இந்தோனேசியாவில் கிளர்ச்சிப்படையினர் தாக்குதல் நடத்திய இடத்தில் 16 தொழிலாளர்களின் உடல்கள் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள் : 06 டிசம்பர் 2018 19:41

வாமெனா,

இந்தோனேசியாவில் பப்புவா மாகாணத்தில் கிளர்ச்சிப்படையினர் தாக்குதல் நடத்திய பகுதியில் இருந்து 16 தொழிலாளர்களின் உடல்களைப் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். 

”கண்டெடுக்கப்பட்ட உடல்கள் தொழிலாளர்களுடையது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மலைப் பிரதேச மாவட்டமான டுகாவில் இருந்து உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் திமிகா நகருக்கு கொண்டு செல்லப்பட உள்ளது” என்று உள்ளூர் ராணுவ அதிகாரி பின்சார் பன்ஜைதன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இவர்கள் எப்படி கொல்லப்பட்டனர், இவர்களை கொன்றது யார் என்பது குறித்த எந்த தகவல்களையும் ராணுவத்தினர் வெளியிடவில்லை.

முன்னதாக வெளியான தகவல்கள் மூலம் அவர்கள் கழுத்து அறுக்கப்பட்டோ அல்லது சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

ஆனால் ஊடகங்களில் 24 முதல் 31 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

நலிவடைந்த பகுதிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்கும் ஒப்பந்த பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்களா என்பது இன்னும் தெரியவில்லை.

ஒப்பந்ததாரரின் ஊழியர்கள் 7 பேர் உள்பட 15 பேர் தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டு வேறு இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தாக்குதல் பகுதியை கட்டுக்குள் கொண்டு வர அனுப்பப்பட்ட காவலர்கள், ராணுவத்தினர் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்தி துப்பாக்கி சூட்டில் கடந்த திங்கள்கிழமை ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.

சனிக்கிழமை தொழிலாளர்கள் முகாமிற்குள் நுழைந்த 50க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் அவர்களின் கைகளை பின்புறமாக கட்டி அனுப்பியதாக உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளர் ஒருவர் கூறினார்.

மறுநாள் தொழிலாளர்களில் ஒரு பகுதியினரை அவர்கள் சுட்டுக் கொன்றனர். மேலும் 6 பேரை கழுத்தறுத்து கொலை செய்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேசமயம் பப்புவா தேசிய விடுதலை ராணுவத்தின் முகநூல் பக்கத்தில்,  பிராந்திய தளபதி எகிஅனுஸ் கோகயா உத்தரவின் பேரில், 24 தொழிலாளர்களை கொன்றதாக பதிவிடப்படுள்ளது.