மேகதாது அணை விவகாரம்: சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது

பதிவு செய்த நாள் : 06 டிசம்பர் 2018 16:25

சென்னை

 மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய நீவளக்குழுமம் தந்த அனுமதியை மத்திய நீராதார அமைச்சகம் ரத்துச்செய்ய வேண்டும் என்று கோரியும்  இன்று - வியாழக்கிழமை மாலை நடந்த தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு  நடைபெற்றது. இதில் பங்கு கொள்ள முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக, திமுக, காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலகத்துக்கு மாலை 4 மணிக்கு வந்தனர்.

மேகதாது அணை தொடரபான தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்மொழிந்து பேசினார், பின்னர் காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் சட்டமன்றக்கட்சித் தலைவர் ராமசாமி, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோரும் மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்துப் பேசினார்கள்.

சிறப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சியினர் தெரிவித்த கருத்துகளுக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துப் பேசினார்.

அதன் பின்னர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியதாக குரல் ஆதரவு மூலம் உறுதி செய்யப்பட்டது.

அவைத்தலைவர் தனபால் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியதாக அறிவித்தார்

முதல்வர் பழனிசாமி வாசித்த, ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம் சுருக்கம். 

தீர்மானம்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, இம்மாமன்றத்தில் 5.12.2014, 27.3.2015 ஆகிய நாட்களில் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டக்கூடாது என ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கருத்தில் கொள்ளாமலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு கீழ்படுகை மாநிலங்களின் முன்அனுமதி பெறாமல், கர்நாடக அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்பதையும் மீறி, தற்பொழுது கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை துவக்க உள்ளதற்கும், மேகதாதுவில் புதியதாக அணை  கட்ட  விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய நீர்வளக் குழுமம் 22.11.2018 அன்று அனுமதி வழங்கியதற்கும்  இம்மாமன்றம்  கடும் கண்டனத்தையும்,  எதிர்ப்பையும்  தெரிவித்துக் கொள்கிறது. 

 மத்திய நீர்வளக் குழுமம்  வழங்கிய அனுமதியை   திரும்பப்பெற அக்குழுமத்திற்கு மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும்  இம்மாமன்றம்  வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில், கர்நாடக அரசோ அல்லது அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களோ, கர்நாடகாவில் உள்ள காவேரி படுகையில், மேகதாது அல்லது வேறு எந்தவொரு இடத்திலும் தமிழ்நாட்டின் இசைவின்றி எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என இம்மாமன்றம் கேட்டுக் கொள்கிறது.

துணை முதல்வர் ஓபிஎஸ் பேச்சு

மேகதாது அணை தொடர்பாக இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கர்நாடக அரசு சட்டத்துக்கு புறம்பாக அணை கட்டுவது தவறு என்பதை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்குகள்  நிலுவையில் உள்ளன. காவிரிப்படுக்கையில் எந்த அணையும் கட்டக்கூடாது என்பது தான் எங்கள் வாதம். தற்போது மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளோம் என தீர்மானத்தின் மீது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

எதிர்க்கட்சி தலைவர் பேச்சு

மேகதாது அணை குறித்து பேச சட்டப்பேரவையை கூட்டியதற்கு நன்றி. தமிழக மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயலின் வடு ஆறுவதற்கு முன்பே மேகதாது அணை கட்ட அனுமதி அளித்தது வருத்தம் அளிக்கிறது.

மேகதாது அணை கட்டுவது குறித்து தமிழக அரசு முன்பே உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றிருக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 பேர் கொண்ட குழுவில், மாநிலத்தின் சார்பில் உறுப்பினர் யாரும் இல்லை. இன்று வரை நிரந்தர உறுப்பினர் நியமிக்கப்படவில்லை.

முழுநேர தலைவரை நியமிக்காமல் ஆணையத்தை கிடப்பில்  போட்டுள்ளதன் உள்நோக்கம் என்ன?  காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. மாநில அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது. காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்துக்கு வரும் நீரை குறைக்கும் வகையில் கர்நாடக அரசு அணை கட்டுகிறது.

தமிழகம் முழுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. எனவே இதை மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமாக நிறைவேற்றி இருக்க வேண்டும். இருப்பினும் மக்களின் நலனுக்காக சட்டப்பேரவையில் இன்று முன்மொழியப்பட்ட தீர்மானத்தை முழுமையாக ஆதரிக்கிறேன் என தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் கூறினார்.

தமிழக எம்.எல்.ஏ.க்களை அழைத்துச் சென்று பிரதமரை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும் என்றும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.

முன்னதாக, கஜா புயல் குறித்து பேச மு.க. ஸ்டாலின் அனுமதிக்கு கேட்டதற்கு பேரவைத் தலைவர் தனபால் மறுத்துவிட்டார்.

தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியதாக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து சட்டப்பேரவை கலைந்தது.

ஸ்டாலின் பேட்டி

சட்டப் பேரவையில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,

சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டத் தீர்மானம் மத்திய அரசைக் கண்டிக்கும் தீர்மானமாகவும் அமைய வேண்டும் என்பது எங்கள் ஆசை. ஆனால் மக்கள் நலன் கருதி தீர்மானத்தை அப்படியே ஆதரித்தோம் எனக் கூறினார்.


மேகதாது அணை குறித்து  சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகல் அடங்கிய செய்திக் குறிப்பு கீழே தரப்பட்டுள்ளது.

பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழக சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இணைக்கப்பட்ட கடிதம் உடனடியாக இன்று மாலையே பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்பட்டது.

கர்நாடகா உறுதி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வியாழன் அன்று அதே நேரத்தில் கர்நாடகத்திலும் சுறுசுறுப்பான பணிகளை கர்நாடக அரசு மேற்கொண்டது.

நாளை முதல் ஆய்வு

நாளை முதல் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆய்வு பணிகள் துவங்கும் என கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் சிவக்குமார் இன்று மாலை தெரிவித்தார்.

பெங்களூரில் அரசு கூட்டியிருந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அமைச்சர் சிவக்குமார் இந்த கருத்தை வெளியிட்டார்.

மேகதாது அணை அமைக்கும் திட்டத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை. மேகதாது அணை கட்டுவது என்ற முடிவிலும் மாற்றம் எதுவும் இல்லை என்று சிவக்குமார் உறுதியாகக் கூறினார்.