பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு வேண்டும்: அரசியல் கட்சிகளை சந்திக்க பிஜு ஜனதா தளம் முடிவு

பதிவு செய்த நாள் : 06 டிசம்பர் 2018 20:11

புவனேஷ்வர்

பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாமல் உள்ள நிலையில், அதற்கு ஆதரவு கோரி 22 அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கவுள்ளதாக பிஜு ஜனதா தள கட்சி முடிவு செய்துள்ளது.

147 உறுப்பினர்களை கொண்ட ஒடிசா மாநில சட்டசபையில் தற்போது 12 பெண் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். ஆண் - பெண்களுக்கு இடையிலான இந்த விகிதாச்சாரத்தை ஓரளவுக்கு சீரமைக்க மாநில முதல்வரும் பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக் முடிவு செய்தார்.

இதைதொடர்ந்து, கடந்த நவம்பர் 20ஆம் தேதி எம்.எல்.ஏ, எம்.பி பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் மசோதா ஒன்றை அவர் சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா எதிர்ப்பு ஏதுமின்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள கட்சியினர், 22 அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசவுள்ளனர். பாராளுமன்றத்தில் இந்த மசோதா இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளதால், அதற்கு ஆதரவு கோரவுள்ளது. 7 தேசிய கட்சிகள் மற்றும் 15 பிராந்திய கட்சித் தலைவர்களை அக்குழு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசவிருக்கும் பிஜு ஜனதா தள கட்சியினரின் பெயர்களில் பட்நாயக்கின் பெயர் இடம்பெறவில்லை. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி நேற்று பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் நிறைவேற்றப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.