வர்த்தக போரால் உலக நாடுகளின் பொருளாதாரம் சீர்குலையும் : உலக வர்த்தக நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை

பதிவு செய்த நாள் : 06 டிசம்பர் 2018 18:17

வாஷிங்டன்,

உலள அளவில் நடக்கும் வர்த்தக போரின் முடிவில் உலக நாடுகளின் பொருளாதாரம் சீர்குலையும் என்று உலக வர்த்தக நிறுவனத்தின் தலைவர் ராபர்டோ அசிவெடோ எச்சரித்தார்.

தேசிய வெளிநாட்டு வர்த்தக கவுன்சில் முன் நேற்று உலக வர்த்தக நிறுவனத்தின் தலைவர் ராபர்டோ அசிவெடோ உரையாற்றினார்.

அப்போது கடந்த வாரம் அர்ஜெண்டினாவின் பியனோஸ் ஏரிஸ் நகரில் கூடிய ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் நவீன காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு உலக வர்த்தக நிறுவனத்தை மறுசீரமைக்க முடிவு செய்தது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார். ராபர்டோ அசெவெடோ மேலும் பேசுகையில் :

உலக வர்த்தக நிறுவனத்தை மறுசீரமைப்பதன் மூலம் அதன் அமைப்பு மேம்படுத்தப்படும். இன்றைய காலக்கட்டத்தில் வர்த்தகத்தை ஒருவருக்கு மட்டும் லாபம் ஈட்டும் விஷயமாக பார்க்க கூடாது.

அமெரிக்கா தன் வர்த்தக பற்றாக்குறையை தீர்க்க சீனா உள்ளிட்ட நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்து வருகிறது. இந்த நடவடிக்கையால் யாரும் பலனடைய போவதில்லை.

இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் நடந்த ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக போருக்கு தீர்வு காணும் வகையில் உடன்பாடு ஏற்பட்டது வரவேற்கத்தக்கது.

ஏனென்றால் உலக அளவில் ஏற்படும் வர்த்தக போர் உலக நாடுகளின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை சீர்குலைக்கும். இதில் எந்த நாடும் தப்ப முடியாது என்று ராபர்டோ அசிவெடோ எச்சரித்தார்.

சமீபத்தில் சர்வதேச பன்னாட்டு நிதியமும் இதே எச்சரிக்கையை அளித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய ராபர்டோ உலக வர்த்தக நிறுவனத்தின் சர்ச்சைகள் தீர்க்கும் நடுவர் அமைப்பின் செயல்பாடுகளுக்கு அதிபர் டிரம்ப் தடை விதித்ததை ராபர்டோ அசிவெடோ கடுமையாக கண்டித்தார். இது உலக வர்த்தக நிறுவனத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் என ராபர்டோ எச்சரித்தார்.

உலக அளவில் வேலை வாய்ப்புகள் பறிபோவதற்கு வர்த்தக போர் தான் காரணம் என்று சிலர் கூறுவதையும் ராபர்டோ மறுத்தார்.

வர்த்தகம் என்பது வளர்ச்சி, உற்பத்தி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இயந்திரம் போன்றது. இன்று வேலை வாய்ப்புகள் குறைவதற்கு நவீன தொழில்நுட்பங்கள் தான் காரணமே தவிர வர்த்தகம் அல்ல என்று ராபர்டோ கூறினார்.