அம்பேத்கரின் 62 ஆவது நினைவு தினம்: குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை

பதிவு செய்த நாள் : 06 டிசம்பர் 2018 12:08

புதுடில்லி,    

அம்பேத்கரின் 62ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கைய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  ஆகியோர் இன்று மரியாதை செலுத்தினர்.

பாபா சாகேப் என்று அழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் கடந்த 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்தார். இவர், இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதல் சட்ட அமைச்சராக பதவி வகித்துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென, பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழிக்கப் போராடினார். இந்திய அரசியலமைப்பு சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் அம்பேத்கர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 1948 ஆம் ஆண்டு முதல் நீரழிவு நோயால் அம்பேத்கர் பாதிக்கப்பட்டிருந்தார். பின்னர், இவரின் உடல்நலம், மோசமான அரசியல் நிகழ்வுகளால் மேலும் பாதிக்கப்பட்டது. புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு கடந்த 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி டில்லியில் உள்ள அவரது வீட்டில் இயற்கை எய்தினார்.

இந்நிலையில், இன்று அம்பேத்கரின் 61 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சமூக வலைதளமான டுவிட்டரில் ஏராளமானோர், அவரின் கொள்கை, கருத்துக்கள் பகிர்ந்து தங்கள் மரியாதையை செலுத்திவருகின்றனர்.

அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கைய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் டில்லி பாராளுமன்றத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தவர்சந்த் கெஹ்லாட், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர்.

உத்தரபிரதேச பீம்சேனா தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவண் இன்று பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். 2019 தேர்தலுக்குப் பின் பகுஜன் ஒருவர் நாட்டின் பிரதமர் ஆவார் என சந்திரசேகர் கூறினார், நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனக்கூறிய சந்திரசேகர் எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளரை ஆதரிப்போம் என்றார்.