சாலையில் உள்ள குழிகளால் ஏற்படும் விபத்துகளில் 14,000க்கும் மேற்பட்டோர் மரணம் : உச்சநீதிமன்றம் கண்டனம்

பதிவு செய்த நாள் : 06 டிசம்பர் 2018 18:15

புதுடில்லி,

இந்தியா முழுவதும் சாலையில் உள்ள குழிகளால் ஏற்படும் விபத்துகளில் சிக்கி கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 14,926 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என உச்சநீதிமன்றம் இன்று கடும் கண்டனம் தெரிவித்தது.

நாடு முழுவதும் பராமரிக்கப்படாத சாலைகளில் உள்ள குழிகளால் ஏற்படும் விபத்துகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருவது குறித்து கடந்த ஜூலை 20ம் தேதி உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்தது.
அதை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்யும்படி உச்சநீதிமன்றத்தின் சாலை பாதுகாப்பு கமிட்டிக்கு உத்தரவிடப்பட்டது.
அதை தொடர்ந்து முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.எஸ் ராதாகிருஷ்ணன் தலைமையிலான கமிட்டி இந்த விவகாரம்

குறித்து ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு முடிவில் தன் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்பித்தது.

அந்த ஆய்வறிக்கை தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் மதன் பி லோகுர் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது.

அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள் ‘‘சாலையில் உள்ள குழிகளால் ஏற்படும் விபத்துகளில் கடந்த 2013 முதல் 2017ம் ஆண்டு வரை 14,972 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாத தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்பை விட இது அதிகம். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’’ என தெரிவித்தனர்.

‘‘இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும். சாலையில் உள்ள குழிகளால் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

‘‘இந்த ஆய்வறிக்கை மூலம் சாலையை பராமரிக்க வேண்டிய அதிகாரிகள் பொறுப்பின்றி மெத்தனமாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது’’ என நீதிபதிகள் சாடினர்.

இந்த விவகாரத்தை மேலும் தீவிரமாக பரிசீலனை செய்து அரசுக்கு உரிய பரிந்துரைகள் வழங்கும்படி  உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்பு கமிட்டிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். கமிட்டி தன் அறிக்கையை இரண்டு வாரங்களில் சமர்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.