காற்று மாசால் இந்தியாவில் 2017ம் ஆண்டு 12.4 லட்சம் பேர் உயிரிழப்பு : ஆய்வறிக்கை தகவல்

பதிவு செய்த நாள் : 06 டிசம்பர் 2018 20:47

புதுடில்லி,

இந்தியாவில் காற்று மாசு காரணமாக 2017ம் ஆண்டில் சுமார் 12.4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் ஏற்படும் 8 மரணங்களில் ஒன்று காற்று மாசு காரணமாக ஏற்படுவதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

லான்செட் பிளானெட்டரி ஹெல்த் ஜர்னல் (Lancet Planetary Health journal) என்ற அறிவியல் பத்திரிகையில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்), பப்ளிக் ஹெல்த் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா (பி.எச்.எஃப்.ஐ) உள்ளிட்ட பல ஆய்வு நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆராய்ச்சிகளின் முடிவாக இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதன் விவரம்:

இந்தியாவில் 77 சதவீத மக்கள் தொகை காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய சுற்றுப்புற காற்று தரத்திற்கான் தரநிலைகள் (National Ambient Air Quality Standards) நிர்ணயித்த அளவை விட அதிகப்படியான காற்று மாசால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இந்தியாவின் வட மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் காற்று மாசால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளால் சுமார் 12.4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

அதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் மட்டும் 2,60,028 பேர் காற்று மாசு காரணமாக மரணமடைந்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிரத்தில் 1,08,038 பேரும் பீகாரில் 96,967 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் மொத்த பேரில் 6.7 லட்சம் பேர் வீட்டிற்கு வெளியே உள்ள காற்று மாசாலும் மீதி 4.8 லட்சம் பேர் வீட்டின் உள்ளே ஏற்படும் காற்று மாசு காரணமாக மரணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் குறிப்பாக டில்லியில் கடந்த ஆண்டு நிலவிய காற்று மாசு அளவான பி.எம்.2.5 உலகிலேயே அதிகப்படியான காற்று மாசாக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் காற்று மாசு காராணமாக 26 சதவீத மக்கள் குறைந்த வயதிலேயே மரணமடையும் சூழ்நிலை நிலவுகிறது. இந்தியாவில் காற்று மாசு குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்திய மக்களின் ஆயுட்காலம் 1.7 வருடங்கள் அதிகமாக இருக்கும் என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் இந்தியாவில் காற்று மாசையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு வழிக்காட்டியாக இருக்கும் என்று ஐ.சி.எம்.ஆர் ஜெனரல் டைரக்டரான பேராசிரியர் பல்ராம் பார்கவா செய்தியாளர்களிடம் கூறினார்.

உலகளவில் 4ம் இடம்

குளோபல் கார்பன் பிராஜக்ட் என்ற மற்றொரு ஆய்வில் உலகளவில் அதிகளவில் கரிமிலவாயுவை (CO2) வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வு முடிவின் படி உலக கரிமிலவாயு வெளியீட்டில் சீனா 27 சதவீத்துடன் முதல் இடத்தில் உள்ளது.  அதற்கு அடுத்தப்படியாக அமெரிக்கா 15 சதவீதம், ஐரோப்பிய யூனியன் 10 சதவீதம் இந்தியா 7 சதவீதமாக உள்ளது.

வரும் 2018ம் ஆண்டு இந்தியாவின் கரிமிலவாயு வெளியேற்றம் 6.3 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் சீனாவில் நிலக்கரி பயன்பாட்டை குறைப்பதும் சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தி பயன்பாட்டை அதிகரிப்பதும் பெரும் சவாலாக இருக்கும்.

இந்தியா தொடர்ந்து சூரிய மின்சக்தி நிலையங்களை அமைத்து வந்தால் 2020ம் ஆண்டுக்குள் கரிமிலவாயு வெளியீட்டை குறைக்க முடியும் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.