடிய ‎‎(நீலிமலை) காட்டு மலைப் பாதையில் ஏறி சபரிமலையை அடைய ‎வேண்டும். ஒரு காலத்தில் காட்டுப் பகுதியாக இருந்த ‎இந்த ஒற்றை வழிப்பாதை, தற்பொழுது மேம்படுத்தப்பட்டு, இரு ‎பக்கங்களிலும் கடைகள் மற்றும் மருத்துவ வசதிகளுடன் கூடிய ‎சாலையாக காட்சியளிக்கின்றது.

நீண்ட தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் தரிசன வசதிக்காக, சபரிமலையில் கடந்த 2011 முதல் இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.

சன்னிதானம்

மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறந்திருக்கப்பட்டிருப்பதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள் மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மலையாள மாதத்தின் 5ஆவது நாளன்று நடை சார்த்தப்படும். ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை.

பெண்களுக்கு அனுமதி இல்லை

10 முதல் 50 ‎வயதுக்குட்பட்ட பெண்கள் கோவிலுக்கு இருமுடி கட்டி செல்வதில்லை. அவர்களுக்கு கோவிலுக்குள் செல்ல ‎அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

காட்டுவழி செல்ல பல நாட்கள் ஆகும் என்பதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது வன விலங்குகளினால் ஏதாவது அபாயம் உண்டாகிவிடும் என்ற அச்சத்தில் பூப்படைந்த பெண்கள் இக்கோவிலுக்கு வர தடை விதித்தனர். சுவாமி ஐயப்பனை சார்ந்த ‎வரலாற்றுக் கதைகளில் வீட்டு விலக்குக்குரிய பெண்கள் இங்கு ‎வருவதை தடை செய்துள்ளபடியாலும் இதர சில ‎காரணங்களாலும், பொதுவாக அந்த வயதுக்கு உட்பட்ட பெண்கள் இங்கு வருவது இல்லை.  

இதற்கான மற்றொரு முக்கிய காரணம் சுவாமி ‎ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்பதே.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்கும் குறைவான சிறுமிகளும், 50 வயதிற்கும் அதிகமான பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை இருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல வழக்குகள் ஒன்றாக்கப்பட்டு அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி இந்த வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. தலைமை நீதிபதி தனது தீர்ப்பில்,”நீண்டகாலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. பக்தி என்பது பாலின பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டது. பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்களே. பெண்களை தெய்வமாக வணங்கும் நாட்டில் அவர்களை பாரபட்சமாக  நடத்தக்கூடாது. அவர்களை பலவீனவர்களாக கருதக்கூடாது” என குறிப்பிட்டார்.

தீர்ப்பால் பதற்றம்

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு கடந்த அக்டோபர் 17ஆம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. எனினும், 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்றதால், 10 முதல் 50 வயதுக்கு இடையிலான ஒரு பெண்கூட ஐயப்பன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யவில்லை.

இதுவரை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்களால் நுழைவு வாயிலாக கருதப்படும் நிலக்கல், பம்பையைத் தாண்டி செல்ல முடியவில்லை. இதில் பெண் ஆர்வலர் ரெஹானா பாத்திமா மற்றும் பத்திரிகையாளர் கவிதா ஆகிய இருவர் மட்டும் கோயிலுக்கு மிக அருகில் சென்றனர். ஆனாலும் அவர்களையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்திவிட்டனர்.

இந்நிலையில் கடந்த ஐப்பசி மாதாந்திர பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானம், 5 நாட்களுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி நடை அடைக்கப்பட்டது.

சித்திரை திருநாள் ஆட்ட விசேஷ பூஜைக்காக நவம்பர் 5ஆம் தேதி மாலை 5.30 மணி திறக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது.

இந்நிலையில், கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக நவம்பர் 16 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டது. மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்பட்ட கோவிலில் ஜனவரி 20ஆம் தேதி வரை பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் பெண் சமூக ஆர்வலர்கள் என்று கூறும் பலர் எப்படியாவது சன்னிதானத்திற்கு சென்று ஐயப்பனை தரிசித்துவர வேண்டும் என முயற்சித்து வருகின்றனர். எனினும் அவர்களது முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டு வருகின்றன.

ஜனவரியில் விசாரணை

இதற்கிடையில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி வழங்கும் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 48 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் அந்த சீராய்வு மனுக்கள் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற அமர்வு அறிவித்தது. அதுவரை அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல தடை விதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அரசியல் செய்யும் கட்சிகள்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெண் பக்தர்களுக்கு உரிமை வழங்கியதோ இல்லையோ. அந்த தீர்ப்பு அரசியல் கட்சிகள் நன்றாக பயன்படுத்திக் கொள்கின்றன.

மாநில அரசான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. ஆகையால், அம்மாநில மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

போராடும் இந்துத்வா அமைப்புகளுக்கு ஆதரவாக போர்க்கொடி தூக்கியுள்ளது பாரதிய ஜனதா கட்சி.

பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பல இந்து அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதனால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மத விஷயங்களில் உச்சநீதிமன்றம் தலையிட்டதால், கேரள மாநிலம் சபரிமலை போர்க்களமாக காட்சியளிப்பதாக பல தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.


கட்டுரையாளர்: தினேஷ் குகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation

வாசகர் கருத்துக்கள் :
P.Manimegalai 19-12-2018 06:08 PM
எனக்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலோடு இருந்த விஷயங்கள் பலவற்றை இத்தொகுப்பின் மூலம் தெரிந்து கொண்டேன். மிகவும் நன்று..... மிக நன்று...

Reply Cancel


Your comment will be posted after the moderation


Guna 19-12-2018 09:33 PM
Super Dinesh! Arumaiyana Article God bless you thambi

Reply Cancel


Your comment will be posted after the moderation


Rajkumar 20-12-2018 10:34 PM
மிக அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள்...

Reply Cancel


Your comment will be posted after the moderation


Thilagavathi 20-12-2018 10:37 PM
நல்ல தகவல். முழுமையான தகவல்.

Reply Cancel


Your comment will be posted after the moderation


Suriya bharathi 20-12-2018 10:39 PM
Awesome article Dinesh superb...

Reply Cancel


Your comment will be posted after the moderation


Hari Krishnan 20-12-2018 11:29 PM
Super brother keep rocking

Reply Cancel


Your comment will be posted after the moderation


THANIKACHALAM 21-12-2018 09:37 AM
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி

Reply Cancel


Your comment will be posted after the moderation