தங்கச்சி ரோல் நடிக்கமாட்டேன்! –- அர்த்தனா பினு

19 டிசம்பர் 2018, 02:40 PM

நடிக்கும் போதே படிப்பதுதான் நடிகைகளின் பேஷன். அந்த வகையில் நடித்துக் கொண்டே படிப்பையும் தொடரும் லட்சுமி மேனன், மகிமா நம்பியார் வரிசையில் இடம்பிடித்துள்ளார் அர்த்தனா பினு. ‘செம’, ‘கடைக்குட்டி சிங்கம்’ போன்ற படங்கள் மூலம் கவனம் பெற்றவர் அவரிடம் பேசியதிலிருந்து...

* படிப்பு, நடிப்பு இரண்டையும் எப்படி சமாளிக்கிறீர்கள்?

திரும்பத் திரும்ப ஹோம்லி ரோல் வருவதால் எனக்கு வரும் வாய்ப்புகளை பில்டர் பண்ணி நடிக்கிறேன். அதனாலேதான் படிக்க நேரம் கிடைக்கிறது. டிகிரி முடித்ததும் டிப்ளமோ இன் சைக்காலஜி பண்ணினேன். அடுத்த வருடம் எம்.எஸ்சி சைக்காலஜி பண்ண முடிவு பண்ணியிருக்கிறேன். சினிமா எவ்வளவு முக்கியமோ படிப்பும் முக்கியம்.

* இப்போது  நடித்துக் கொண்டிருக்கும் ‘வெண்ணிலா கபடி குழு -2’ எப்படி வந்திருக்கிறது?

என்னுடைய கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். விக்ராந்த் ஜோடி. இந்த படத்தில் என்னுடைய வேடத்தை எல்லோரும் கனெக்ட் பண்ணி பார்க்க முடியும். இயக்குநர் செல்வசேகரனுக்கு இது முதல் படம். ஆனால் அவர் சினிமா துறையில் பல ஆண்டுகளாக இருப்பதால் மிக நேர்த்தியாக படமாக்கியுள்ளார்.

‘கடைக்குட்டி சிங்கம்’ பண்ணும்போது பாண்டிராஜ் சார் சொன்ன விஷயங்கள் இப்போதும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ‘எந்த வேலையாக இருந்தாலும் மனப்பூர்வமாக, முழு ஈடுபாட்டுடன் பண்ணணும்’னு சொல்வார். அந்த வகையில் நான் நடிக்காமல் நடித்த படம் என்றால் ‘கடைக்குட்டி சிங்கம்’தான்.

* உங்களுக்கு போட்டியாக யார்?

இங்கு ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான பயணம் உண்டு. என்னை யாருடனும் கம்பேர் பண்ணிப் பார்க்கமாட்டேன். அதில் ஒரு யூசும் இல்லை. சினிமாவில் என்னுடைய வளர்ச்சி ஸ்லோ அண்ட் ஸ்டெடியாக இருக்கிறது. மெதுவான வளர்ச்சிதான் எனக்குப் பிடிக்கும். அதுதான் என் தலையிலும் எழுதப்பட்டுள்ளது.

* மறுபடியும் ‘தங்கச்சி’ ரோல் பண்ணுவீர்களா?

கண்டிப்பாக பண்ண மாட்டேன். ‘தொண்டன்’ படத்தில் மட்டுமே சிஸ்டர் ரோல் பண்ணினேன். தெலுங்கு, மலையாளத்தில் நாயகியாகத்தான் அறிமுகமானேன். ‘தொண்டன்’ படம் பண்ண காரணம் அந்த படத்தில் சிஸ்டர் கேரக்டர் பவர்புல்லாக இருந்தது. அந்த படத்தில் எனக்கு பாடல் இருந்தது. அதுமட்டுமல்ல, இயக்குநர் சமுத்திரக்கனி சார் மீதிருந்த மரியாதை. அவருடன் வேலை செய்தபோது என்னை நானே பட்டை தீட்டிக் கொள்ள முடிந்தது.

* உங்கள் அழகு ரகசியம் ஏதாவது...?

அம்மா அன்பா கொடுக்கும் எதையும் மறுக்காமல் சாப்பிடுவேன். உப்பு, சர்க்கரை, எண்ணெய் குறைவாக இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்வேன். மற்ற உணவுகளைவிட கூடுதலாக பழங்களை எடுத்துக் கொள்வேன். வெளி இடங்களுக்குச் செல்லும்போது உணர்ச்சிவசத்தால் ஐஸ்கிரீம் சாப்பிடுவேன். லைட்டா ஜிம் ஒர்க் – அவுட் பண்ணுவேன்.