பாஜக பேரணி நடத்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

பதிவு செய்த நாள் : 06 டிசம்பர் 2018 20:35

கொல்கத்தா,

    மேற்கு வங்க மாநிலத்தின் கூச்பெஹர் பகுதியில் பேரணி நடத்த பாஜகவுக்கு அனுமதி அளிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

மேற்கு வங்க மாநிலத்தின் 42 மக்களவை தொகுதிகளை கவரும் வகையில் பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் பல்வேறு இடங்களில் மூன்று ரத யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

அதன்படி டிசம்பர் 7ம் தேதி கூச்பெஹர் என்ற இடத்திலும் டிசம்பர் 9ம் தேதி தெற்கு 24 பார்கனாஸ் மாவட்டத்தில் உள்ள காகதீபப் பகுதியிலும் 14ம் தேதி பிர்பும் மாவட்டத்தில் உள தாராபித் கோவிலில் இருந்தும் பேரணி நடத்தப்படும் என பாஜக அறிவித்தது.

இந்த பேரணிகளை நடத்த மேற்கு வங்க அரசிடம் பாஜக அனுமதி கோரியது. ஆனால் மேற்கு வங்க அரசு அதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. பாஜகவினரின் இந்த பேரணியால் மத கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டதாக மேற்கு வங்க அரசு தெரிவித்தது.

அதை தொடர்ந்து பேரணிக்கு அனுமதி வழங்க கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி டபாபிரதா சக்ரபர்தி முன்னிலையில் இன்று நடைபெற்றது.

விசாரணையில் மேற்கு வங்க அரசின் சார்பாக ஆஜரான அட்வகேட் ஜெனரல் கிஷோர் தத்தா ‘‘பாஜக பேரணி நடக்கப்போகும் கூச்பெஹர் பகுதியில் இதற்கு முன்பு பலமுறை மத கலவரம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் பல பிரிவினைவாதிகள் நடமாடுவதாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன. அதன் காரணமாகவே கூச்பெஹர் காவல் கண்காணிப்பாளர் பாஜகவுக்கு பேரணி நடத்த அனுமதி மறுத்தார்’’ என்று கிஷோர் தத்தா தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த பாஜக தரப்பு வழக்கறிஞர் அனிந்தியா மித்ரா அனைத்து இடங்களிலும் பேரணி அமைதியாக நடத்தப்படும் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஒருவேளை பேரணியின் போது பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள் ? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் கூறிய அனிந்தியா மித்ரா பேரணியை அமைதியான முறையில் நடப்பதை பாஜக உறுதி செய்யும். ஆனால் அதேசமயம் சட்ட ஒழுங்கு சீர்குலையாமல் தடுப்பது மாநில அரசின் கடமை என கூறினார்.

இந்த பேரணிக்கு அக்டோபர் மாதமே பாஜக அனுமதி கோரியது. ஆனால் தற்போது கடைசி நேரத்தில் மாநில அரசு அனுமதி மறுப்பதாக அனிந்தியா மித்ரா நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டபாபிரதா சக்ரபர்தி தற்போதுள்ள சூழ்நிலையில் கூச்பெஹரில் பாஜக பேரணி நடத்த அனுமதி அளிக்க முடியாது என்று அறிவித்தார்.

இறுதியில் இந்த வழக்கு விசாரணை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

டிவிஷன் பெஞ்சிடம் முறையீடு

பேரணி நடத்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்ததை தொடர்ந்து உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சிடம் சென்று அனுமதி பெற பாஜக முடிவு செய்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொது செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா  ‘‘எங்களுக்கு நீதித்துறை மீது முழு மரியாதை உள்ளது. எனவே ரத யாத்திரைக்கு அனுமதி பெற கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சிடம் மனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளோம்’’ என கூறினார்.