உடல்வாகு பொறுத்துத்தான் உடை அமையும்! – -பிரியங்கா திம்மேஷ்

11 டிசம்பர் 2018, 05:15 PM

சமீபத்தில் வெளிவந்த ‘உத்தரவு மகாராஜா’ படத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் என்ட்ரியானவர் பிரியங்கா திம்மேஷ். கன்னடம், தமிழ், தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் பிசியாக இருக்கிறார். ஒல்லி தேக நடிகைகளுக்கு மத்தியில் ‘கொழுக் மொழுக்’ நடிகையாக களமிறங்கியிருக்கும் பிரியங்காவிடம் பேசினோம்.

* உங்க சினிமா என்ட்ரி எப்படி...?

கர்நாடக மாநிலம் ஷிமோகாதான் எனது சொந்த ஊர். என்னுடையது சாதாரண நடுத்தரக் குடும்பம். சினிமாவுக்கும் எங்களுக்கும் எந்தவிதத்திலும் சம்பந்தம் கிடையாது. பத்தாம் வகுப்பு முடித்தபிறகு டிப்ளமோ சேர்ந்தேன். எங்க வீட்டிலிருந்து கல்லூரிக்கு 20 கிலோ மீட்டர் தூரம் பஸ்ல டிராவல். அந்த பயணத்தில் நகைக்கடை விளம்பரங்களை உன்னிப்பாக கவனிப்பேன். உடனே தோழிகள் ‘அந்த நகை டிசைன் நல்லா இருக்கா?’ என்று கிண்டல் பண்ணுவார்கள். ‘நகை மீது ஆசை இல்லை. நகையை அணிந்திருக்கும் அந்த மாடலாக வரணும்’ என்று சொல்வேன். அப்படித்தான் எனக்குள் சினிமா துளிர்விட ஆரம்பித்தது.

* கன்னடத்தில் சீரியல் எல்லாம் பண்ணியிருக்கீங்களாமே?

ஒரு முறை காலேஜ் விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு பெங்களூரு சென்றிருந்தேன். அந்த பயணத்தில் ஒரு நண்பர் மூலம் ‘‘சீரியல் வாய்ப்பிருக்கு நடிக்கிறீர்களா?’’ என்றார். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று நானும் ஷூட்டிங் ஸ்பாட் போனேன். அங்கிருக்கிறவர்களும் ‘மீரா ஜாஸ்மின், நயன்தாரா மாதிரி நீங்க அழகாக இருக்கீங்க’ என்று இஷ்டத்துக்கு ஏத்திவிட்டார்கள். வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் நடந்ததைச் சொல்லி அனுமதி கேட்டேன். அம்மாவுக்கு இஷ்டம் இல்லை என்று தெரிந்தது. சீரியல் இயக்குநர் பெண் என்பதால் அவரை பேசச் சொன்னேன். அப்புறம் அம்மா சமாதானம் அடைந்தார்கள். அந்த சீரியலில் என்னுடைய கேரக்டர் பெயர் குலாபி. ஒரு எபிசோடில் நடிக்க போய் 300 எபிசோடுகள் நடித்துக் கொடுத்தேன். அதுதான் நான்  முதலும் கடைசியுமாக பண்ணிய சீரியல்.

* தமிழுக்கு எப்படி வந்தீங்க?

உண்மையை சொல்வதாக இருந்தால் தமிழில் நடிக்கவேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. மாஸ் ஹீரோ படங்களின் ஆடிஷனில் பலமுறை கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் சொல்லும்படியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த சூழ்நிலையில் உதயா சார் ஆபீசிலிருந்து ஆடிஷனுக்கு கூப்பிட்டாங்க. கதைக்குப் பொருத்தமாக இருந்ததால் எனக்கு ஹீரோயின் சான்ஸ் கொடுத்தார். அந்த சமயத்தில் சின்ன படம்,  பெரிய படம், கேரக்டர் வேல்யூ இருக்குமா என்று எதையும் யோசிக்கவில்லை. எனக்கு தமிழில் நடிக்கவேண்டும். ‘உத்தரவு மகாராஜா’ அதற்கான ஸ்பேஸ் ஏற்படுத்திக் கொடுத்தது.

* அடுத்து?

ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கும் படத்தில் வித்தியாசமான கேரக்டர் பண்றேன். கன்னடத்திலே ரவிச்சந்திரன் மகன் மனோரஞ்சன் படம் உட்பட மூன்று படங்கள் ரிலீசுக்கு வெயிட்டிங்.

* கிளாமர்?

நான் சப்பி கேர்ள். உடல்வாகு பொறுத்துத்தான் உடை அமையும். நான் ஒல்லியான தேகம் என்றால் பிகினி அணிந்து நடிக்கவும் தயார். கிளாமர் பண்ணும்போது உடம்பும் கனெக்ட் ஆகணும். குண்டுப் பொண்ணு பிகினி போட்டால் காண சகிக்காது. அதே ஸ்லிம் கேர்ள் ஸ்லிம் சூட் அணிந்தால் ‘வாவ்’ என்று ரசிப்பார்கள். எனக்கு இன்னும் அது போன்ற வாய்ப்பு  வரவில்லை. வரும்போது அதைப் பற்றி யோசிப்பேன்.