சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவின் கட்டாய விடுப்புக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

பதிவு செய்த நாள் : 06 டிசம்பர் 2018 20:06

புதுடில்லி,

   சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா தன்னை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் ஆஸ்தானா மீது ஊழல் புகார்கள் எழுந்தன. அது தொடர்பாக இருவர் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வந்தனர்.
மோதல் அதிகரித்ததை தொடர்ந்து இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. மேலும் அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தும்படி மத்திய கணகாணிப்பு ஆணையத்திற்கு (சி.வி.சி) மத்திய அரசு உத்தரவிட்டது.

சிபிஐ அதிகாரிகளை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியதை எதிர்த்து எதிர்கட்சிகள் கடுமையாக சாடின. இதற்கிடையில் தனக்கு அளிக்கப்பட்ட கட்டாய விடுப்பை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அலோக் வர்மா தொடர்ந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று நடைபெற்றது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடந்தது.

அப்போது தங்கள் கருத்துகளை கூறிய நீதிபதிகள்  ‘‘மத்திய அரசின் நடவடிக்கை சிபிஐ நிறுவனத்தின் நலனை பாதுகாப்பதாக இருக்க வேண்டியது அவசியம். சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் ஆஸ்தானா இடையே ஏற்பட்ட மோதல் ஓர் இரவில் துவங்கியது அல்ல’’

‘‘இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்வு குழுவை ஆலோசிக்காமல் மத்திய அரசு அவர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்க வேண்டிய அவசியம் என்ன? சிபிஐ இயக்குனர்களின் அதிகாரத்தை பறிக்கும் முன் தேர்வு குழுவிடம் ஆலோசனை கேட்பதில் மத்திய அரசுக்கு என்ன கஷ்டம் வந்துவிட்டது? மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் சரியான பாதையில் இருக்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் சிபிஐ இயக்குனர்கள் இடையேயான இந்த மோதல் குறித்து மத்திய கணகாணிப்பு ஆணையம் (சிவிசி) விசாரணை நடத்துவதற்கான முகாந்திரம் என்ன ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் வழக்கறிஞரான சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா ‘‘ சிபிஐ உயர் அதிகாரிகளான இருவரும் வழக்குகளை விசாரிக்காமல் ஒருவரை ஒருவர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழ்நிலையில் இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டியது மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் கடமை’’

‘‘இதை மீறி செயல்பட்டால் குடியரசு தலைவருக்கும் உச்சநீதிமன்றத்திற்கும் மத்திய கண்காணிப்பு ஆணையம் பதில் சொல்ல நேரிடும். மேலும் சிபிஐ இயக்குனர்கள் மீது விசாரணை நடத்தும்படி மத்திய அரசு உத்தரவிட்டது’’  என துஷர் மேத்தா கூறினார்.   

வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பினரின் வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் இறுதியில் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

விசாரணையின் போது சிபிஐ அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் மீது சிறப்பு புலன்விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அரசு சாரா தொண்டு நிறுவனமான காமன் காஸ் (Common Cause) தாக்கல் செய்த மனுவையும் நீதிபதிகள் பரிசீலித்தனர்.